சுகாதார அமைச்சுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பற்றி மேலும் மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் வாராந்தம் சராசரி 10 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பற்றி முறைப்பாடுகள் அமைச்சுக்கு கிடைப்பதாகவும் அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் மீதே குறிப்பாக சிற்றூழியர் தரத்தினருக்கே இந்த அவலம் நேரிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயர் பதவி வகிக்கும் பெண்களும் இலக்காக உள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் இணைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத்தின் தலைவர் ஒருவர் மேற்படி மூன்று சம்பவங்களில் ஒன்றில் சம்பந்தப்பட்டுள்ளார்.
பாலியல் சலுகை வழங்கினால் இடமாற்றத்தை ரத்துச் செய்து தருவதாக ஒரு பெண் ஊழியரிடம் இத் தலைவர் உறுதியளித்துள்ளதாக அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. ஏனைய இரண்டு பெண் ஊழியர்களையும் துன்புறுத்திய இரு சந்தேக நபர்களும் வைத்திய விநியோக பிரிவில் கடமையாற்றும் இரண்டு சிற்றூழியர்களாவர்.
மேற்படி இரண்டு பெண்களையும் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்வதற்கும் மூன்று முறைப்பாடுகளையும் விசேட புலனாய்வு பிரிவினரிடம் கையளிப்பதற்கும் அமைச்சு முடிவு செய்துள்ளது.
சந்தேக நபர்கள் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை பெண்கள் மற்றும் யுவதிகள் மீதான இத்தகைய பாலியர் துன்புறுத்தல் மற்றும் ஏனைய துஷ்பிரயோகம் சம்பந்தமாக அமைச்சிலும் அமைச்சின் நிறுவனங்களிலும் நடைபெறும் சம்பவங்களை முறையிடுவதற்கு சுகாதார அமைச்சு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 0112 686393 என்னும் தொலைபேசி இலக்கத்துக்கு காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை அத்தகைய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment