இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2014

சிலரால் அமைச்சர் பதவி இன்றி கட்சி தலைவராக ஒரு நாள் கூட நீடிக்க முடியாது :ரவூப் ஹக்கீம்

(ஹனீபா)
சிலரால் அமைச்சர் பதவி இன்றி கட்சி தலைவராக ஒரு நாள் கூட நீடிக்க முடியாது என்று குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்; தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமது கட்சி சமூகத்தை பாதுகாக்கும் பணியை மிகவும் கச்சிதமாக மேற்கொள்ளும் எனவும் நம்பிக்கைதெரிவித்தார்.

முன்னர் தேசிய காங்கிரஸில் கிழக்கு மாகாணசபையில் தவிசாளர் பதவி வகித்த சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் நிகழ்வு கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை இன்று (28) முற்பகல் இடம் பெற்ற பொழுது உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
அங்கு உரையாற்றும் பொழுது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம்

எமது கட்சியின் புதிய உறுப்பினராகவும், கட்சியின் அங்கத்துவ விவகாரங்களுக்கான பணிப்பாளராகவும் சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளும் இந்த நிகழ்வின் உண்மையான தாக்கம் மிகவும்விசாலமானது.

சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் கடந்த மாகாண சபையில் தவிசாளராக பதவி வகித்தவர். அத்துடன் இந்த மாகாணசபை தேர்தலிலும் போட்டியிட்டவர். திருகோணமலை மாவட்டத்தில், குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மேலும் பலப்படுத்துகின்ற விடயமாக இது மாறும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. அதிலும் முக்கியமாக சட்டத்தரணி பாயிஸ் அவர்கள் தேசிய காங்கிரஸில் இருந்து நீங்கி, முஸ்லிம் காங்கிஸில் இணைந்து கொள்ளும் இந்த காலகட்டம் மிக முக்கியமானது.

கடந்த மாகாண சபை தேர்தலின் போது, மாகாணசபையில் ஆட்சித் தரப்பில் இருந்த மூன்று பேர் எங்கள் கட்சியோடு இணைந்து கொண்டார்கள். இது திருகோணமலை மாவட்டத்திலும், அம்பாரை மாவட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடம்பெற்றது. இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெற்கில் இரண்டு மாகாண சபை தேர்தல்களுக்கு முகங்கொடுக்கின்ற சூழ்நிலையில் சட்டத்தரணி பாயிஸ், திருகோணமலை மாவட்டத்தில் கணிசமான அரசியல் அந்தஸ்த்தை தக்கவைத்துக் கொண்டவர்கள் அடிப்படையில் அவரது இணைவு ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையுமென எதிர்பார்க்கின்றோம். எமது கட்சியின் மேல் மட்ட உறுப்பினர்கள் அனைவரும் இதனை வரவேற்கின்ற சூழ் நிலை உருவாகியிருக்கின்றது.

வழமையாக குறிப்பிட;டால் ஒரு தேர்தல் நடக்கும் பொழுது கட்சியில் வந்து சேரும் ஒரு படலம் நடப்பதுண்டு. அதற்கு மாற்றமாக, தேர்தலுக்கு இன்னும் எவ்வளவோ காலம் எஞ்சியிருக்கதக்கதாக முன் கூட்டியே வந்து சட்டத்தரணி பாயிஸ் எங்களோடு வந்து இணைந்து கொள்கிறார். கட்சியை தாம் பலப்படுத்த வேண்டும் என்ற மனப்பூர்வமான உள் உணர்வுடன், தூய்மையான உள்ளத்தோடு எங்களோடு வந்து அவர் இணைந்து கொள்கிறார். சிலர் நிபந்தனைகளோடு வந்து தேர்தல் முடிந்த கையோடு திரும்பி போன வரலாறும் உண்டு. இது கடந்த காலங்களில் அனுபவங்களாக இருந்துள்ளன. சொந்த அரசியல் சுயலாப நோக்கில் செய்யப்படும் குறுகிய அரசியல் முன்னெடுப்பாக பாயிஸ் அவர்களின் இணைவை நான் காணவில்லை.

சுய நலமில்லாத அரசியல் என்று 100வீதம் இருக்க முடியாது. குறைந்தளவு சுயநலம் 50 வீதம் சமூக நலன் 50 வீதம் என்றாவது ஒவ்வொருவரிடத்திலும் காணப்பட வேண்டும் என நான் வழமையாக விநயமாக வேண்டி கொள்வதுண்டு. நல்ல கட்சியோடு தன்னை முழுமையாக சங்கமிக்க செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அவர் எமது கட்சியோடு இணைந்து கொள்கிறார். கட்சி தலைமையினதும், கட்சியின் மாவட்ட தலைமையினதும் ஒத்துழைப்பு தமக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அவர் எங்களுடன் இணைந்து கொள்கிறார்.

எங்களுக்கென்று ஒரு வகிபாகம் இருக்கின்றது. அரசாங்கத்தில் இருந்தாலும் நாங்கள் மிகவும் வெளிப்படையாக, ஒளிவு மறைவு இன்றி செயல்படும் இயக்கமாக தொடர்ந்தும் இயங்குகிறோம். யாருடைய தயவிலும் தங்கியிருக்க வேண்டும் என்ற தேவை இல்லாத இயக்கம் இது. அத்துடன் நாங்கள் அமைச்சுப் பதவிகளை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

இதை சகோதரர் பாயிஸ் அனுபவ பூர்வமாக கண்டிருக்கிறார். அவர் முன்னிருந்த கட்சியின் அமைச்சர் ஒரு நாள் கூட அமைச்சுப் பதவி இல்லாமல் கட்சி தலைவராக நீடிக்க முடியாதவர். அமைச்சராக இல்லாமல் கட்சி தலைவராக ஒரு நாள் கூட அவரால் இருக்க முடியாது. நிறைய பேரின் கதை இது தான். அவர்கள் எமது கட்சியின் ஊடாக அரசியல் முகவரியையும், அடையாளத்தையும் பெற்றுக் கொண்டு பின்னர் அமைச்சர் பதவிக்காகவே வலிந்து போனவர்கள். இந்த அரசாங்கத்தில் நாங்கள் இணைந்துள்ள சம்பந்தமாக ஜனாதிபதி இன்று கூட என்னிடம் வெளிப்படையாகவே கேட்டார். நாங்கள் தாமாகவே விலக வேண்டியது இல்லை. வேண்டுமானால் எங்களை தாராளமாக வெளியேற்றலாம். அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

கட்சி எமது அடையாளச் சின்னம். சமூகத்தை பாதுகாக்கின்ற போராட்டத்தை எமது கட்சி கச்சிதமாகசெய்யும். எல்லா கட்சிகளையும் போல எங்களது கட்சிக்குள்ளும் பல விதமான வித்தியாசமான கருத்துக்களை உடையவர்கள் இருக்கலாம் என்ற படியால், நான் ஜனாதிபதியிடத்தில் உங்களது கட்சியிலும் வித்தியாசமான கருத்துக்களை உடையவர்கள் இருக்கிறார்கள்;. எமது கட்சியிலும்; வேறு கருத்துக்களை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினேன்.

தெளிவான, சலனமற்ற இயக்கம் என்ற அடிப்படையில் எந்த சவாலுக்கும் தயாரான இயக்கம் என்ற அடிப்படையில், இவ்வாறான காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனது சமூகத்தின் பிரச்சினையை அரசாங்கத்துள்ளும் பேசுகின்ற கட்சியாகவும்,  உள்ளொன்றும், புறமொன்றும் பேசாத கட்சியாகவும் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இந்த கட்சியில் கருத்து சுதந்திரத்தை நாம் தாராளமாக அனுமதித்து இருக்கின்றோம். ஜனநாயக நாட்டில் சுதந்திரம் கட்சிக்குள் பிரதிபலிக்க வேண்டும். ஏதாவது ஒரு தருணத்தில் அந்த கட்சியின் கட்டுப்பாட்டை மீறுகின்ற விடயமாக வரும் பொழுது கட்சி சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அழைத்து விளக்கங்களை கோரும். கட்சியின் அங்கிகாரம் இல்லாமல் பாரதூரமாக எதையாவது பேசினால் அதற்கு நடவடிக்கை எடுக்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறது.

சிலர் சில சந்தர்ப்பங்களில் கட்சியின் தலைமை ஒரு மெத்தனப் போக்கை கடைபிடிக்கிறது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால்இ வெட்டொன்று துண்டு இரண்டாக முடிவெடுக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. இது தனி நபர்களுக்கான இயக்கமல்ல. தனி நபர்கள் எவருக்காவது ஜால்ராபோடுகின்றஇ வேறு அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்கின்ற விதத்தில் வெறும் வார்த்தை ஜாலங்களில் கையாள்;பவர்களை கட்சி போராளிகள் சரிவர அடையாளம் கண்டு கொள்கின்றார்கள். இது பற்றி நானும் எனது பேச்சுக்களில் சூசகமாக சொல்கின்ற பொழுதுஇ அதன் உள் அர்த்தத்தை மக்கள் சரிவர புரிந்து கொள்கின்றார்கள்.

இந்த கட்சியின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனங்களை களைய வேண்டிய அவசியம் இருக்கின்றது. புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளுராட்சி தேர்தல் வட்டார முறையில் வரும் நடைமுறை உருவாகியிருக்கின்றது. ஆகையால் கட்சியை கிளைகளினூடாக பலப்படுத்துகின்ற ஒரு பாரிய பணிகாத்திருக்கின்றது. இவ்வாறான ஒரு பதவியின் மூலம் அந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்கு சட்டத்தரணி பாயிஸ் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளார். கட்சியின் பிரசார நடவடிக்கைகளிலும் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திகொள்கின்றார்.

அவர் தமது ஆதரவாளர்களோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து கொள்ளும் பாரிய நிகழ்வொன்று தெற்குத் தேர்தல் முடிந்த கையோடு கிண்ணியா மண்ணிலே நிகழ இருக்கின்றது. அதில் அவர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ். தௌபீக் எம்.பியின் ஒத்துழைப்போடு அதனை அந்த பிரமாண்டமான நிகழ்வை அவர் ஏற்பாடு செய்யஆவலாகஇருக்கின்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்,  சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் ஆகியோரும் உரையாற்றினர். கட்சியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி,  கட்சியின் மூத்த துணைதலைவர் முழக்கம் அப்துல் மஜீத், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறப்பினர் அப்துல் ஜவாத், அக்கரைபற்று மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி, திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் செயற்குழு செயலாளர் ஜே.எம். ஷாபி,  சட்டத்தரணி எம்.சி.எம். நவாஸ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா