வெனிசுவேலாவில் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் புற்றுநோயால் இரந்ததை அடுத்து , நாட்டில் ஏழு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
58 வயதான அதிபர் சாவேஸ், பல மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு , பின்னர் இறந்தார்.
அவரது உடல் காரகாஸ் நகரில் உள்ள ராணுவ அக்காடெமிக்கு கொண்டு செல்லப்பட்டு, வெள்ளிக்கிழமை அரச மரியாதைகளுடன் இறுதிச்சடங்குகள் நடக்கும்வரை அங்கு வைக்கப்பட்டிருக்கும்.
சோஷலிஸ சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, ஏழை எளிய மக்கள் மத்தியில் பிரபலமான சாவேஸ், மத்தியதர வர்க்க மக்களின் ஒரு பகுதியினரின் அதிருப்தியை எதிர்கொண்டார்.
அவரது மறைவுச் செய்தி கேட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் காரகாஸ் நகரின் வீதிகளில் திரண்டனர்.
அவருக்குப் பின்னர் அதிபர் பதவிக்கு வருபவரைத் தேர்ந்தெடுக்க ஒரு தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடத்தப்படும்.
துணை அதிபர் நிக்கோலாஸ் மடுரோ, இடைக்கால அதிபராகப் பதவியேற்றிருக்கிறார்.
அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்ரிக் கேப்ரில்ஸ்ஸுகு எதிராக தேர்தலில் போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் ஒபாமா, புட்டின், பிடெல் கேஸ்ட்ரோ கருத்துக்கள்
அமெரிக்க அதிபர் ஒபாமா வெனிசுவேலா நாட்டிற்கு ஒரு சவாலான காலம் என்று கூறியிருக்கிறார். அமெரிக்கா வெனிசுவேலா மக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்க வெனிசுவேலாவுடன் ஒரு சிக்கலான உறவைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய அதிபர் புட்டின் சாவேஸை, ஒரு பலமான மனிதர் என்று வர்ணித்திருக்கிறார். தனக்கு மிகவும் உயர்ந்த இலக்கையே நிர்ணயித்துக்கொண்டவர் அவர் என்றும் புட்டின் கூறியிருக்கிறார்.
அர்ஜெண்டினா, எக்வெடார் மற்றும் க்யூபா நாடுகளில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
க்யூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் கேஸ்ட்ரோ தான் தனக்கு ஒரு மகன் போன்று இருந்த ஒருவரின் மறைவை நினைத்து வருந்திக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
பொலிவியா தலைவர் , எவோ மொரால்ஸ், காரகாஸுக்கு உடனடியாக விரைவதாகக் கூறியிருக்கிறார்.
ஐ.நா மன்ற தலைமைச்செயலர் பான் கி மூனும் , சாவேஸின் மறைவு குறித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஹ்யூகோ சாவேஸ் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்திருக்கிறார்.
போராளியாக வாழ்க்கையைத் தொடங்கிய சாவேஸ், கியூபாவை விடுவித்த பிடல் காஸ்டரோவின் நெருங்கிய நண்பராவார். எண்ணெய்ச் சுரங்கத்தை நாட்டுடமை ஆக்கியதால், அதன் பெரிய வருவாயைப் பெற்று மக்களின் வாழ்க்கைத்தர உயர்வுக்கான திட்டங்களை நிறைவேற்றி வந்தார். மேலும் முதலாளித்துவ சக்திகளை மக்களின் துணையோடு முறியடித்த சாவேசின் நினைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக்கொடி தாழப்பறக்கவிடப்படும் எனவும் பாண்டியன் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி விடுத்துள்ள இரங்கல்செய்தியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு அரணாகவும் திகழ்ந்த சாவேசின் மரணம் ஒடுக்கப்பட்ட உலக மக்களுக்கு பேரிழப்பாகும்.என்க்கூறியிருக்கிறார்.









0 comments:
Post a Comment