இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/09/2013

பொத்துவில் வலய பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்க ளுக்கு விரைவில் தீர்வு

(ஹனீபா)
பொத்துவில் பிரதேசப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான அங்கிகாரத்தை கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலத்தில் இம்முறை வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சாதனைகள் படைத்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டிக் கொளரவிக்கும் நிகழ்வில இன்று (08) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பாக விரிவாக கிழக்கு மாகாண சபையில் ஆரயப்பட்டதுடன் அது தொடர்டபான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. இதற்கமைய வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு அமைச்சரவை அங்கிகாரத்தையும் வழங்கியுள்ளது. 

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 133 ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளன. இதில் 97 ஆசிரிய வெற்றிடங்கள் பொத்துவில் பிரதேச கல்விக் கோட்டப் பாடசாலைகளிலேயே காணப்பட்டுவருகின்றன. மேலும் அட்டாளைச்சேனை பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 31 ஆசிரிய வெற்றிடங்களும், அக்கரைப்பற்று பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 5 ஆசிரிய  வெற்றிடங்களும் நீண்ட காலமாக நிலவி வருவதால் பல பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

இவ்வாறாக ஆசிரியர் வெற்றிடங்களினால் அண்மைக்காலமாக பல பாடசாலைகள் மூடப்பட்டு, மாணவர்கள் மற்றும் பெற்றொர்களினால் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைள் விடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிவருகின்ற ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யாமல்,  குறிப்பாக பொத்துவில் கல்விக் கோட்டத்தில் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர்கள் ஒன்றிணைந்து கூரையின் மேல் ஏறி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலமுனையிலும் அண்மையில் ஆசியர்கள் வெற்றிடத்தை நிரப்பக் கோரி மாணவர்களும், பெற்றோர்களும் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தியதினை ஊடகங்கள் வாயிலாக அனைவரும் பார்த்திருந்தோம்.இதனால்  பாடசாலைகளில் வழமையான கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
மேற்படி நிலைமைகள் காணப்பட்டு வருகின்ற வேளையில் நாம் இதனை கல்வி அமைச்சிக்கு எடுத்துக் கூறிய வேளையில் உண்மைக்குப் புறம்பாகவும், பிரதேசவாதத்தின்

பிடியிலிருந்து இன்னும் மீண்டெழாத காரணத்தினாலும் சில கல்வி அதிகாரிகள் அந்த உயரிய பணியிலிருந்து விலகி செயற்பட்டு வருகின்றமை மிக்க வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் எந்தவிதமான வெற்றிடங்களும் இல்லை என தெரிவித்து வருகின்றார்கள். அது மாத்திரமல்லாமல் சில பாடசாலைகளுக்குச் சென்று நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் ஆசிரியர்களை பெற்றுத்தருகின்றோம் என பெற்றோர்களையும் ,அதிபர்களையும் தூண்டிவருகின்றார்கள். அரச அதிகாரிகள் எவராகவிருந்தாலும் அவரிடம் இன,மத,பிரதேச வேறுபாடுகள் இருக்கக் கூடாது முக்கியமாக கல்வி விடயத்தில் இவ்வாறான வேறுபாடுகள் களையப்படவேண்டும்.

எனவே, அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் நிலவுகின்ற 133 ஆசிரிய வெற்றிடங்களையும் கிழக்கு மாகாணசபையினால் புதிதாக வழங்கப்படவுள்ள ஆசிரிய நியமனத்தின் போது நிரப்புவதற்காக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென என்னால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை விரைவாக கிழக்கு மாகாணசபையினால் புதிதாக வழங்கப்படவுள்ள ஆசிரிய நியமனத்தின் போது அக்கரைப்பற்று வலயக்கல்வி பாடசாலைகளில் நிலவி வருகின்ற ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. இவ்வாறான நிலமையிலேதான் பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்வியை மலினப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணக் கல்வி அதிகாரியினால் ஆளுனர், கல்வி அமைச்சு மற்றும் உயரதிகாரிகள் மத்தியில் பிழையான கருத்துக்களைக் கூறி எமது பிள்ளைகளின் கல்வியில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலைமைய கடந்த சில காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே இன்னும் ஓரிரு வாரங்களில் ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது. அதில் பொத்துவில் பிரதேசத்திற்காக கணிசமான வெற்றிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இப்பாரட்டுவிழாவில் கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில், கோட்;டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி, ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சவுறுதீன், பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.முனாப் மற்றும் பெற்றோர்கள்,ஆசிரிகள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா