வவுனியா அல் – ஹாமியா மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாடசாலையின் மாணவர்களும் பெற்றோரும் இணைந்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய மாணவர்களும் பெற்றோர்களும் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாத நிலையில் பாடசாலையின் செயற்பாடுகள் இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த வருடம் இடம்பெற்ற கா.பொ.த. சாதாரண தர பரீட்சையில் இப்பாடசாலைக்கு சிறந்த பெறுபேருகள் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் கல்வி செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது. இதற்கு அரசியல்வாதி ஒருவரின் இணைப்பாளராக செயற்படுகின்ற ஒருவரே காரணமாக உள்ளார்.
வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தொடர்ந்தும் கொடுக்கப்பட்டு வருகின்ற அழுத்தத்தின் காரணமாக இந்த பாடசாலையில் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.இந்த நிலையில் இந்த பாடசாலையில் தற்போது உள்ள அதிபரை இடமாற்ற வேண்டாம் எனவும் மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் வெற்றிடத்திற்கு ஆசிரியர்களை உடன் நியமிக்க கோரியும் பாடசாலை நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறக்கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸாரும் வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிப்பாளரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிப்பாளர் வழங்கிய வாக்குறுதிகளையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக வவுனியா அல்-ஹாமியா மகா வித்தியால அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment