இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/26/2013

சம்மாந்துறை: தேவை ஒரு கும்கி யானை


சில மாதங்­க­ளுக்கு முன்னர் வெளி­வந்த ‘கும்கி’ தமிழ் திரைப்­ப­டத்தை உங்­களில் சிலர் பார்த்­தி­ருக்கக் கூடும். இந்­தி­யாவின் விவ­சாயக் கிராமம் ஒன்றை யானையின் தாக்­கு­த­லி­லி­ருந்து பாது­காப்­ப­தற்கு மற்­று­மொரு யானையைக் கொண்டு வந்து எடுக்­கப்­படும் முயற்­சி­களை மைய­மாகக் கொண்­ட­தாக அந்தப் படத்தின் கதை அமைந்­தி­ருந்­தது.

குறித்த கிரா­மத்தின் அறு­வடைக் காலத்தில் அங்கு வரும் ‘கொம்­பன்’­என்­ற­ழைக்­கப்­படும் பாரிய யானை­யா­னது பயிர்­களைத் துவம்சம் செய்து அந்தக் கிரா­மத்­தையே நாசப்­ப­டுத்­து­வது வழக்கம். குறித்த கொம்பன் யானை­யி­ட­மி­ருந்து கிரா­மத்­தையும் விவ­சாய செய்­கை­க­ளையும் பாது­காக்கும் பொருட்டு வெளி­யி­லி­ருந்து பணம் செலுத்தி அழைத்­து­வ­ரப்­படும் யானையின் பெயரே ‘கும்கி’ என்­ப­தாகும். 
 
கொம்பன் யானை­யி­ட­மி­ருந்து அந்தக் கிரா­மத்தைப் பாது­காக்கும் விட­யத்தில் அதி­கா­ரிகள் அச­மந்­த­மாகச் செயற்­பட்­ட­தை­ய­டுத்து அக் கிரா­மத்தின் தலை­வர்கள் தமக்­கான நம்­பிக்­கை­மி­குந்த பாது­கா­வ­ல­ராக ‘கும்கி’ யானையை கரு­து­வதும் ஈற்றில் கொம்பன் யானையைக் கொன்­று­விட்டு ‘கும்கி’ செத்­து­ம­டி­வதும் கண்­ணீரை வர­வ­ழைக்கும் காட்­சி­க­ளாகும்.
 
இந்தத் திரைப்­ப­டத்தின் கதை­யோட்­டத்­திற்கும் சம்­மாந்­துறை நகரில் இப்­போது நடக்கும் யானையின் அட்­ட­கா­சங்­க­ளுக்­கு­மி­டையில் பெரி­ய­தொரு வித்­தி­சா­ய­மி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.
 
சம்­மாந்­துறை நக­ருக்குள் கடந்த சில நாட்­க­ளாக நுழைந்து இரவு வேளை­களில் யானை ஒன்று செய்யும் அட்­ட­காசம் இன்று அந்த ஊரையே கிலி கொள்ளச் செய்­தி­ருக்­கி­றது. அன்று ‘புலி­களால்’ நிம்­ம­தி­யி­ழந்தோம். இன்று ‘யானை­களால்’ நிம்­ம­தி­யி­ழக்க வேண்டி வந்­தி­ருக்­கி­றது என அங்­க­லாய்க்­கி­றார்கள் சம்­மாந்­துறை மக்கள்.
 
சம்­மாந்­து­றையில் மக்கள் மிகச் செறி­வாக வாழும் லேக் வீதி, அல­வக்­கரை பிர­தேசம், வைத்­தி­ய­சாலை வீதி, பொலிஸ் வீதி, மத்­திய கல்­லூரி சுற்­று­வட்டம் ஆகிய இடங்­களே யானையின் தாக்­கு­த­லுக்கு இலக்­கான முஸ்லிம் பகு­தி­க­ளாகும். அதே­போன்று தமிழ் மக்கள் வாழும் கோரக்­கோவில் பிர­தே­சமும் யானையின் தாக்­கு­த­லுக்கு இலக்­கான மற்­றொரு பகு­தி­யாகும்.
 
யானையின் தாக்­கு­த­லுக்கு இலக்­கான வீடு ஒன்றின் சொந்­தக்­கா­ர­ரான  ஸஹீத் தனது அனு­ப­வத்தை இப்­படி விப­ரிக்­கிறார்.
 
“ அன்று செவ்­வாய்க்­கி­ழமை இரவு 1.50 இருக்கும். எனது மனை­விதான் என்னைத் தட்டி எழுப்­பினார். வீட்­டுக்கு வெளியே பெரும் சப்தம் கேட்­டது. சம்­மாந்­து­றையில் இப்­போது கள்­வர்­களின் நட­மாட்டம் அதிகம். கள­வெ­டுக்க வந்­த­வர்­கள்தான் ஏதோ செய்­கி­றார்கள் என நினைத்துக் கொண்டு வெளி விளக்கைப் போட்­டு­விட்டு கதவு நிலை ஓட்­டைக்­குள்ளால் எட்டிப் பார்த்தேன். மிகப் பெரிய கறுத்த உருவம் ஒன்று எனது வீட்டைப் பார்த்­த­வாறு நின்­றி­ருந்­தது. அது யானைதான் என்­பதை உணர்ந்து கொள்ள எனக்கு அதிக நேரம் எடுக்­க­வில்லை.
 
நான் பிறந்­தது முதலே விவ­சா­யத்­தோடு தொடர்­பு­டை­யவன் என்ற வகையில் வய­லுக்கு யானைகள் வரு­வதும் அவற்றைத் துரத்­து­வதும் எனக்குப் பழக்­கப்­பட்ட விட­யங்கள். இப்­படி எத்­த­னையோ யானை­களைப் பார்த்­தி­ருக்­கிறேன். ஆனால் இப்­ப­டிப்­பட்ட பாரிய யானை ஒன்றை நான் பார்த்­ததே கிடை­யாது.
 
எனது வீட்டின் முன்­பக்க கடை அறையில் அறு­வடை செய்த நெல்­களை களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யி­ருந்தேன். அதன் வாசத்தை அறிந்தே எனது வீட்டை நோக்கி யானை வந்­தி­ருக்­கி­றது. ஆனாலும் நெல் இருந்த அறையை நோக்கிச் செல்­லாது வீட்டின் முன்­பு­றத்­தையே அது தாக்­கி­யது.
 
நான் உட­ன­டி­யாக “நீ ஏன் எங்­க­ளுக்கு அநி­யாயம் செய்­கிறாய்? நாங்கள் உனக்கு ஒன்றும் செய்­ய­வில்­லையே? அல்­லாஹ்­வுக்­காக நீ போய்­விடு” என்று சப்­த­மாகச் சொன்னேன்.
உட­ன­டி­யாக அது பின்­னோக்கி நகர்ந்­தது. அதன் பிறகு ஒன்­றுமே செய்­ய­வில்லை. வந்த வழியால் போய்­விட்­டது” என்றார்.
 
யானைக்கு தமிழ் தெரி­யுமா என்று அவ­ரிடம் நகைச்­சு­வை­யாகக் கேட்டேன். “ எனது அனு­ப­வத்தில் சொல்­கிறேன். மனி­தர்கள் கதைப்­பதை விளங்கிக் கொள்ளக் கூடிய கேள்வி ஞானம் யானைக்கு இருக்­கி­றது. சில நூறு மீற்றர் தூரத்தில் நின்று நாம் மெது­வாகக் கதைப்­பதைக் கூட யானை காது­தாழ்த்திக் கேட்கும் ஆற்றல் கொண்­டது. நாம் அதனை வெறுப்­பூட்டும் வகையில் ஏதேனும் வார்த்­தை­களைக் கூறினால் அடுத்த கணம் அதற்குக் கோபம் வந்­து­விடும். பின்னர் நடப்­பதே வேறு” என்­கிறார் சஹீத்.
 
நாம் அங்கு சென்ற போது யானையின் தாக்­கு­தலில் சேத­ம­டைந்த தனது வீட்டின் முன்­புறச் சுவரை சொந்தப் பணத்தில் சயீத் மீள நிர்­மா­ணித்துக் கொண்­டி­ருந்தார். அதி­கா­ரிகள் எந்­த­வி­த­மான ஆக்­க­பூர்­வ­மாக நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை. பொலிசில் முறைப்­பாடு செய்­தி­ருக்­கிறோம். கிராம சேவை அதி­கா­ரியும் வந்து சேதங்­களைப் பார்­வை­யிட்டுச் சென்றார். வன இலாகாத் திணைக்­க­ளத்­திலும் இது­பற்றி முறைப்­பாடு செய்­தி­ருக்­கிறோம். ஆனால் இது­வரை எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. நஷ்­ட­யீடு கிடைக்­குமா? கிடைக்­காதா? என்று கூடத் தெரி­யாது என்றும் சஹீத் கூறு­கிறார்.
 
சேதங்கள் ஒரு­புறம் இருக்க, எமது உயி­ருக்கு உத்­த­ர­வாதம் வேண்டும் என்­கிறார் சஹீதின் மனைவி மும்தாஜ் பேகம். சமுர்த்தி உத்­தி­யோ­கத்­த­ரான இவர், இரவில் குழந்­தை­க­ளோடு நிம்­ம­தி­யாகத் தூங்க முடி­யாத அச்­ச­நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறு­கிறார். எங்கு, எந்த நேரத்தில், எப்­படி யானை வரும் என்று யாருக்­குமே தெரி­யாது. இந்தப் பகுதி முழுக்­கவும் மக்கள் அச்­சத்­தோ­டுதான் இராப் பொழுதைக் கழிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இந்த அச்­சத்தைப் போக்­கவும் யானையின் வரவைத் தடுத்து நிறுத்­தவும் அதி­கா­ரிகள் உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்­கிறார்.
 
யானையின் தாக்­கு­த­லுக்கு இரண்டு தட­வைகள் இலக்­கான வீட்டின் உரி­மை­யா­ள­ரான ஓய்வு பெற்ற ஆசி­ரியர் அலி அஹமட் தனது அனு­ப­வத்தை இப்­படிக் கூறு­கிறார்.
 
“ சனிக்­கி­ழமை அதி­காலை 4 மணிக்கு வழக்­கம்­போல எழுந்து தஹஜ்ஜத் தொழ தயா­ராகிக் கொண்­டி­ருந்தேன். குளிர் காற்று வரட்டும் என்­ப­தற்­காக தினமும் வீட்டு ஜன்னல் ஒன்றைத் திறந்­து­வி­டு­வது வழக்கம். அன்றும் அப்­ப­டித்தான். ஜன்­னலைத் திறந்­த­வுடன் மீண்டும் அதே வேகத்தில் ஜன்னல் வந்து மூடிக் கொண்­டது. காற்றுப் பல­மாக வீசாத நிலையில் யாரோ ஒருவர் வெளியில் நின்று ஜன்­னலை மூடி­வி­டு­கிறார் என நான் நினைத்துக் கொண்டேன்.
 
ஊரில் கள்­வர்­களின் நட­மாட்டம் அதி­க­ரித்­துள்ள காலம் என்­பதால் இது கள்­வனின் வேலைதான் என ஊகித்துக் கொண்டு நான் தொழுது பிரார்த்­த­னையில் ஈடு­பட்டேன். விடிந்­ததும் வெளியில் போய்ப்­பார்த்த போதுதான் வந்­தது கள்வன் அல்ல...யானைதான் என்­பதை உறு­திப்­ப­டுத்த முடிந்­தது.
 
வீட்டின் நெல் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அறையை உடைத்து அங்­கி­ருந்த ஒரு நெல் மூடையை தூக்கி எடுத்து அதில் அரை­வா­சியைச் சாப்­பிட்­டி­ருந்­தது.” என்றார்.
நெல்லைச் சாப்­பி­டத்தான் யானை வரு­கி­றது என்­பது உறு­தி­யாகத் தெரிந்தால் அன்­றைய தினமே சகல நெல் மூட்­டை­க­ளையும் வேறு இடத்­துக்கு மாற்­றி­விட்டார் அலி அஹமட் சேர்.
 
“ எங்கள் வீட்­டுக்கு மட்­டும்தான் யானை இரண்டு தினங்கள் வந்­தது. மீண்டும் மறுநாள் ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் வந்து நெல் இருக்­கி­றதா எனத் தேடிப் பார்த்­தி­ருக்­கி­றது. தான் தேடி வந்­தது கிடைக்­க­வில்லை என்ற ஏமாற்­றத்­தினால் வீட்டின் முன்­புறச் சுவரை இடித்­து­விட்டு பின்­பு­ற­மாக நின்ற பப்­பாசி மரத்தை பிடுங்கி எறிந்­து­விட்டுச் சென்­றி­ருந்­தது. 

யானை வரலாம் என்ற அச்­சத்­தினால் நாங்கள் ஞாயி­ரன்று இரவு வீட்டில் தங்­க­வில்லை. மனைவி, பிள்­ளை­களை அழைத்துக் கொண்டு உற­வி­னரின் வீட்­டுக்குச் சென்­று­விட்டேன். அன்­றுதான் மீண்டும் வந்து கைவ­ரி­சையைக் காட்­டி­யி­ருக்­கி­றது என்­கிறார் அவர்.
 
“ அன்று விடு­தலைப் புலிகள் ஊருக்குள் நுழைந்து இப்­ப­டித்தான் அட்­ட­காசம் புரிந்­தார்கள். பணம், பொருட்­களைக் கேட்­டார்கள். ஆட்­களை அழைத்துச் சென்று சுட்­டார்கள். அதனால் இர­வு­களில் தூக்­கத்தைத் தொலைத்து நிம்­ம­தி­யி­ழந்து தவித்தோம். இன்று யானைகள் ஊருக்குள் வந்து அட்­ட­காசம் புரி­கின்­றன. வீடு­களை உடைக்­கின்­றன. அல்­லாஹ்வின் அருளால் மனி­தர்­க­ளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்­ப­ட­வில்லை. உயிர்­க­ளுக்கு ஏதம் நடந்தால் யார் பொறுப்புக் கூறு­வது? யானை­களின் அட்­ட­கா­சத்­தி­லி­ருந்து ஊரையும் மக்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு எந்­த­வித ஆக்­கப+ர்வ நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை” என்றும் அவர் மேலும் கூறு­கிறார்.
 
யானையின் வரு­கையால் சிறு­வர்கள் கூட அச்­சத்தில் இருக்­கி­றார்கள். “ அன்று அதி­காலை 3.30 மணி­யி­ருக்கும். எங்கள் வீட்டில் நிற்கும் இரண்டு மாடு­களும் வழ­மைக்கு மாறாகக் கத்தத் தொடங்­கின. வெளியில் ஏதோ உடைக்­கப்­படும் சப்தம் கேட்­டது. எனது நானா டோச் லைட்டை எடுத்துக் கொண்டு வெளியில் போகப் பார்த்தார். உம்மா போக வேண்டாம் என்றார். ஜன்­ன­லுக்­குள்ளால் பார்த்த போது எங்கள் வீட்டுக் கத­வுக்­குள்ளால் உள்ளே வர முடி­யா­த­வாறு பெரிய யானை ஒன்று நின்று கொண்­டி­ருப்­பதைக் கண்டோம். யானை வீட்டு வள­வுக்குள் வர முயன்­றதால் கத­வுடன் இணைந்­தி­ருந்த சுவர் இடிந்­து­விட்­டது. “போ...போ…அல்­லாஹ்­வுக்­காக போய் விடு” என்று எங்கள் உம்மா யானையைப் பார்த்துச் சொன்னார். அது போய்­விட்­டது. போகும் வழியில் எமது மாமியின் வீட்டில் விறாந்­தையில் அடுக்­கப்­பட்­டி­ருந்த நெல் மூட்டை ஒன்­றையைத் தூக்கி ஒழுங்­கைக்குள் போட்டுச் சாப்­பிட்­டு­விட்டுப் போயி­ருந்­தது” என யானையைக் கண்ட தனது அனு­ப­வத்தைப் பகிர்ந்து கொள்­கிறார் 14 வய­தான அக்ரம் எனும் சிறுவர்.
 
யானையை நேரில் கண்ட தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரான ரிப்கான் தனது அனு­ப­வத்தை இப்­படிச் சொன்னார். “இரவு 1 மணியைத் தாண்­டிய வேளை. பல்­க­லைக்­க­ழக பயிற்சி வேலை­களை முடித்துக் கொண்டு தூங்கத் தயா­ரா­ன­போது வீதியில் நாய் குரைக்கும் சப்தம் பல­மாகக் கேட்­டது. வழ­மைக்­கு­மா­றா­கவே நாய் குரைத்­தது. கள்­வர்கள் வந்­து­விட்­டார்­களோ என நினைத்து வெளி விளக்கைப் போட்டுப் பார்த்­த­போது யாரையும் காண­வில்லை. ஜன்னல் கதவைத் திறந்­த­வுடன் முன்னால் பெரிய உருவம் ஒன்று வந்து நின்­றது. பார்த்தால் யானை. நாம் வீட்­டுக்குள் நின்று ஜன்னல் கம்­பி­க­ளுக்­குள்ளால் யானையைப் பார்த்து போய்­வி­டு…­அல்­லாஹ்­வுக்­காக போய்­விடு என்று சொன்னோம். அது தனது தும்­பிக்­கையை உயர்த்தி எம்மை நோக்கி சைகை செய்­து­விட்டு பின்­வாங்கிப் போய்­விட்­டது. உட­ன­டி­யாக பொலிஸ் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் காலையில் 10 மணிக்­குத்தான் வந்­தார்கள்.” என்றார்.
 
இப்­படி யானையின் தொடர்ச்­சி­யான அட்­ட­கா­சத்­தினால் சம்­மாந்­துறைப் பிர­தே­சத்தின் பல்­வேறு பகு­திகள் பாதிக்­கப்பட்;டுள்­ளன. சம்­மாந்­துறை மக்கள் அச்­சத்தில் வாழ்­கி­றார்கள். வயல் பிர­தே­சங்­களில் வழக்­க­மாக யானை­களின் அட்­ட­காசம் இருப்­பினும் இப்­படி ஊருக்குள் நுழந்து மக்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுப்­பது வர­லாற்றில் இதுவே முதல் தடவை என மக்கள் கூறு­கி­றார்கள்.
 
இவ்­வ­ளவு நடந்தும் யானை­யி­ட­மி­ருந்து சம்­மாந்­துறை மக்­க­ளுக்கு பாது­காப்பைப் பெற்றுக் கொடுப்­ப­தற்hன எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் அர­சி­யல்­வா­தி­க­ளாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளாலோ மேற்கொள்ளப்படவில்லை.
 

யானையின் தாக்கதலுக்கு இலக்கான இடங்களை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் சென்று பார்வையிடவோ இன்றேல் உரிய நஷ்டயீடுகளைப் பெற்றுக் கொடுக்கவோ முன்வரவில்லை.
 
பொது மக்களின் வீடுகள் சேதமாக் கப்பட்டிருக்கின்றன. வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சம்மாந்துறை மத்திய கல்லூரி ஆகிய பொது நிறுவனங்களின் சுவர்களும் யானையால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. பயிர்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு நஷ்டயீடுகள் வழங்கப்பட வேண்டும். பாதிப்புகள் சீர்செய்யப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மீண்டும் யானை ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் புரியாதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண் டும். 
 
இன்றேல் மேலே குறிப்பிட்ட திரைப் படத்தின் கதை போல சம்மாந்துறை மக்களும் பணம் செலுத்தி ஒரு ‘கும்கி’ யானையை வரவழைத்து அட்டகாசம் செய்யும் இந்த யானையை அடித்துவிரட்ட வேண்டி வரலாம்.

Thanks To Vidivelli

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா