யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலைச் சந்தி பலகாட்டுப் பகுதியில் சனநடமாட்டமற்ற காட்டுப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சங்கானை சித்தன்கேணியைச் சேர்ந்த இராசதுறை கஜேந்தினி (27) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தெல்லிப்பழை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அங்கிருந்து டிசம்பர் 6ஆம் திகதி நிர்வாகத்தினருக்குத் தெரியாமல் வெளியேறி தனியாக சுற்றித் திரிந்துள்ளார்.
அவர் டிசம்பர் 7ஆம் திகதி இரவு ஆலடிப் பகுதியிலுள்ள கோயில் ஒன்றில் தனிமையில் இருந்ததைக் கண்ணுற்ற அப்பகுதி மக்கள் கிராம சேவையாளரிடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கிராம அலுவலர் பொலிஸாருடன் விசாரணை நடத்தியபோது அப்பெண் தனது சொந்த இடத்தையும் பெயரையும் கூறியுள்ளார்.
இதன்பின்னர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆட்டோ ஒன்றில் குறித்த பெண்ணை அப்பகுதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் சென்றபோது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தமையினால் எவரும் ஏற்கவில்லை.
இதனையடுத்து பொலிஸ் கான்ஸ்டபிள் அதிகாலை 1.30 மணியளவில் அப்பெண்ணை மீளவும் வலந்தலைச் சந்தியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
இதன்பின்னர் காணாமல்போன இப்பெண் பாழடைந்த கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் மீட்கப்பட்டபோது அவரது உள்ளாடைகள் நீக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
கடற்படை முகாம் அமைந்துள்ள இடத்துக்கருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment