பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற நவாஸ் ஷரீபின் முஸ்லிம் லீக் கட்சி புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சி
உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின்படி அமோக வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் அந்த கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிசெய்ய சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நவாஸ் ஷரீபின் வெற்றியையொட்டி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோர் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளனர். 63 வயதான நவாஸ் ஷரீப் மூன்றாவது தடவையாக பாகிஸ்தான் பிரதமர் பதவியை ஏற்க தயாராகி வருகிறார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தஹ்ரிக் இ இன்சாப் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்நிலையில் உண்மையான எதிர்க் கட்சியாக செயற்படவிருப்பதாக இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் முடிவுகளின் படி தோல்வியடைந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணியை விடவும் நவாஸ் ஷரீபால் வலுவான ஆட்சி ஒன்றை அமைக்க சாத்தியம் ஏற்பட்டிருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இம்முறை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. எனினும் தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கட்சி உட்பட மதச் சார்பற்ற கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளின்படி நவாஸ் ஷரீபின் முஸ்லிம் லீக் கட்சி குறைந்தது 125 ஆசனங்களை வென்றுள்ளதோடு இம்ரான் கானின் தஹ்ரிக் இ இன்சாப் மற்றும் ஆளும் கட்சி ஆகியன சுமார் 40க்குள்ளேயே ஆசனங்களை பெற்றுள்ளன. இந்நிலையில் முஸ்லிம் லீக் சுமார் 130 ஆசனங்களை கைப்பற்றும் என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆட்சி அமைக்க 137 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவை பெற வேண்டி ஏற்பட்டுள்ளது.
இதில் நவாஸ் ஷரீப் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும்பட்சத்தில் பாராளுமன்றத்தில் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 70 ஆசனங்களிலும் அதிக ஆசனங்களை வெல்ல வாய்ப்பு உள்ளது. சனிக்கிழமை நடந்த தேர்தலில் சுமார் 60 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றது.
இதுவே 2008 ஆம் ஆண்டில் 44 வீதமானோரே வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிவுகளை அடுத்து கராச்சி பங்குச் சந்தையில் பங்குகள் விலை உயர்வுகண்டது. நவாஸ் ஷரீப் அரசு திறந்த பொருளாதாரத்துக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. புதிய அரசின் நிதி அமைச்சர் பதவி மீண்டும் ஒருமுறை இஷாக் தர்ரிடம் வழங்கப்படும் என முஸ்லிம் லீக் கட்சியின் பேச்சாளர் சித்திக் பாருக் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். இஷாக் தர் நவாஸ் ஷரீபின் 1998 மற்றும் 1999 அரசிலும், 2008 அரசிலும் நிதி அமைச்சராக செயற்பட்டுள்ளார்.
மறுபுறத்தில் இம்ரான்கான் கட்சி பாகிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் கைபர் பக்துன்கவா மாகாண சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க தகுதி பெற்றுள்ளது.
இங்கு நடைபெற்ற 99 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் இம்ரான்கான் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.
இதற்கு அடுத்தபடியாக ஜமாஅத் உலமா-இ-இஸ்லாம் கட்சிக்கு 15 இடங்களே கிடைத்துள்ளது. எனவே கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தையும் இம்ரான்கான் கட்சி பெற்றுள்ளது. இப்பகுதி தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். பொதுவாக தலிபான்களுடன் இம்ரான்கான் இணக்கமான உறவு வைத்துள்ளார்.
இப்பகுதியில் அமெரிக்க உளவுத் துறை ஆளில்லா விமானம் மூலம் நடத்தும் ஏவுகணை தாக்குதல்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும், தலிபான்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பாகிஸ்தான் இராணுவம் நடத்தும் தாக்குதலை நிறுத்தவும் வலியுறுத்தி வருகிறார்.
எனவே இம்ரான்கான் கட்சிக்கு இப்பகுதியில் கடும் செல்வாக்கு உள்ளது. ஆட்சி அதிகாரம் இல்லாத நேரத்தில் இம்ரான்கான் சாதாரணமாக இது போன்ற கோரிக்கைகளை அரசுக்கு விடுத்து வந்தார். தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.
அதேநேரத்தில் கைபர் பக்துன்கவா மாகாண சட்ட சபையில் ஆட்சி அமைக்க உள்ளார். இது போன்ற ஆட்சி ஆதிகாரம் தனது கையில் வரும் வேளையில் ஏற்கனவே விடுத்து வந்த கோரிக்கைகளை அவர் நிறைவேற்றும் படி தலிபான்கள் கட்டாயப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். அதை அவர் சமாளிப்பாரா? என அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷானிடம் தொலைபேசியில் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், மத்தியிலும் கைபர் - பக்துன்கவா மாகாணத்திலும் ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் வெளியிடப்பட்டதும் எங்களது கருத்து தெரிவிக்கப்படும். அது வரை காத்திருக்கிறோம் என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாகிஸ்தான் தேர்தல் குறித்து அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு புதிய அரசுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். எனினும் அவரது வாழ்த்தில் நவாஸ் ஷரீபின் பெயரை குறிப்பிடுவதை தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நவாஸ் ஷரீப் தனது தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்கா முன்னெடுக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இருந்து பாகிஸ்தானை விலக்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதேபோன்று பாகிஸ்தானுடன் புதிய உறவை ஏற்படுத்த விரும்புவதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பு உறவை பலப்படுத்த இந்தியா வரும்படியும் நவாஸ் ஷரீபுக்கு மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். பாகிஸ்தானில் மின்சார தட்டுப்பாடு அந்நாட்டு பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புச் செலுத்தியுள்ளது.
அங்கு வேலையில்லா பிரச்சினையும் உச்ச நிலையில் உள்ளது. இவைகளுக்கு தீர்வுகாண வேண்டிய கடும் சவாலுக்கு நவாஸ் ஷரீப் அரசு தள்ளப்பட்டுள்ளது.
Bas TN
0 comments:
Post a Comment