(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹிப் முதல்வர் பாவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான ஒரு வார கால அவகாசத்தினை ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ள நிலையில் இராஜினாமா செய்வது தொடர்பாக மக்களின் கருத்துக்களை
கேட்டறியும் “மக்கள் சந்திப்பு” சாய்ந்தமருது “லீ மெரிடியன்” வரவேற்பு மண்டபத்தில்
நேற்று (31.10.2013) இரவு நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபையின் கௌரவ முதல்வராக கலாநிதி சிராஸ்
மீராசாகிப் குறித்த சபையின் இம்முறைக்கான ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்தும் பதவியில்
இருக்க வேண்டுமென்று மக்கள் ஏகமனதாக தீர்மானம் செய்து பிரகடனம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அப்பிரகடனம் சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபாவிடம்
கையளிக்கப்பட்டு அவர் ஊடாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி
அமைச்சருமான றவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது
ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா, கல்முனை ஶ்ரீ சுபத்ராராம
விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், மாநகர சபை உறுப்பினர்களான ஏ. அமீர்,
ஐ.எம். பிர்தௌஸ், ஏ. நிசார்டீன், ஏ.எச்.எச்.எம். நபார், சீ.எம்.முபீத் ஆகியோருடன்
சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் உட்பட பிரதிநிதிகள், உலமாக்கள்,
கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், கழகங்களின்
உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு கல்முனை
மாநகர முதல்வர் சிராஸ் உரையாற்றுகையில்.
நான் கட்சிக்கும்,
கட்சி தலைமைத்துவத்திற்கும் என்றும் கட்டுப்பாட்டவனாகவும், மதிப்பளிப்பவனாகவும்,
விசுவாசம் உடையவனாகவும் இருக்கின்றேன். இந்நிலையில் கட்சி என்னை முதல்வர்
பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு பணித்துள்ளது. இப்பதவியினை இராஜினாமா செய்வது
என்பது எனக்கு ஒரு பெரியவிடயமல்ல, கட்சி என்னைப் பணித்த கனத்திலேயே நான்
இராஜினாமாச் செய்திருக்க முடியும். ஆனால் கடந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலில்
பொதுமக்களாகிய நீங்கள் எல்லோரும் விஷேடமாக பெண்கள் எனக்கு பூரண ஆதரவை வழங்கி அமோக
வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்தீர்கள், அத்துடன் முதல்வர் நியமனத்தில் இழுபறி
நிலை காணப்பட்டபோது நீங்கள் எனக்காக போராட்டங்களை நடாத்தி முதல்வர் பதவியில் என்னை
அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுடைய மேலான
கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டுச்
செயற்படவேண்டியது எனது கடமையாகும். இதனால்தான் இந்த மக்கள் சந்திப்பை
ஏற்பாடுசெய்துள்ளேன். நீங்கள் எனக்கு வழங்கிய அமானிதமான கல்முனை மாநகர முதல்வர்
பதவி. எனவே இது தொடர்பில் நீங்கள் என்ன முடிவினை மேற்கொள்கின்றீர்களோ அதற்கு இனங்க
எனது முடிவு அமையும். இராஜினாமா செய்வது தொடர்பான உங்களது முடிவினை நீங்கள் தெரிவியுங்கள்
என முதல்வர் சிராஸ் தெரிவித்தார்.
முதல்வர்
சிராஸின் உரை முடிவடைந்ததும் பொது மக்கள் அனைவரும் எழுந்து நின்று தக்பீர்
முழக்கம் செய்து முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தான் மாநகர சபையின் தற்போதைய
ஆட்சிக்காலம் முழுவதும் முதல்வராக பதவி வகிக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக கோசங்களை
எழுப்பிய வண்ணம் மேடையை நோக்கி வந்து முதல்வர் சிராசை தூக்கி தங்களது தோழில்
சுமந்தவர்களாக தொடர்ந்தும் கோசங்களை எழுப்பி சாய்ந்தமரு ஜூம்ஆ பள்ளிவாசல் இதற்கான
பூரண ஒத்துழைப்பினை நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
இங்கு கல்முனை
ஶ்ரீ சுபத்ராராம விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், மாநகர சபை
உறுப்பினர்களான ஏ. அமீர், ஐ.எம். பிர்தௌஸ் ஆகியோர் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ்
தொடர்ந்தும் தனது பதவியிலிருந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்று தங்களது
கருத்துக்களை தெரிவித்து உரைநிகழ்த்தினர்.
மண்டபம் நிறைந்த
பொதுமக்களால் நிறைவேற்றப்பட்ட அப்பிரகடம் வருமாறு..
ஊடாக :
கௌரவ தலைவர்,
நம்பிக்கையாளர்
சபை,
ஜும்மா பள்ளிவாசல்,
சாய்ந்தமருது.
கௌரவ தேசிய
தலைவர் அவர்களுக்கு,
ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ்,
கொழும்பு.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சாய்ந்தமருதின் அரசியல் சுமூகத்திற்கான தீர்மானங்கள்
கடந்த 15/10/2013
அன்று தாங்கள், கல்முனை மாநகர சபையின் கௌரவ முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாகிப்
அவர்களை குறித்த பதவியிலிருந்து உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளீர்கள்
என்பதை சாய்ந்தமருதின் பல்வேறுபட்ட
சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள் மற்றும் அமைப்புகளாகிய நாம்
அறிகிறோம்.
இருப்பினும், கடந்த 08.10.2011 அன்று நடைபெற்ற
கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
அடிப்படைத் தொண்டர்களாகிய நாம் என்றும் இல்லாத அளவிற்கு மிகையான ஆர்வம், நம்பிக்கை, விசுவாசங்களுடன் மாத்திரம் கட்சிக்கான தேர்தல் பணிகளைச் சுமந்தவர்களாகவும்,
கட்சியின் வெற்றிக்காக
அயராது உழைத்து, கல்முனை மாநகர சபைக்கான
தேர்தல்கள் வரலாற்றில் நமது கட்சி ஒரு ஆசனத்தை மேலதிகமாக பெறும் அளவிற்கு எதிர்க்கட்சியினரை அக்களத்தில் தோற்கடித்ததையும், விஷேடமாக எமது மண்ணில் அவர்களை தொடர்ந்தும்
நிலைகொள்ளாமல் ஆக்கியதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
இவ்வாறு, எமது
கட்சியின் மாபெரும் வெற்றிக்கும், நம்பகத்திற்கும் எமது மக்கள் இட்ட மாபெரும் முதலீட்டிற்கு இலாபகமாக
சாய்ந்தமருதின் கடந்த 35 ஆண்டுகள் அரசியல் அதிகார வரலாற்றில், ஆற்றல் மிக்க ஒரு முதல்வரை எங்கள் மாநகர
ஆட்சிப்பிரதேச மக்களுக்கு பணிசெய்ய பாரம்சாட்டிய உங்களை இத்தருணத்தில் மீண்டும்
ஒரு முறை நன்றிகளுடன் நினைவு கூறுகின்றோம்.
நாமும் எமது
கட்சியும் இவர்மீதுவைத்த நம்பிக்கை ஒன்றும் வீணாகிப்போகவுமில்லை. சிறந்த நிருவாகத்திறனும், பிரதேச பாரபட்சமற்ற மனோபாவமும், கட்சியின்
தொண்டர்களை அரவணைத்து பயணிக்கும் ஆற்றலும்
மிகையாகப் பெற்ற ஒரு முதல்வராக, இலங்கை முதல்வர்களுள் மாணிக்கம் என்றும், இவரை நான் காண்கின்றேன் என்று சாய்ந்தமருதுதில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில்
தாங்கள் பாராட்டி வியந்ததற்கினங்க, இவரின் திருப்திகரமான நல்லாட்சிக்கான
சாட்சியாளர்களாக, கல்முனை, மருதமுன, நற்பிட்டிமுனை போன்ற இம்மாநகர ஆட்சிப்பிரதேச
மக்களே உள்ளனர் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு மிகத்தாழ்மையுடன் கொண்டுவர
விரும்புகின்றோம்.
தாங்கள் ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர்
என்கின்ற அந்தஸ்திலும், கலாநிதி சிராஸ் மீராசாகிப் அவர்கள் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு
விசுவாசமாக செயற்படுகின்ர கட்சியின் ஒரு அதிஉயர்பீட உறுப்பினர் என்கின்ற
அடிப்படையிலும், குறித்த பதவி இராஜினாமவிற்கான தங்களின் கட்டளையும், இது
குறித்து கௌரவ முதல்வர் அவர்களின்
தலைசாய்ப்பும், கீழ்படிதலும் நமது
பேரியக்கத்தின் மீதான தொண்டர்களின்
மற்றும் பொறுப்புவாய்ந்தவர்களுக்கு உண்டான கட்டுப்பாடு, ஒழுக்கநெறிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான போசனைகளாகும் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.
சாய்ந்தமருதின்
அரசியல் அபிலாஷைகளில் ஒன்றை சற்று மீட்டிப்பாற்போமேயானால், அது இற்றைக்கு 15 ஆண்டுகளுக்கு
முன் சாய்ந்தமருதிற்கான ஒரு தனியான
உள்ளூராட்சி சபையை வேண்டி நின்றதாகவே இருக்கும். இருந்தபோதிலும், சென்ற கல்முனை மாநகர சபைக்கான தேர்தலின் வெற்றிக்குப்பின்னர், அச்சபையின் முதல்வர்பதவி சாய்ந்தமருதிற்கு
வழங்கப்பட்டதனால் மக்களின் அவ்வாறானதோர் கோரிக்கை வீரியம்பெறாமல் சற்று பிற்போடப் பட்டிருந்ததுதான் உண்மை.
இதுதவிர, இவ்வளவு
காலமும் கௌரவ முதல்வர் அவர்கள் கல்முனை மாநகரத்தை நிர்வகித்துவந்த பாதையில், சபையின் சக கௌரவ உறுப்பினர்களுடன் இணைந்து
தீட்டிய பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான அபிருத்தித்
திட்டங்களும் பல்வேறு பிரதேசங்களில் நடைமுறையில் பாதி வழியில் இருந்துவருவதையும், இதனை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்க தற்போதைய முதல்வரின் பதவியிருப்பு மிக அவசியம் என்பதையும், தங்களின்
சிறப்புக்கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
இருப்பினும், சாய்ந்தமருது பொது மக்களாகிய நாம் எமது
கட்சிக்கு ஆற்றிய, ஆற்றி வருகின்ற தொண்டுகளையும், ஆதரவுகளையும் அங்கீகரித்து, நீங்கள் அன்று வழங்கிய கல்முனை மாநகர சபைக்கான முதல்வர் பதவியை தொடர்ந்தும் நிலைபெறவைக்கவும், அதனூடாக சாய்ந்தமருதின் எதிர்கால அரசியல் சுமூகவாழ்வு
ஒன்றிற்கான எமது நிலைப்பாட்டையும் விளக்கி நிற்கின்ற கீழே குறிப்பிடப்பட்டுள்ள
சாய்ந்தமருது பொதுமக்களின் ஏக மனதான தீர்மானங்களை தங்களின் மேலான கவனத்திற்கு
கொண்டு வருவதுடன் அதற்கான ஒப்புதலையும் தங்களிடம் இத்தால் நாடி நிற்கின்றோம்.
தீர்மானம்
- 01 :
கல்முனை மாநகர
சபையின் கௌரவ முதல்வராக கலாநிதி சிராஸ்
மீராசாகிப் அவர்கள் தற்போது வகித்துவரும்
பதவியில் குறித்த சபையின் இம்முறைக்கான ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்தும் பதவியில்
இருக்க எமது கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் ஒப்புதலையும்
அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.
தீர்மானம்
- 02 :
தற்போது சாய்ந்தமருதின்
அரசியல் அதிகார சுமூகத்திற்கு ஏற்பட்டுள்ள விரிசலையும், சவாலையும், எதிர்காலத்தில் பூரணமாக தவிர்த்துக் கொள்ளும் நல்லெண்ணத்தில், அடுத்து வருகின்ற ஊள்ளூராட்சிக்கான தேர்தலை சாய்ந்தமருது தனியான ஓர் உள்ளூராட்சி
மன்றமாக நின்று சந்திக்க எமது கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
தீர்மானம் - 03 :
35 ஆண்டுகளுக்கு
பிறகு எமது ஊருக்கு கிடைத்த மாநகர
முதல்வர் எனும் இம்மாநகர சபையின் முதல்வர்
பதவியை, அரசியல் அந்தஸ்தை நாம் நிரப்பமாக அனுபவித்துகொள்ள, எமது கட்சியின் சம்பந்தப்பட்ட தலைமை பீடத்துடன் சாய்ந்தமருது
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய
குழு சுமூகமாக பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் - 04 :
சாய்ந்தமருது
மக்களின் சமூக வாழ்வியலை நெறிப்படுத்துவதில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயலின்
நம்பிக்கையாளர் சபை என்றும் தனது கடமையில் இருந்து விலகிப்போன சந்தர்ப்பங்கள்
கிடையாது. தற்போது எமது ஊரின் அரசியல் அந்தஸ்து சந்தித்துள்ள மேலே விபரிக்கப்பட்ட
இச்சூழலை நெருக்கடியிலிருந்து ஐதாக்கி இது குறித்த தீர்மானங்களை
சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு சாதகமான தீர்வை எமது மக்களுக்கு
பெற்றுத்தருமாறு நம்பிக்கையாளர் சபையினை மிகப்பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
சமூக நிறுவணம் / அமைப்பு
0 comments:
Post a Comment