ஹனீபா
அரசாங்கத்தின் உதவிகளை மாத்திரம் நம்பியிருக்காமல்
வெளிநாடுகளினதும் நிதி உதவிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தைக் கட்டி எழுப்புவதற்கு புதிய
முதலமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை
உறுப்பினரும் அக்கட்சியின் சபைக் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள்
விடுத்துள்ளார்..
கிழக்கு மாகாண சபையின் அங்குரார்ப்பண அமர்வு இன்று காலை
திருகோணமலையிலுள்ள மாகாண சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த சம்பிரதாய நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில்
அதன் குழுத் தலைவர் என்ற ரீதியில் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது;
"கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும்
அமைச்சர்கள்,தவிசாளர், பிரதித் தவிசாளர் ஆகியோருக்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
மக்களின் பிரதிநிதிகளாக இந்த சபைக்கு வந்துள்ள நாம்
அனைவரும் இன,மத, கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து மக்களின் நலன்களுக்காகவும் இந்த
மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும் ஒன்றிணைந்து செயற்பட இந்த சந்தர்ப்பத்தில்
திடசங்கற்பம் பூணுவோம்.
நாட்டிலுள்ள ஏனைய மாகாண சபைகளுக்கு முன்மாதிரியான சபையாக
நமது கிழக்கு மாகாண சபை திகழ வேண்டும். அதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன்
உழைக்க வேண்டும்.
இந்த மாகாணத்தின் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் நியமிக்கப்படுவதற்கு எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன்
தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுமே காரணம் என்பதை இந்த சபையில் பெருமையுடன்
தெரிவித்துக் கொள்கின்றேன்.அந்த வகையில் எமது கட்சியின் அனுசரணையுடன் முதலமைச்சராக
பதவியற்றுள்ள நஜீப் அப்துல் மஜீத் அவர்களுக்கு நாம் என்றும் பக்க துணையாக இருப்போம். அதேபோன்று இந்த மாகாணத்தினதும் மக்களினதும் நலன்களைக் கருத்திற் கொண்டு
எதிரணியினரும் முதலமைச்சருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தன்னால் இந்த மாகாணத்தில் முழமையான அபிவிருத்தித்
திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனதாக முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் இங்கு ஆதங்கம் தெரிவித்தார். அது முற்றிலும் உண்மை.
ஆகையினால்தான் நாம் அரசாங்கத்தை மாத்திரம் நம்பியிருக்க
முடியாது. அதற்கு மேலாக வெளிநாடுகளினதும் நிதி உதவிகளைத் தேடிப் பெற்று கொண்டு வர
வேண்டும். அதற்காக புதிய முதலமைச்சர் ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நான் இந்த சபையில் வலியுறுத்திக்
கேட்டுக் கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டார்..
இந்த உரைகளுக்கு முன்னதாக
மாகாண சபை தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போது முதலமைச்சர்
நஜீப் அப்துல் மஜீத், உறுப்பினர் ஆரியவதி கலப்பதியின் பெயரை
முன்மொழிந்தார். அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினரும் அக்கட்சியின் சபைக்
குழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீல் வழிமொழிய சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. இதனை தொடர்ந்து பிரதித் தவிசாளர் தெரிவு
இடம்பெற்றது. இதன்போது மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபைரின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழிமொழிய சபை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து 15நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது.
அதன் பின்னர் மீண்டும் சபை கூடியது. புதிய தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இடம்பெற்ற
அமர்வில் முதலமைச்சரின் கொள்கை விளக்க உரையும் அதனைத் தொடர்ந்து கட்சிகள் சார்பான
குழுத் தலைவர்களின் உரைகளும் தலா ஐந்து நிமிடங்கள் இடம்பெற்றன. அத்துடன் இன்றைய
அங்குரார்ப்பண அமர்வு நிறைவுக்கு வந்தது.
0 comments:
Post a Comment