இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/20/2014

கல்முனையில் இன்று நள்ளிரவு தொடக்கம் மாடுகள் அறுப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி; முதல்வர் அறிவிப்பு!

-எம்.வை.அமீர்-

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் இன்று நள்ளிரவு தொடக்கம் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதற்கு மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியப்பர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் விசேட அறிவித்தல் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்டுள்ளார்.

நோய் எதுவும் இல்லை என மிருக வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளை மாத்திரமே அறுக்க முடியும் என அவர் அந்த அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனை கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்றும் மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் இறைச்சிக்காக மாடு அறுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த புதன்கிழமை (12) மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த மாதம் 27ஆம் திகதி தொடக்கம் இப்பகுதியிலுள்ள மாடுகள் தினசரி பரிசோதிக்கப்பட்டதன் பிரகாரம் பிந்திய ஒரு வார காலமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குள் எந்தவொரு மாடும் நோய்த் தாக்கத்திற்கு உட்படவில்லை என அன்றைய தினம் இதன்போது மிருக வைத்திய அதிகாரியினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கல்முனையில் மாடுகளை விநியோகிக்கும் இடமொன்றுக்கு முதல்வர் தலைமையில் சென்ற அதிகாரிகள் அறுபதுக்கு மேற்பட்ட மாடுகளை நேரடியாக பார்வையிட்டு பரிசோதித்தனர்.

இதன்போது குறித்த மாடுகள் யாவும் தேகாரோக்கியத்துடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்நிலைவரம் தொடர்பில் கால்நடைகள் உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் அன்றைய தினம் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

இதன் பிரகாரம் இன்னும் ஐந்து நாட்களுள் நிலைமையை மேலும் அவதானித்து இறுதித் தீர்மானம் ஒன்றை 18-03-2014 செவ்வாய்க்கிழமை எடுக்கவிருப்பதாக முதல்வர் நிசாம் காரியப்பர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிரகாரம் இப்பகுதியில் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான மாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று மிருக வைத்திய அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே மாடுகள் அறுப்பதற்கான இந்த அனுமதியை முதல்வர் வழங்கியுள்ளார்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் கடந்த 27ஆம் திகதி தொடக்கம் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதும் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா