இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/11/2013

பருவகால பயணச் சீட்டினை பெற்றும் தனியார் பஸ் வண்டில் செல்லும் மாணவர்கள்! தீருமா இவர்களின் பிரச்சினை?


(அகமட் எஸ். முகைடீன்)
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவர்கள் பருவகால பயணச் சீட்டினை பெற்றிருந்தபோதிலும் அவர்களுக்கான தனியான பஸ் போக்குவரத்துச் சேவையினை இலங்கை போக்குவரத்துச் சபை கல்முனை டிப்போ சீராக மேற்கொள்வதில்லை என தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பருவகால பயணச்சீட்டினை  பெற்று பயணிக்கும் மாணவர்களை சாரதி மற்றும் நடத்துனர்கள் வித்தியாசமான முறையில் நோக்குவதாகவும் இவர்களை பஸ்ஸில் ஏற்றுவதற்கு விருப்பம் அற்றவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். முன்கூட்டியே ஒரு மாத காலத்திற்கான பணத்தினை செலுத்தி பருவகால பயணச்சீட்டினை பெறும் இம்மாணவர்களுடன் இவ்வாறு நடந்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும்.

தொழில்நுட்பக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் காலை 8.00 மணிக்கு ஆரம்பிப்பதனால் குறித்த நேரத்திற்கு முன்னராக மாணவர்கள் சமூகமளிக்க  வேண்டும். இதனால் இவர்களுக்கான தனியான பஸ் வண்டி கல்முனை நகரிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும்போதே சரியான நேரத்திற்கு மாணவர்கள் கல்லூரிக்கு சமூகமளிக்க முடியும். அவ்வாறில்லாது பொதுவான பயணிகள் பஸ்ஸில் பணிக்கின்றபோது சகல இடங்களிலும் நிறுத்தி செல்வதனால் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் இருப்பதனால் கல்லூரியில் நடைபெறும் முதலாவது பாடத்தை இங்கிருந்து செல்லும் மாணவர்கள் இழக்கின்ற நிலை ஏற்படுகின்றது.

இதுதொடர்பில் இம்மாணவர்கள் பல முறை கல்முனை பஸ் போக்குவரத்துச்  சாலைக்கு தெரியப்படுத்திய போதிலும் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.15 மணிவரை மாணவர்கள் கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வைத்தியசாலை ஊடாக அம்பாறை என்று பெயர்பலகை இடப்பட்ட பஸ்வண்டியில் ஏறிக்காத்திருந்தபோதிலும் அந்த பஸ் வண்டி புறப்படவில்லையாம். இது தொடர்பில் சம்மாந்துறை பஸ் டிப்போவை இம்மாணவர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது 7.30 மணிக்கு கல்முனையில் இருந்து எமது டிப்போ பஸ் புறப்படும் எனக் கூறினர். ஆனால் நடத்துனரை கேட்டதும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேர சூசியின் அடிப்படையிலேயே புறப்பட்டுச் செல்ல முடியும் எனவும், அதனைத் தொடர்ந்து கல்முனை பஸ் தரிப்பிட நேரக் காப்பாளரிடம் இது தொடர்பில் முறையிட்டபோது பஸ் சாரதி நினைத்தால் போக முடியும் எனவும் தெரிவித்தனராம். இவ்வாறு ஆள் மாறி ஆளைக் காட்டி பொறுப்பற்றவிதத்தில் இவர்கள் நடந்து கொண்டமையினால் மாணவர்கள் முதல்வர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர்.


அத்தோடு இது தொடர்பிலான மகஜர் ஒன்றை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிபின் அலுவலகத்தில் கையளித்தனர். இம்மகஜரை முதல்வரின் தொலைபேசி அறிவுறுத்தலுக்கு அமைய மாநகர சபை கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் பெற்றுக்கொண்டு கல்முனை பஸ் டிப்போ உதவி முகாமையாளரை தொடர்பு கொண்டு இதற்கு நிரந்தர தீர்வு ஒன்றினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்முனை பஸ் டிப்போவை தொடர் கொண்டபோது நடவடிக்கை முகாமையாளர் தெருவிக்கையில். தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களுக்கான சேவையினை சம்மாந்துறை டிப்போ மேற்கொள்கின்றது. இம்மாணவர்களிடமிருந்து சம்மாந்துறை டிப்போ 30 வீத பணத்தை முன்கூட்டியே பெறுகின்றது. 35 வீதத்தை தொழில்நுட்பக் கல்லூரி மானியமாக சம்மாந்துறை டிப்போவிற்கு மாதம்தோறும் வழங்குகின்றனர். எனவே இதுதொடர்பில் சம்மாந்துறை டிப்போவே பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சம்மாந்துறை பஸ் டிப்போவை தொடர்பு கொண்டபோது டிப்போ பரிசோதகர் தெரிவிக்கையில்.  15 நிமிடத்திற்கு ஒரு பஸ் போக வேண்டும் அவ்வாறு போக வேண்டிய வரிசையில் உள்ள பஸ் போகாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும். இது தொடர்பான முறைப்பாடு எங்களுக்கு சம்மந்தப்பட்  மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது அதற்கான நடவடிக்கையினை டிப்போ முகாமையாளர் மூலம் மேற்கொள்வோம். இவர்களுக்கான தனியான பஸ் சேவை ஒன்று செயற்படுத்தப்படவேண்டும் ஆனால் எங்களிடம் போதிய பஸ் இல்லாமல் இருக்கிறது. பெரும்பாலான பஸ்கள் 10, 12 வருடங்களை தாண்டிய பழைய பஸ்கள் உள்ளன. ஆனால் கட்டாயம் படிக்கும் மாணவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்கு படுத்தி வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்குளுக்கு தனியான பஸ் சேவை ஒன்றினை வழங்கி அம்மாணவர்கள் நேரத்திற்கு கல்லூரிக்கு சென்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாட்டினை மேற்கொள்வது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா