சவுதி அரேபியாவில் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு பலத்த மழை
பெய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட பலத்த மழையால் தாழ்வான
பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதில் 13 பேர் பலியானதாகவும், நான்கு
பேரை காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் கார்கள் தத்தளிப்பதையும், மக்கள்
மரங்களின் அடியில் ஒதுங்கியிருப்பதையும், தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
மக்கள் வெட்டவெளிகளில் ஒதுங்கவேண்டாம் என்று மக்கள் பாதுகாப்பு ஆணையம்
கேட்டுக்கொண்டுள்ளது.
தலைநகர் ரியாத், பாகா, ஹெயில் ஆகிய இடங்களில் மக்கள் மழையில் பலியாகி
உள்ளனர். ஞாயிறு அன்று சவுதியின் உள்துறை அமைச்சர், இளவரசர் முகமது பின்
நயெப், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படும்
மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருமாறு கூறியுள்ளார். நிலைமையை அவர்
தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இதுபோல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஜெட்டாவில்
123 பேர் இறந்தனர். பின்னர், 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர்
பலியானார்கள். இதுபோன்ற அவசர நிலைமைகளுக்கு சவூதி அரசு தயார் நிலைமையில்
இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment