இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/12/2013

பாகிஸ்தான் தேர்தலில் நவா ஷெரிப் கட்சி வெற்றி


பாகிஸ்தானில் நடைபெற்ற  தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முன்னிலையிலுள்ளது. 

பாகிஸ்தானில் நேற்று சனிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள்  நடைபெற்றன.  இந்தத் தேர்தலில் 342 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு 4,670 வேட்பாளர்களும் மாகாண சபைகளுக்கு சுமார் 11,000  வேட்பாளர்களும் போட்டியிட்டனர். 

தேர்தல் நடைபெற்ற 272 தொகுதிகளில் நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 120 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையிலுள்ளது. 

இதேவேளை, இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரிக் ஈ இன்சாப் கட்சியின் வேட்பாளர்கள் 35 தொகுதிகளிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர்கள் 34 தொகுதிகளிலும் முன்னிலையிலுள்ளனர்.

எனவே, பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரிப் மூன்றாவது தடவையாகவும் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. 

1985ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாண முதல் அமைச்சராக பதவி வகித்த நவாஸ் ஷெரிப், பெனாஷிர் பூட்டோ ஆட்சிக் காலத்தில் இரண்டு  தடவைகள் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். பாகிஸ்தானின் பிரதமராக 1990ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவர் ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மீண்டும் 1997ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து இரண்டாவது தடவையாக பிரதமரான அவர், 1999ஆம் ஆண்டு முன்னாள் இராணுவத் தளபதி முஷாரப் நடத்திய இராணுவப் புரட்சியால் ஆட்சியை விட்டு நீக்கப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி, ஊழல், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இராணுவ நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவுக்கு நேர்ந்தது போல், நவாஸ் ஷெரிப்புக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என வதந்தி பரவியது.

சவூதி மன்னர் ஃபஹத் மற்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் தலையீட்டின் பேரில் நவாஸ் ஷெரிப், தண்டனையிலிருந்து தப்பி 10 வருடங்கள் சவூதி அரேபியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்த விடுதலைக்காக பாகிஸ்தானில் உள்ள சுமார் 83 இலட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொத்துகளை இழக்க சம்மதித்த அவர், 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்தவும் ஒப்புக்கொண்டார்.

அவர் மீது நடைபெற்ற விசாரணையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், நவாஸ் ஷெரிப் நாடு திரும்பலாம் என்று கூறியது. இதனையடுத்து, 10-8-2007 அன்று அவர் இஸ்லாமாபாத் வந்தார். ஆனால், விமான நிலையத்திலேயே அவரை தடுத்து நிறுத்தி மீண்டும் சவூதி அரேபியாவிற்கு திருப்பி அனுப்ப முஷாரப் உத்தரவிட்டார்.

அதன் பின்னர், சவூதி மன்னர் தலையீட்டின் பேரில்25-11-2007 அன்று பாகிஸ்தான் வந்த அவர், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்திருந்தார்.

நேற்றைய தேர்தலில் அவரது கட்சி அபார வெற்றி பெற்றதையடுத்து பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரிப் மூன்றாவது தடவையாகவும் பதவி ஏற்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா