Tinamalar : தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக பேட்டி கொடுத்ததாக, நடிகை குஷ்பு மீது, திருச்சியில், தி.மு.க.,வினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். திருச்சி, தேசியக்கல்லூரி மைதானத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவா மகள் திருமணம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று காலை நடந்தது. விழாவில், நடிகை குஷ்பு பங்கேற்று பேசினார்.
திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள, "பெமினா' ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்து விட்டு, விமானத்தில் சென்னைக்கு செல்வதற்காக, ஓட்டல் அறையிலிருந்து மதியம், 1:45 மணியளவில் வெளியே வந்தார்.ஓட்டலுக்கு வெளியே வந்து, காரில் ஏறச் சென்ற குஷ்புவை, தி.மு.க., கரைவேட்டி கட்டிய, 50 பேர் கொண்ட கும்பல் வழி மறித்தது. "குஷ்பு ஒழிக' என்று கோஷமிட்டனர். அவர்களிடம், "எதற்காக, கோஷம் போடுகிறீர்கள்' என, குஷ்பு கேட்டார்."தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள், தி.மு.க., தலைவராக தளபதியை (ஸ்டாலின்) ஏற்றுக் கொண்டுவிட்டனர். நீ யாரடி, அவருக்கு எதிராக பேட்டி கொடுக்க' என்று கேட்டு, சரமாரியாக ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.
திடீரென்று அவர்கள், குஷ்பு மீது செருப்புகள், தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். நிலை குலைந்து போன குஷ்புவை, ஓட்டல் மேலாளர் அமர்நாத் காப்பாற்றி, மீண்டும் ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றார்.போலீசார் வரும் முன், ஓட்டலில் திரண்டிருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அதன் பின், 2:15 மணியளவில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், குஷ்பு விமான நிலையத்துக்கு சென்றார். மதியம், 2.30 மணிக்கு, சென்னை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், சென்னைக்கு கிளம்பிச் சென்றார்.
0 comments:
Post a Comment