(ஹனீபா)
'இந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் இருக்கம் வரைக்கும் எந்தவொரு மதஸ்தலமும் பள்ளிவாசல்களும் உடைக்கப்படமாட்டாது. அதற்கு நான் ஒருபோதும் அனுமதியேன். சில விசமத்தனமானவர்களினால் பரப்பப்படும் பிரசாரங்களை முஸ்லிம்கள் ஒரு போதும் நம்பவேண்டாம்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்மாந்துறையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷக்ட் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுகின்ற தேசிய காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிக்கையில்,
'இந்த நாட்டில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்று வந்த கொடூர பயங்கரவாதத்தினால் எமது மக்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்தது மாத்திரமன்றி நமது மக்கள் தொழில்களுக்கு செல்லமுடியாமலும் வயல்களுக்கு செல்ல முடியாமலும் கடலுக்கு செல்ல முடியாமலும் சந்தைக்கு போக முடியாமலும் ஏன் பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியாமலும் இருந்த வரலாறுகளை நாம் மறந்து விடமுடியாது.
காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட கோரச் சம்பவம் உட்பட பல சம்பவங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இவ்வாறான துன்பத்தில் இருந்த சகல இன மக்களையும் பாதுகாப்பதற்கான துரித நடவடிக்கையினை மேற்கொண்டு நாம் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்து இன்று நீங்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் அச்சமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
இதனால் இந்த நாட்டிலே வாழ்கின்ற சகல இன மக்களும் சௌபாக்யத்துடன் வாழவேண்டும். ஒரு சமுகத்தை இன்னொரு சமுகம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலையை இல்லாமல் செய்ய வேண்டும். எமது நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று பல்லின மதங்களையும் கடைப்பிடிக்கின்ற மக்கள் வாழ்கின்றனர். அதாவது பௌத்தம், ஹிந்து, இஸ்லாம் மதங்களை கடைப்பிடித்து வாழ்கின்றனர்.
எந்த ஒரு மதமும் அந்த மதத்தை போதிதத் போதனையாளர்களும்; கூறவில்லை. ஒரு மதத்தை மற்றைய மதம் சிறுமைப்படுத்த வேண்டும் அல்லது நிந்திக்க அவமதிக்க வேண்டும் அல்லது இல்லாமல் செய்ய வேண்டும் என போதிக்கவில்லை. மதங்கள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையிலேதான் போதனைகள் செய்யப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
அந்தவகையில் நாம் புனித அல்குர்ஆனை எடுத்தக் கொண்டாலும் பைபிலை எடுத்துக்கொண்டலும், இந்துமத நூல்களை எடுத்துக்கொண்டாலும் பௌத்த நூல்களை எடுத்துக்கொண்டாலும் எல்லாவற்றிலும் நம்பிக்கையுடன் வாழு வேண்டும் என்பதையே கூறியுள்ளது. இந்த நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் நாட்டிலுள்ள சகல இனங்களையும், மதங்களையும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவைக்க வேண்டிய பொறுப்பு என்னிடமுள்ளது.
நான் இந்த நாட்டிலுள்ள பௌத்தர்களுக்கு மாத்திரமோ, இந்துக்களுக்கு மாத்திரமோ, இஸ்லாமியர்களுக்கு மாத்திரமோ உரிய தலைமைத்துவம் அல்ல. நான் இந்த நாட்டிலுள்ள சகல இனங்களையும், மதங்களையும் பாதுகாக்கின்ற காவலனாக உள்ளேன். அந்தப் பொறுப்பு என்னிடம் உள்ளது. அதனை நான்; மிகவும் சிறப்பாக செய்து பாதுகாத்து வருகின்றேன்.
தேர்தல் காலங்கள் வந்துவிட்டால் இங்குள்ள மக்களிடம் வந்து பள்ளிகள் உடைக்கப்பட்டு வருவதாகவும் தென்னிலங்கைக்கு சென்றால் அங்குள்ளவர்கள் மத்தியில் அங்கே விகாரைகள் உடைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். இவ்வாறு ஒரு கூட்டம் விசமத்தனங்களை செய்து வருகின்றனர். இந்த விசமத்தனங்களை செய்து வருகின்றவர்கள், அமைச்சரவைக்கு வருகின்ற போது இந்த விடயங்களை தெளிவுபடுத்தாமல் எலிகளைப் போல பதுங்கி இருந்து விட்டு செல்கின்றனர்.
இந்தப் பிரச்சாரங்களை செய்து வருபவர்கள் கடந்த தேர்தலில் உங்களிடம் வந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தால் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்ல முடியாது என்று சொன்னார்கள். அது நடந்ததா அது நடக்கின்ற காரியமா என நான் உங்களிடம் கேட்கின்றேன். யார் எதைச் சொன்னாலும் எனக்குப் பிரச்சினையில்லை,
மக்கள் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் நான் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் ஐந்து வேளை தொழுகைக்கான (அதான்) பாங்கு அரச வானொலியிலே ஒலிக்க வேண்டுமென்று கூறி அனுமதி வழங்கினேன் என்பதை கூறிக் கொள்கின்றேன்.
இவர்கள் கூறி கூச்சலிடும் விடயங்கள் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இவர்கள் தொடர்பாக மக்கள் நன்கு விளங்கியுள்ளார்கள். தொடர்ச்சியாக இவர்களில் தொழில் இதுவாகவே இருந்து வருகின்றது.
அன்புள்ளவர்களே, நான் சம்மாந்துறை தொகுதி மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். கடந்த தேர்தலில் நீங்கள் எனக்கு வாக்களித்து இத்தொகுதியினை வெற்றியடையச் செய்தள்ளீர்கள். நான் கடந்த 2005ஆம் ஆண்டு உங்கள் தலைவர் எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்களின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளேன். அந்த நேரம் எனக்களித்த வரவேற்பும் மரியாதையும் எனக்கு நினைவிருக்கின்றது. அவரை நான் இவ்விடத்தில் நினைவு கூறுகின்றேன்.
ஏனக்குத் தெரியும் இந்தப் பிரதேச மக்கள் அதிகமானவர்கள் விவசாயத்தை செய்கின்றவர்கள். அவர்களின் தேவைகளை கடந்த காலத்தில் செய்வதற்காக எங்களுடைய நீர்பாசன அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்கள் பல தடவைகள் இங்கு வந்து பேச்சுவார்த்தை செய்துள்ளார். அதேபோன்று இந்த மக்களுடைய விவசாய விளைச்சல்களை கொள்வனவு செய்வதற்கான பாரிய களஞ்சிய சாலை தேவையினை நான் மிக விரைவில் நிறைவேற்றித் தருவேன் எனவம் கூறினார்.
விசேடமாக நான் கூறிக்கொள்கின்றேன், இந்தப் பிரதேசத்தின் அமைப்பாளர் நௌஷக்ட் அண்மையில் என்னைச் சந்தித்து உங்களுக்காக உங்களின் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் சண்டையிட்டும் சாதுவாகு பேசியும் பலவிடயங்களை செய்வதற்கான அனுமதியை பெற்று வந்தார் என்பதை கூறிக் கொள்கின்றேன்.
அது மாத்திரமன்றி உங்களின் பிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் எனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சருமான அதாஉல்லா, உங்களுக்காக உங்களின் பிரதேச அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அது மாத்திரமன்றி இந்த பிராந்திய மக்கள் நிம்மதியாகவும் அச்சமின்றியும் வாழ்வதற்காக ஒரு தீர்மானத்தை என்னிடம் முதல்தடவையாக கூறிய பெருமைக்குறியவராக அமைச்சர் அதாஉல்லா இங்கு காணப்படுகின்றார்.
அதாவது வடக்கை கிழக்கு ஆழ்வதையும் கிழக்கை வடக்கு ஆழ்வதையும் விட்டு கிழக்கை கிழக்கு மண்ணைச் சேர்ந்தவன் ஆளும் வகையில் வடக்கம் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் அந்தப் பெருமை உங்கள் அதாஉல்லாவையே சாரும். எனவே உங்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக கிழக்கின் நவோதயம் வேலைத்திட்டம் மூலம் பலஅபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவேதான் நீங்கள் என்மீது நம்பிக்கைகொள்ள வேண்டும். நான் உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் பள்ளிகளை பாதுகாக்கின்ற பொறுப்பு என்னுடையது. அதை நான் பாதுகாப்பேன். இந்த நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என்பது இல்லை. எல்லோரும் ஒரே நாட்டின் பிரஜைகளே' எனக் கூறினார்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
0 comments:
Post a Comment