இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/02/2013

எகிப்து அமைச்சரவையின் அச்சுறுத்தல் முர்சி ஆதரவாளர்களால் நிராகரிப்பு


முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க அந்நாட்டு இராணுவ ஆதரவு பெற்ற அமைச்சரவை புதிய அச்சுறுத்தல் விடுத்த போதும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை நிராகரித்து தலைநகர் கெய்ரோவில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எகிப்தின் இடைக்கால அமைச்சரவை தலைநகர் கெய்ரோவிலிருக்கும் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும்படி கடந்த புதன்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை விட வேறு தேர்வு இல்லை என முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மறுபுறத்தில் எகிப்து நிர்வாகத்தின் புதிய அச்சுறுத்தலையடுத்து ஒன்றுகூடும் சுதந்திரத்தை மதிக்குமாறு எகிப்திடம் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை கோரியுள்ளது.

ஜனநாயக முறையில் தேர்வாகி ஓர் ஆண்டு மாத்திரமே பதவியிலிருந்த மொஹமட் முர்சியை கடந்த ஜூலை 3ஆம் திகதி இராணுவம் சதிப் புரட்சி மூலம் பதவி கவிழ்த்தது. முர்சி மீண்டும் பதவியில் அமர்த்தப்படும்வரை ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப் போவதில்லை என முர்சி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகிறனர்.

முன்னதாகவும் எகிப்து நிர்வாகம் முர்சி ஆதரவாளர்களை கலையுமாறு பலமுறை அச்சுறுத்தல் விடுத்த போதும் அதனை ஆதரவாளர்கள் தொடர்ந்து நிராகரித்து வந்தனர். எனினும் பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கெய்ரோவின் ரபா அல் அதவியா மற்றும் நஹ்தா சதுக்கங்களில் முர்சி ஆதரவாளர்கள் நேற்றும் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர். ஆனால் கட்டம் கட்டமான நடவடிக்கை மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்படுவார்கள் என இடைக்கால அமைச்சரவை கூறியுள்ளது. “ரபா அல் அதவியா மற்றும் நஹ்தா சதுக்கங்களில் தொடரும் தீவிரவாத செயல்கள் மற்றும் பாதைகளை முடக்கிவைத்திருப்பதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அது தேசத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானது” என அமைச்சரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு இணங்க பொலிஸார் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

எனினும் இந்த அறிவிப்பில் கால அவகாசம் குறித்து எந்த விபரமும் தெளிவுபடுத்தப்படாத போதும் உள்துறை அமைச்சு பின்னர் வெளியிட்ட அறிக்கையில் இது பற்றி விளக்கப்பட்டிருந்தது. அதில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் படிப்படியாக நடவடிக்கையை முன்னெடுக்கும் என விபரிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் புதிய அச்சுறுத்தல்களால் ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்படாது என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவு துணைத் தலைவர் இஸ்ஸாம் அல் எரியான் உறுதியளித்துள்ளார். “முழு உலகத்திற்கும் முன்னால் படுகொலைகள் இடம்பெறும் என எதிர்பார்க்க முடிகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸாரை ஏவிவிடும் முட்டாள்தனமான அமைச்சரவையின் திட்டத்திற்கு எகிப்தின் சுதந்திரமான மக்கள் மற்றும் உலகு எதிராக நிற்க வேண்டும்” என்று எரியான் வலியுறுத்தினார்.

கெய்ரோவின் வட கிழக்கில் அமைந்திருக்கும் முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக் காரர்களின் பிரதான முகாமான ரபா அல் அதவியா பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள சதுக்கத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் 70க்கும் அதிகமான முர்சி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். தவிர கெய்ரோ பல்கலைக் கழகத்திற்கு அருகிலுள்ள நஹ்தா சதுக்கத்திலும் முர்சி ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

அமைச்சரவை அச்சுறுத்தலுக்குப் பின் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் கிஹாத் அல் ஹதத், “எந்த மாற்றமும் இல்லை” என்றார். இந்த அச்சுறுத்தல் மூலம் எகிப்தியருக்கு எதிராக தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிடப் போவதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த முடிவு மூலம் சட்டத்தை மதிக்காத கும்பல் முகாம்களை கைப்பற்றப் பார்ப்பது உறுதியாகிறது என்றும் ஹதத் கூறினார். இது தொடர்பில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மற்றொரு உறுப்பினரான மொஹம்மட் அல் வல்டஜி ஏ. பி. செய்திச் சேவைக்கு கூறும்போது, “இராணுவம் தனது பிரதான நோக்கமான எகிப்து எல்லையை பாதுகாப்பதை மறந்துவிட்டு, தனது சொந்த மக்களை கொல்ல தீர்மானித்திருக்கிறது” என்றார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் மெரி ஹார்க் வன்முறையை தவிர்க்குமாறு கோரியுள்ளார் “மக்கள் ஒன்றுகூடும் உரிமையை மதிக்குமாறு உள்துறை அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் பாதுகாப்பு படையினரின் முயற்சி மேலும் ஒரு இரத்தக் களரியையே ஏற்படுத்தும் என சர்வதேச மன்னிப்புச்சபை எச்சரித்துள்ளது. “எகிப்து பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அத்துமீறல்களில் ஈடுபட்டதை கடந்த கால பதிவுகள் உறுதி செய்கிறது. இந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு மேலும் துஷ்பிரயோகங்களுக்கு அனுமதிப்பதாகவே அமையும்” என்று மன்னிப்புச் சபையின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கான இயக்குனர் ஹஸ்ஸிபா ஹட்ஜ் சஹ்ருய் குறிப்பிட்டார்.

இதனிடையே இன்று வெள்ளிக் கிழமை மற்றொரு பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு முர்சி ஆதரவுக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. “இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான எகிப்து” என்ற தொனிப்பொருளில் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் அமைச்சரவை தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் முர்சி ஆதரவு கூட்டணியின் பேச்சாளர் அல் ஜkரா தொலைக்காட்சிக்கு அளித்த அறிவிப்பில், வெள்ளிக்கிழமை மில்லியன் பேர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

“முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பல படுகொலைகளைச் செய்த இராணுவ சதிப்புரட்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பின் யார் உண்மையான தீவிரவாதிகள் என்பதை எகிப்து தேசம் உணர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் என்ன செய்தாலும் அவர்களது கலகக்கார செயல்களுக்காக நாம் அமைதியாக இருக்கப் போவதில்லை. யார் அமைதியானவர்கள் யார் தீவிரவாதத்தை தூண்டுபவர்கள் என்பது உலகுக்குத் தெரிந்திருக்கும். எமது அமைதி துப்பாக்கி ரவைகளையும் விட பலமானது என்பதை உறுதி செய்வோம்” என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா