இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/01/2013

சிங்கள–முஸ்லிம் கலவரத்தை தூண்ட முயற்சி: அமைச்சர் ஹக்கீம்

சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மீண்டுமொரு கலவரத்தை தூண்ட ஒரு சிறு குழுவினர் முற்படுகின்றனர் என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


 வர்த்தகத்தை மையமாக கொண்டு கம்பளையில் கலவரம் அன்று தூண்டப்பட்டது போன்று இன்றும் வர்த்தகத்தை மையமாக கொண்டே  கலவரத்தை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.



இந்த செயல்களுக்கு எதிராக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்க சகலரும்  இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.



மறைந்த கலாநிதி டி.பி.ஜாயாவின் 123ஆவது நினைவுப் பேருரை  முஸ்லிம் மகளிர் கல்வி சங்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. கலாநிதி டி.பி.ஜாயா மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பேருரை வழங்கினார்.



இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,



"பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரமடைந்தபோது முஸ்லிம்கள் அன்று பல பிரச்சினைகளை எதிர்நோக்கினர். அதுபோன்றே 30 வருட சிவில் யுத்தம் நிறைவடைந்த பின்னரான இன்றைய நிலையிலும் இலங்கை முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.



இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. அன்று வர்த்தகத்தை மையமாகக் கொண்டு 1915ஆம் ஆண்டு கம்பளையில் சிங்கள – முஸ்லிம் கலகம் தூண்டப்பட்டது.



அதே போன்று இன்றும் வர்த்தகத்தை மையமாக கொண்டே கலகத்தை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர்.  இந்த தீய நோக்கம் ஹலால் சான்றிதழ் மற்றும் சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை போன்ற பல கோணங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை சர்ச்சை மற்றும் ஹலால் சான்றிதழ் பிரச்சினைகள் வர்த்தகத்தின் பின்னணியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



நீதி அமைச்சர் என்ற வகையில் சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளேன்.இந்த உரைக்கு தேவையான சகல தரவுகளையும் தற்போது சேகரித்துக்கொண்டிக்கின்றேன். 



முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான அநீதிகளுக்கு  டி.பி. ஜாயா  அன்று காட்டிய வழிமுறையை பயன்படுத்த வேண்டும்.



அதற்காக பயமில்லாமல் இந்த சர்ச்சைகளின் அடிப்படைகளை தெளிவுபடுத்த வேண்டும். இதனை ஒருபோதும் தனியாக மேற்கொள்ளக் கூடாது. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இதற்கு எதிராக போராடுவதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம்.



பெரும்பான்மை சமூகத்தில் சிறுப்பான்மையினருக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்கள் உள்ளனர். இவர்களுடன் நாம் இணைந்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதிராக போராட வேண்டும். இவ்வாறுதான் டி.பி.ஜாயாவும் அன்று செயற்பட்டார். 



பெரும்பான்மை சமூகத்திலுள்ள சிறிய ஒரு குழுவினரே இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். இவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் இனவாத முலாம் பூசுகின்றனர்.



இவர்களின் இந்த செயற்பாடு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களாயினும்  சிறுப்பான்மையினருக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்களின் கருத்துக்களை மழுங்கடிக்க செய்யும். இந்த பிரச்சினைகளுக்கு அவசரப்பட்டு பதிலளிக்காமல் திட்டமிட்ட முறையில் பதிலளிக்க வேண்டும்.



அப்போதுதான் எமது கருத்துக்கள் வரவேற்கப்படும். இந்த இனவாத சக்திகளுக்கு எதிராக கலாநிதி டி.பி.ஜாயா காட்டிய வழியில் பெரும்பான்மை சமூகத்தில் உள்ள சிறுப்பான்மையினருக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்களுடன் இணைந்து போராட வேண்டும்" என்றார். (TM)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா