இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/11/2013

இணையம் ஒன்று ஊடக தர்மத்தை மீரியதாம்.


(இனாமுல்லாஹ்-

கல்கிஸ்ஸ)

(இந்த செய்திக்கும் எமக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை இந்த செய்திக்கு முற்று முழுவதாக பொறுப்பு செய்தி அனுப்பியவரே-
சம்மாந்துறை வெப்)
ஊடகங்களுக்கு இடையில் போட்டி இருக்கத்தான் வேண்டும், அதற்காக செய்திகளை தாமாக செயற்கையாக உருவாக்கி அதன் மூலம் பரபரப்பு மற்றும் புகழ் தேட நினைப்பது மோசமான ஒரு செயலாகும். அமெரிக்க ஊடக ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட ரூபர்ட் முர்டொக் என்பவர் செய்திகளை செயற்கையாக உருவாக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு உலக அரங்கில் கேவலப் பட்டுப் போனதும், அவருக்கு சொந்தமான "நியூஸ் வீக்" வாராந்த சஞ்சிகை  பதிப்பகம் இழுத்து மூடப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

அஸாத் சாலி அவர்கள் கைது செய்யப் பட்டது, அது தொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன. வழமை போலவே இணைய ஊடகங்களுக்கு மத்தியில் செய்திகள், நிகழ்வுகளை விரைந்து வெளியிடுவதில் உள்ள போட்டி இதிலும் காணப் பட்டது. நேர்மையான போட்டி, எப்பொழுதும் ஆரோக்கியமானதாகவே இருக்கும்.

அஸாத் சாலி அவர்களின் மகள் அமீனா சாலி, குடும்பத்தவர்கள் சகிதம் கங்காராம விகாரையில் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட விவகாரம் முஸ்லிம்கள் மத்தியில் ர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் என்பன இணைய ஊடகங்களிலும், Facebook இலும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் "விமர்சனங்கள் குறித்து அஸாத் சாலி குடும்பம் பதில் வழங்கும்..!" என்ற ஒரு அறிவிப்பு, அஸாத் சாலியின் குடும்பத்தவர்கள் சார்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் மட்டும், மே 08 ஆம் திகதி புதன்கிழமை வெளியாகியது.  இந்த அறிவித்தல் வேறு எந்த ஊடகங்களிலும் காணப் படவில்லை.

அதனைத் தொடர்ந்து, மே 09 ஆம் திகதி வியாழக்கிழமை, அஸாத் சாலி குடும்பம் சார்பில், அமீனா அஸாத் சாலியின் பெயரில் தமிழ் மொழி மூலமான அறிக்கை ஒன்று ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் "நாங்கள் காபிர்களாகி விட்டோமா...? ஆமீனா ஆஸாத் சாலி" என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.

குறித்த அறிக்கை, தமிழ் மொழியில் மாத்திரம், அதுவும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் மட்டுமே வெளியாகி இருந்தது. பொதுவாக இவ்வாறான பொது அறிக்கைகள் அனைத்து ஊடகங்களுக்கும் வழங்கப்படும் நடை முறை இருந்தும், இந்த குறிப்பிட்ட அறிக்கை மட்டும் ஜப்னா முஸ்லிம் தவிர்ந்த வேறு எந்த ஊடகத்திலுமே வெளிவரவில்லை.

ஒரு சில இணைய ஊடகங்கள், ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் இருந்து மேற்படி அறிக்கைய பிரதி  பண்ணி, ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தின் பெயரைக் குறிப்பிட்டு வெளியிட்டு இருந்தன.

அஸாத் சாலியை அறிந்தவன், முன்னர் அவரை ஆதரித்தவன் என்ற வகையில், மேற்படி அறிக்கையில் இருந்த பல விடயங்கள் தொடர்பிலும், மேலும் உதிரியாக சில விடயங்கள் தொடர்பிலும், அமீனா சாலிக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதி, ஜப்னா முஸ்லிம் உட்பட, நானறிந்த குறிப்பிட்ட சில முக்கிய முஸ்லிம் ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தேன்.

ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் மட்டும் வெளியான மேற்படி அறிக்கயை மேற்கோள் காட்டி எனது பகிரங்க மடலை வரைந்து இருந்த பொழுதும், ஜப்னா முஸ்லிம் எனது மடலை இதுவரை வெளியிடவில்லை. எனினும் ஏனைய ஊடகங்களில் பெரும்பாலானவை வெளியிட்டு உள்ளன. 

நான் அறிந்த வகையில், அஸாத் சாலி குடும்பத்தில், அமீனா சாலி அவர்கள் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்ற ஒருவராகவும், ஏனையவர்கள் ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர்களாகவுமே உள்ளனர். 

இதன் காரணமாகவே, எனது மடலில் அமீனா சாலியை நோக்கி "குறித்த விளக்கம் உங்களால் சுயமாக எழுதப்பட்டதா என்ற கேள்வி, அதன் தமிழ் மொழி நடையை நோக்குமிடத்து எழுகின்றது." என்று குறிப்பிட்டேன்.


(அமீனா சாலிக்கான எனது பகிரங்க மடலை வெளியிட்ட ஊடகங்களில் கருத்து பதிந்த சில வாசகர்கள், ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில்அமீனா சாலியின் பெயரில் வெளியான "நாங்கள் காபிர்களாகி விட்டோமா...? ஆமீனா ஆஸாத் சாலிஎன்ற றிக்கையை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டு, எனது கடிதத்தை மட்டும் வெளியிட்டு இருப்பதாக, குறித்த ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தி இருந்தனர்.)

இதனைத் தொடர்ந்து இது குறித்து சற்று ஆராய வேண்டும் என்று முயற்சியில் இறங்கினேன். 

அஸாத் சாலியின் குடும்பம் சார்பில் விளக்கமளிக்கும் அறிவிப்பு, அமீனா சாலியின் பெயரிலான விளக்க அறிக்கை ஆகியன ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் மட்டுமே வெளியாகி இருந்தமை, அந்த அறிக்கையில் பயன்படுத்தப் பட்டிருந்த தமிழ் மொழிநடை, அடுத்தவரை குறை சொல்ல வார்த்தைகளை சூட்சுமமாக பயன்படுத்தியிருந்த வஞ்சக வரிநடை போன்றவை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், நான் ஏற்கனவே நன்கு அறிந்த, தற்பொழுதும் அஸாத் சாலியுடன் நெருக்கமாக இருக்கும் சிலரை தொடர்பு கொண்டு இதன் பின்னணியை அறிந்து கொண்டேன்.

தங்களது தவறான செயல்பாடுகள் குறித்து சமூகத்தில் காணப்படும் விமர்சனங்கள் தொடர்பில் அறிந்திருந்தாலும், அவை தொடர்பில் அறிக்கை எதனையும் வெளியிடும் எந்த நோக்கமும் அமீனா சாலி உட்பட குடும்பத்தவர்கள் யாருக்கும் இருந்திருக்கவில்லை.

எனினும், புதன்கிழமை ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் இருந்து தொடர்புகொண்டு, இது தொடர்பில் நடந்த விடயங்களைப் பேசிவிட்டு, அஸாத் சாலி குடும்பம் சார்பில் தாங்களே ஒரு அறிக்கையை தயாரிப்பதாக மட்டும் தெரிவித்து உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஆசாத் சாலி குடும்பத்தின் பெயரில் ஒரு அறிவிப்பை அவர்களே வெளியிட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து, மறுநாள் வியாழக்கிழமை (09.05.2013) அமீனா சாலியின் பெயரில் அறிக்கை ஒன்று ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் மட்டும் வெளியாகியுள்ளது.

இதனை புரியும்படியாக சொல்வதென்றால், திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம், இசை, நடிப்பு, பின்னணிப் பாடல்கள் என்று அனைத்தையுமே ஜப்னா முஸ்லிம் இணையத்தளமே செய்துள்ளது. அமீனா சாலியின் பெயர் மட்டும் டைட்டிலில் பயன்படுத்தப் பட்டுள்ளது 

மேற்படி அறிக்கையில் உள்ள வார்த்தைகள், வசனங்கள், கருத்துக்கள் என்பவற்றுக்கு அமீனா சாலி பொறுப்பு இல்லை என்பதால், கேள்விகள், விமர்சனங்களால் பிரச்சினைகள் வந்து தங்களின் மோசடி அம்பலமாகி விடக் விடக் கூடாது என்பதற்காக, இந்த அறிக்கையின் கீழ் பதியப்பட்ட வாசகர்களின் விமர்சனங்கள், கேள்விகள், கருத்துக்கள் என்று Comments எதனையுமே அனுமதிக்கவில்லை / பிரசுரிக்கவில்லை. தற்பொழுது வரை எந்தக் குறிப்புக்களும் இல்லை. நான் பதிந்த குறிப்புக்கள் கூட பிரசுரமாகவில்லை.        

மேற்படி காரணத்தினாலேயே, நான் அமீனா சாலிக்கு எழுதிய பகிரங்க கடிதத்தையும் பிரசுரிக்க முடியாத நிலை ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அமீனா சாலி பெயரிலான குறித்த அறிக்கை ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தின் சொந்தத் தயாரிப்பு என்கின்ற காரணத்தினாலேயே அது வேறு எந்த ஊடகங்களுக்கும் வழங்கப் படவில்லை, கிடைக்கவுமில்லை. ஆகவே, குறித்த அறிக்கையை வெளியிடவில்லை என்று ஏனைய ஊடகங்களை குறை சொல்லுவதும் அர்த்தமற்ற ஒன்றாகும். 

அஸாத் சாலியின் கைதையும், முஸ்லிம்களின் பிரச்சினைகளையையும் மூலதனமாக வைத்து ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் சுய லாபம் தேட முற்பட்டுள்ளமை இந்த விடயத்தின் மூலம் தெளிவாகியுள்ளது .

இவ்வாறான போக்கு மேலும் தொடர்வது மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் கேடு விளைவிக்கும் ஒன்றாகும். ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தின் மேற்படி கீழ்த்தரமான செயல்பாடு,"எங்கே குண்டு வெடிக்கும்? எத்தனை பேர் மரணமடைவார்கள்? Breaking News போடலாம் அல்லது எங்கே அடுத்த பள்ளிவாசல் தாக்கப்படும் அதனை வைத்து செய்தி வெளியிட்டு மக்களை உசுப்பேற்றி நாட்டில் இனக்கலவரத்தைத் தூண்டலாம்" என்று காத்திருப்பதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை உண்மைப்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.

இத்தகைய மனநிலை பாதிப்பு மேலும் மோசமடைந்தால், இவர்களே குண்டை வைத்துவிட்டு Breaking News வெளியிடும் கீழ்த்தரமான நிலைக்கு இட்டுச் செல்லக் கூடும்.

மேற்படி கீழ்த்தரமான நடைமுறையைக் கைவிட்டு, நேர்மையாக செயல்படும்படி ஜப்னா முஸ்லிம் இணையத்தள நிர்வாகத்தினைரை பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றேன். 

இனாமுல்லாஹ்
கல்கிஸ்ஸ
(10.05.2011)


தேவைப்பட்டால் : அமீனா சாலிக்கு எழுதிய பகிரங்க மடல் கீழே இணைக்கப் படுகின்றது.

ஆமினா அஸாத் சாலிக்கு ஒரு பகிரங்க மடல்‏

கைது செய்யப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் அஸாத் சாலியின் புத்திரி ஆமினா சாலி அவர்களின் கவனத்திற்கு,

முஸ்லிம்களினதும், சிறு பான்மையினரதும் உரிமைகளுக்காக குரல் கொடுத்த உங்களது தந்தை அஸாத் சாலி அவர்கள் 02.05.2013 அன்று கைது செய்யபப்ட்டுள்ளமைமை குறித்து எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவரது கைதைத் தொடர்ந்து இடம்பெற்ற சில நிகழ்வுகள் முஸ்லிம் மக்கள் மனங்களில் உங்கள் தந்தை குறித்து இருந்த நல்பிப்பிராயத்தை இல்லாமல் செய்துள்ளதுடன், பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளன.

உங்கள் தந்தையை தீவிரமாக ஆதரித்தவர்களில் ஒருவன் என்ற வகையில் இந்த மடலை வரைகின்றேன்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எதிராக, முக்கியமாக Facebook மூலம் பரவலாக முன்வைக்கப் பட்டிருந்த ஒரு குற்றச் சாட்டுக் குறித்து நீங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் மூலம் பகிரங்கமாக உங்கள் தரப்பு விளக்கமொன்றை வழங்க முயற்சி செய்துள்ளமை குறித்து மகிழ்ச்சி. எனினும் குறித்த விளக்கம் போதுமானதாக இல்லாததாலும் மேலும், முக்கியமான சில விமர்சனங்களுக்கு நீங்கள் பதிலளிப்பதை தவிர்த்திருப்பதாலும், சில விடயங்களை உங்கள் விளக்கத்தினை நாடி முன்வைக்க விரும்புகின்றேன்.

கங்காராம பூஜை வழிபாடு தொடர்பான விடியோக்கள் வெளியிடப்பட்டு 5 நாட்களின் பின்னரே உங்கள் விளக்கம் வெளிவந்துள்ளது. எப்படியான விளக்கத்தை அளித்தால் நன்றாக இருக்கும் என்று சிந்தித்து விடயங்களை தயார் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதா என்பதை நீங்களும், உங்களை சார்ந்த்தவர்களும், அல்லாஹ்வுமே அறிவார்கள். எனினும் உங்கள் விளக்கம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டதாக் காணப் படுகின்றது.

ஊடகங்களில் உங்களின் தமிழ் மொழிக் கருத்துக்களை செவி மடுத்த வகையில், குறித்த விளக்கம் உங்களால் சுயமாக எழுதப்பட்டதா என்ற கேள்வி, அதன் தமிழ் மொழி நடையை நோக்குமிடத்து எழுகின்றது. 

குறித்த விளக்கத்தில், "எமது சமூகத்தில் எனது தந்தையையும் எமது குடும்பத்தையும் வெளுத்துக் கட்டுவதற்கென்றே ஒரு கூட்டம் தயார் நிலையில் அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றது என்று புரிந்துகொண்டேன்" என்கின்ற வசனங்கள், உண்மைக்குப் புறம்பானவையும், உங்களின் தந்தையை நியாயமான காரணங்கள் என்று தாம் நம்பிய காரணங்களுக்காக ஆதரித்தவர்களையும் நியாயமின்றித் தாக்குபவையாக அமைந்துள்ளன.

Facebook மூலமே உங்களின் தவறு குறித்த விமர்சனங்கள் அதிகமாக முன்வைக்கப் படுகின்ற நிலையில், மேற்படி விமர்சனங்களை முன்வைப்பவர்கள், அவற்றை பகிர்பவர்களின் Facebook Timeline இல் சற்று முந்தைய பழைய பதிவுகள், பகிர்வுகளைப் பார்த்தீர்கள் என்றால், அங்கே உங்கள் தந்தைக்கு ஒரு ஹீரோ அந்தஸ்த்துக் கொடுத்து பல பதிவுகள், பகிர்வுகள் இருப்பதை தெளிவாகக் காணலாம். ஆகவே "வெளுத்துக் கட்டுவதற்கென்றே ஒரு கூட்டம் தயார் நிலையில் அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றது" என்ற கருத்து முற்றிலும் பிழையானது என்பதனையும், மேலும் உங்களது தவறுகளை சுட்டிக் காட்டும் அத்தகைய பதிவுகளை அவர்கள் பகிரக் காரணம், இஸ்லாத்தின் மீதுள்ள பற்றே ஆகும். அதே இஸ்லாத்தின் மீதுள்ள பற்றுக் காரணமாகவே உங்கள் தந்தையை அவர்கள் நேசித்தார்கள் என்பதனையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எதிராக முன்வைக்கப் பட்ட ஏனைய முக்கிய குற்றச் சாட்டுக்களாவன :

1. உங்களின் பெரிய தந்தை, (அஸாத் சாலியின் சகோதரர்) ரியாஸ் சாலி (கங்காராமவில் உங்களுடன் காணப்பட்டவர்) அவர்கள் லக்பிம, த ஐலண்ட் ஆகிய பத்திரிகைகளில்  "இலங்கையில் வஹ்ஹாபிய பயங்கரவாதப் பயிற்சி" என்று முற்றிலும் பொய்யான தகவல்களைக் கொண்டு எழுதிய கட்டுரை தொடர்பானது. மேற்படி கட்டுரை முஸ்லிம் சமூகத்தையே காட்டிக் கொடுப்பதாகவும், பொது பல சேனா உட்பட இனவாதிகளுக்கு பல்வேறு தகவல்களை வழங்கிய ஒன்றாகவும் காணப் படுகின்றது2010 - 09 - 19 அன்று லக்பிம மற்றும் The Island போன்ற பத்திரிகைகளில் “இலங்கையில் வஹ்ஹாபிய பயங்கரவாத பயிற்சி”  எனும் தலைப்பில் ஓர் ஆக்கத்தை றியாஸ் சாலி வெளியிட்டார். இலங்கையில் வஹ்ஹாபிஸம் வளர்க்கப்படுவதாகவும், பள்ளி வாசல்கள் இதற்கான களமாக இருப்பதாகவும், மத்ரஸாக்கள் வஹ்ஹாபிசத்தை போதிப்பதாகவும், சவுதி இதற்கு நிதி உதவி செய்வதாகவும், கிழக்கில் ஜிஹாதிய குழுக்கள் இருப்பதாகவும் இக்கட்டுரையில் றியாஸ் சாலி குறிப்பிட்டிருந்தார்.  முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான துரோகத்தனமான மேற்படி கட்டுரை குறித்து உங்கள் குடும்பத்தின் சார்பில் எத்தகைய விளக்கத்தினை முன்வைக்கப் போகின்றீர்கள்?


2. உங்கள் தந்தை, பொது பல சேனாவின் ஹலால் எதிர்ப்புப் பிரச்சாரம், முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்த  விசமப் பிரச்சாரம் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்தார். எனினும் நீங்களும், உங்கள் தாயாரும் இஸ்லாமிய ஆடையை அணியாத, இஸ்லாம் ஹராம் என்று சொல்லும்படியாக தலையை பகிரங்கமாக திறந்தவர்களாக காணப் படுகின்றீர்கள். இது எந்தவகையில் சரியாகும்? இது குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்? தவறு என்று நீங்கள் உணர்ந்தால் திருத்திக் கொள்வதுதான் சரியாகும் (அது உங்களின் தனிப்பட்ட விடயம், இது ஜனநாயக நாடு, உங்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்று பதிலளிப்பீர்களாக இருந்தால், உங்கள் தந்தை உண்மையாகவே இஸ்லாத்தில் ஈடுபாடில்லாத, குடும்பத்தையே வழிநடாத்தத் தெரியாத ஒருவர், அல்லாஹ்வுக்காக அல்லாமல் தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த சந்தர்ப்பவாத அரசியல் வாதி என்று அர்த்தமாகிவிடும்) 


3. கங்காராம விகாரையில் செய்தது தவறு என்பதனை ஏற்றுக் கொண்டு, அதற்காக நீங்களும், உங்கள் தாயாரும் அழுது புலம்பி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டதாக கூறியுள்ளீர்கள், நல்ல விடயம். எனினும், தெவட்டகஹ கல்லறைக்குச் சென்று பிரார்த்தனைகள், வழிபாடுகளில் ஈடுபடும் இணைவைப்புக் குறித்தோ, அதற்காக அழுது புலம்பி இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவது குறித்தோ, மீண்டும் அவ்வாறு செய்யாமல் இருப்பது குறித்தோ நீங்கள் சிந்தித்ததுண்டா? கொலை, களவு, விபச்சாரம், போதை போன்ற அனைத்தையும் விட அல்லாஹ்விடத்தில் பயங்கரமான பாவமாக இணைவைப்புக் காணப்படுகின்றது.


4. உங்கள் தந்தை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுடன் இணைந்து இருந்த காலத்தில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான விசேட நோன்புகால விடுமுறையை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப் பட்ட பொழுது, 2011 ஜூன் 29, புதன்கிழமை மாலை, கல்வியமைச்சர் பந்துல் குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை ரத்துச் செய்யப்படுவதை தொடர்ந்தும் அப்பொழுது ஆதரித்த ஒரே முஸ்லிம் அரசியல்வாதியாக உங்கள் தந்தைதான் இருந்தார். மகிந்தவின் அரவணைப்பில் இருந்த நேரம், காலாகாலமாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் அனுபவித்து வரும் விசேட உரிமையை விட்டுக் கொடுக்கத் துணிந்தாரே? இது எவ்வகையில் நியாயம்? தற்பொழுதும் அதே நிலைபாடில் தானா  இருக்கின்றாரா? அறிய ஆர்வம்.


5. பொது பல சேனாவினால் அகில இலங்கை ஜமியத்துல் உலமா மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப் பட்டு குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப் பட்ட பொழுது, முழு இலங்கை முஸ்லிம் சமூகமும், ஜமியத்துல் உலமாவின் பக்கம் ஆதரவளித்தபோளுது உங்கள் தந்தை மட்டும் ஜமியத்துல் உலமா குறித்து எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாரே? இது எந்த வகையில் நியாயமானது?


6. இறைவன் மனிதனின் செயல்களுக்கன்றி, எண்ணங்களுக்கே கூலி கொடுக்கின்றான் என்று ஒரு கருத்தை முன்வைத்துள்ளீர்கள், இது தவறாகும். எண்ணமும் செயல்களும் சரியாக இருக்க வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதே நேரம் ஒருவன் முர்தத் (மதம் மாறியவன்) ஆகுவதில், எண்ணம் மட்டுமல்ல, சொல் சார்ந்த ரித்தத், செயல் சார்ந்த ரித்தத், எண்ணம் சார்ந்த ரித்தத் என்ற மூன்று வகை உள்ளதையும் தெரிந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.


இலங்கை முஸ்லிம்களின் தலைவராக வர விரும்புகின்ற ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக / பொது வாழ்விலும் இறைவனுக்கு இணை வைக்காத, ஹால் ஹராத்தை பேணும் சிறந்த முஸ்லிமாகவும், சந்தேகங்கள், சதிக் குற்றச் சாட்டுக்கள், இரகசிய தொடர்புகளுக்கு அப்பாற் பட்டவராகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மேற்படி பகிரங்க மடலை வரைந்துள்ளேன்.


இது குறித்து ஆக்கபூர்வமான பதிலொன்றை , இலங்கையின் அனைத்து முஸ்லிம்கள் சார்பிலும் எதிர்பார்க்கின்றேன்.


இனாமுல்லாஹ்
கல்கிஸ்ஸ
(09.05.2011)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா