இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/21/2013

முஸ்லிம்களுக்கான உற்பத்திகளுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழ்


VI:முஸ்லிம்களுக்கு ஹலால் தரநிர்ணயத்துக்குட்பட்ட உற்பத்திப் பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் எனவும் முஸ்லிமல்லாதோருக்கு விற்பனை செய்யப்படும் உற்பத்திகளுக்கு ஹலால் தரநிர்ணயம் அவசியம் இல்லை எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தீர்மானித்துள்ளது.

ஹலால் தரநிர்ணயம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர் தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தது.

அ.இ.ஜ.உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்ற இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் ஹலால் சான்றிதழ் தொடர்பில் பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் பாதுகாப்புச் செயலாளருடன் நடத்திய சந்திப்புகள் தொடர்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன்.

இங்கு உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் கருத்து வெளியிடுகையில் பாதுகாப்புச் செயலாளருடன் நாம் நடத்திய சந்திப்பின்போது ஹலால் விவகாரத்திற்கு தீர்வு காண்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளரும் அங்கு பிரசன்னமாகியிருந்த அரச அதிகாரிகளும் இதுதொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தினர்.

இதற்கமைய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது ஹலால் சான்றிதழைப் பெறும் வர்த்தக நிறுவனங்கள் தமது ஹலால் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கும் வகையில் ஒரு பொறிமுறையை வகுக்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஹலால் பிரிவின் தலைமை அதிகாரி மெளலவி முர்ஷித் முழப்பர் இங்கு கருத்து வெளியிடுகையில், இந்த தீர்மானத்தை ஹலால் சான்றிதழைப் பெற்றுள்ள சகல நிறுவனங்களுக்கும் நாம் அறிவிக்கவுள்ளோம். இது குறித்த வர்த்த நிறுவனங்களுக்கு சவாலான அமையலாம். இருப்பினும் நாட்டு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இதனை நடைமுறைப்படுத்துவதே பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என நாம் நம்புகிறோம்.

இருந்தபோதிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இந்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவுடன் இன்று மாலை கலந்துரையாடப்படும் எனவும் அதற்கமைய எட்டப்படும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள உலமா சபை தயாராகவிருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி,ஹலால் பிரிவு அதிகாரி தாரிக் மஹ்மூத், ஊடகப் பிரிவு பொறுப்பதிகாரி மெளலவி பாஸில் பாரூக் ஆகியோரும் கருத்துக்களை வெளியிட்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா