சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான, (24) கைல் ஜார்விஸ் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சிம்பாப்வே அணிக்காக 8 டெஸ்டில் பங்கேற்று 30 விக்கெட்டுகளையும், 24 ஒரு நாள் போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும், ஒன்பது 20 ஓவர் போட்டிகளில் 10 விக்கெட்டுக்களையும் இவர் கைப்பற்றி இருக்கிறார்.
சிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. வீரர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்க முடியாமல் தவிக்கிறது.
இதனை காரணம் காட்டி சிம்பாப்வே அணியை ஜார்விஸ் துறந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....
சில அணிகளில் இருந்து கடந்த சில மாதங்களாக எனக்கு அழைப்பு வந்தது. ஆனாலும் தொடர்ந்து சிம்பாப்வே அணிக்காக விளையாடினேன்.
கடந்த வாரம் சம்பள பிரச்சினை எழுந்த போது, சிம்பாப்வே கிரிக்கெட்டை விட்டு விலக இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன்.
எனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, கவுண்டி போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளேன். இங்கிலாந்தின் முன்னணி கவுண்டி அணியுடன் 3 ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.
எனக்கு என்று நிலையான வருமானம் அவசியம். அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இதனை இரசிகர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அணியின் சக வீரர்களிடமும் நேற்று முன்தினம் சொல்லி விட்டேன்.
அவர்களும் நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்பதை புரிந்து கொண்டனர். சிம்பாப்வே தான் எப்போதும் எனது சொந்த அணி. கடந்த சில ஆண்டுகளாக எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற பாகிஸ்தான் தொடரில் சிம்பாப்வே அணி சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துகள்.
இவ்வாறு ஜார்விஸ் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment