இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/21/2013

நிந்தவூரில் நடமாடிய மர்ம மனிதர்கள், விசேட அதிரடிப் படையினரே : பைசால் காசிம்


நிந்தவூர் பிரதேசத்தில் நடமாடிய மர்ம மனிதர்கள், விசேட அதிரடிப் படையைச் சேர்ந்தவர்களே என்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உறுதியாகத் தெரிவிக்கிறார்.
அதேவேளை இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸ் துறை உறுதியளித்திருப்பதால் நிந்தவூர் பிரதேச மக்கள் அமைதி பேணி- இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
இது குறித்து பைசால் காசிம் எம்.பி. மேலும் கருத்து தெரிவிக்கையில்;
“கடந்த இரண்டு மூன்று வாரமாக இரவு நேரங்களில் நிந்தவூர் பிரதேச வீடுகளில் இனந்தெரியாத நபர்கள் நுழைவதாகவும் பூட்டுக்களை உடைப்பதாகவும் வீடுகளுக்குள் சென்று பதுங்கியிருப்பதாகவும் வீட்டுக்காரர்கள் பார்த்தவுடன் தப்பிச் செல்வதாகவும் மக்களால் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
இது பற்றி சம்மாந்துறை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் பேசி- நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலாளர், மாகாண சபை உறுப்பினர் என்பவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (17 11 2013) காலை கூட்டம் ஒன்று கூடி விழிப்பு குழுக்களை உசார்படுத்துவது எனவும் மக்களை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்வது எனவும் இரவு ஒன்பது மணிக்கு பின்னர் ஊரிலே நடமாடுபவர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது,
இந்த முடிவு பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட சகல பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கிகளில் அறிவிக்கப்பட்டது.
ஞாயிறு இரவு நானும் எனது பாதுகாவலர்களும் பிரதேச சபை உபதவிசளர், இன்னும் சில ஆதரவாளர்களுடன் ஊரின் சில வீடுகளுக்கு மர்ம நபர்கள் வந்தது பற்றி கேள்வியுற்று அவ்விடங்களுக்கு (நிந்தவூர் முதலாம் பிரிவிற்கு) சென்றிருந்த வேளை நிந்தவூர் நான்காம் பிரிவு கடற்கரையில் மர்ம நபர்களை மக்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளதாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததைத் தொடர்ந்து அவ்விடத்தற்கு விரைந்தோம்.
அங்கு மக்கள் கூடத் தொடங்கினர் நான் மக்களுக்கு மத்தியில் நின்ற நபர்களை நெருங்கி என்னை அறிமுகப்படுத்தி விட்டு- நீங்கள் யார் என்று கேட்டபோது தாம் விசேட அதிரடிப்படையைச் செர்ந்தவர்கள் என்றும் விசேட சேவைக்காக இங்கு வந்ததாகவும் கூறினர்.
அதில் நான்கு பேர் ஆயுதம் தரித்து சீருடையில் நின்றனர். இருவர் சீருடையில் இல்லாமல் சிவிலில் இருந்தனர்.
உங்களை யார் இங்கு வரச் சொன்னது? நீங்கள் வருவது பொலீசுக்கு தெரியுமா என்று கேட்டதற்கு நாங்கள் விசேட அழைப்பில் வந்திருக்கிறோம் என்றனர்.
அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் கூறினார்; நான்தான் அவர்களை அழைத்தேன் என்று. (அந்த நபர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர் நிந்தவூரில் திருமணம் முடித்துள்ளார்).
அதன் பின் நான் எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூலமாக சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பாதிகாரியை தொடர்பு கொண்டு- உடன் ஸ்தலத்திற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
அவர் வர சற்று தாமதமாகியது. அதற்கிடையில் களுவாஞ்சிக்குடியில் இருந்து STF வந்திருந்தது. மக்கள் திரள் திரளாக வரத் தொடங்கினர், கடந்த சில நாட்களாக மர்ம நபர்களது நடவடிக்கைகளால் பீதியுற்றிருந்த மக்கள் தமது ஆத்திரத்தை பிடிபட்ட நபர்களின் மேல் காட்ட முனைந்தனர். ஆத்திரத்தில் அவர்கள் செய்ய முனைந்தது இயல்பான விடயமே. அவ்வாறு அவர்கள் முனைந்தது தவறென்று கூற முடியாது.
மக்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. இந்த நிலைமையை எனது பாதுகாப்பு ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிக்கு தெரியப்படுத்தி அவரது அறிவுறுத்தலின் பேரில் என்னை அவ்விடத்தை விட்டுச் செல்ல வேண்டினர். எனினும் நான் சம்பவ இடத்திற்கு சற்று அப்பால் சென்று மக்களிடம் நிலைமை பற்றி உரையாடிக் கொண்டிருந்தேன்,
பொலீசார் வந்ததும் நான் மீண்டும் அவ்விடம் சென்று விடயத்தை விளக்கிக் கூறி இவர்களை கைது செய்யும்படி கேட்டேன். அதில் ஒரு சந்தேக நபர் துப்பாக்கியைப் பறித்து வானத்தை நோக்கியும் நிலத்தை நோக்கியும் சுடத் தொடங்கினார். அதன் பினர் வாக்குவாதங்களின் பின்னர் சுடுவதை நிறுத்தினர்.
பின்னர் சந்தேக நபர்களை பொலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதற்கிடையே நான் பொலீஸ் மாஅதிபர், பிரதிப் பொலீஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தி நிலைமையைக் கூறினேன்.
பொலீஸ் ஜீப்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் நோக்கி செல்லும் போது குறித்த நபர்கள் தம்மால் பொலீசுக்கு வர முடியாது எனவும் தாம் தமது முகாமுக்கு செல்ல விருப்பதாகவும் முரண்டு பிடித்தனர்.
இருந்தாலும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் முயற்சியால், அவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அங்கு நானும் சென்றிருந்தேன்.
பொலீஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வந்திருந்தார். அதேவேளை பொது மக்களது தாக்குதலுக்குள்ளான பொலீசாரை சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்திருந்தேன்.
இதன்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்க்கு நடந்ததை விளங்கப்படுத்தினேன். அவரிடம் சந்தேக நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எமதூரின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.
அதிகாலை நான்கு மணியளவில் நான் கல்முனை வைத்தியசாலைக்கு சென்று பிரதேச சபை தவிசாளரை பார்வையிட்டு விட்டு- வீடு திரும்பும் போது வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இளைஞர் கூட்டமொன்று தடைகளை ஏற்படுத்தியிருந்தது. ஏற்பாட்டாளர்கள் யாரென்று அறியவில்லை.
மக்களின் பிரதிநிதியாகிய நான் மக்களது மனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியவன் என்ற படியால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நான் ஆதரித்தேன்.
மறுநாள் காலை ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெறத் தொடங்கியது. அன்று பின்னேரம் சம்மாந்துறை பொலீசில் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்து. நாங்கள் சென்றோம். அங்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர், பிரதேச செயலாளர் உட்பட பலர் பங்குபற்றி பேசினோம்.
அங்கு எஸ்.எஸ்.பி. பேசுகையில்; சந்தேக நபர்கள் திருடியதை கையும் களவுமாக பிடிபடாததால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென்றும் சீருடை இன்றி வந்ததற்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார்.
இதற்கேற்ப நாங்கள் இந்த செய்தியை மக்களுக்கு தேசிய ஊடகங்கள் மூலமாக உடன் அறியப்படுத்த வேண்டும் என்று கேட்டதற்கு உடன் ஒத்துக் கொண்ட அவர்கள் பொலீஸ் பேச்சாளர் அஜீத் ரோகனவுடன் தொடர்பு கொண்டு குறித்த செய்தியை தொலைக்காட்சி மூலம் சொல்ல வேண்டும் என்று கூற உடனே அதுவும் நடந்தது.
ஹர்த்தால் இன்றுடன் முடிய வேண்டும்- நாளை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு அம்முடிவு பள்ளிவாசல் மூலமாக மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் அங்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது,
நான் ஊரின் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுப்பினேன், அதற்க்கு எழுபத்தைந்து பொலீசாரைத் தருகின்றேன் என்று கூறிய எஸ்.பி.- பிரச்சினை முடியும் வரை அவர்களை வைத்திருங்கள் என்று கூறினார். அதற்கு நாங்கள் அப்படித் தேவையில்லை பொலீஸ் வரும்போது பள்ளிவாசலுக்கு தெரியப்படுத்தி விட்டே வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதற்கும் அவர்கள் இணங்கினர்.
ஊர் திரும்பி பள்ளிவாசலில் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விளக்கமளித்தோம். ஹர்த்தாலை இன்றுடன் நிறுத்துவோம் என்று கூறினேன். சிலர் எதிர்த்தனர். பலர் ஆமோதித்தனர்.
பள்ளிவாசலில் சில காடையர்கள் சிலரால் ஊக்குவிக்கப்பட்டு குளிர்பானங்களும் வழங்கப்பட்டு- இந்த முடிவை எதிர்த்ததாக பின்னர் கேள்வியுற்றேன்.
மறுநாள் பொலீசார் முதல் நாளைய கூட்ட முடிவிற்கேட்ப வீதித்தடைகளை அகற்றத் தொடங்கினர். அதனை ஆட்சேபித்த சிலர் பொலீசாரின் கண்ணீர்புகை தாக்குதலுக்கு இலக்காகினர்,
இதன்போது வீதியில் வழமைபோல கூடி நின்று வேடிக்கை பார்த்த அதிகமானோர் தாக்கப்பட்டனர், சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டன, மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டன, 21 பேர் கைது செய்யப்பட்டு அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற குற்றத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
அதில் புதன்கிழமை சம்மாந்துறை மாவட்ட நீதவானால் பதினெட்டு வயதுக்கு குறைந்த ஆறு பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் ஏனையோர் இம்மாதம் 22 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையில் நேற்றும் மர்ம நபர்களின் நடமாட்டம் குறித்து முறைப்பாடுகள் தொடர்ந்தும் வந்து கொண்டே இருக்கின்றன. இது குறித்து நேற்று புதன்கிழமை காலையும் நான் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரன் போன்றோருடன் பேசினேன். இந்நிலைமை தொடர்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் பொலீசாருடன் முரண்பாடு ஏற்பட்டிருப்பதால் நிலைமை சீரடைய சில நாட்கள் செல்லும். மக்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். அதே நேரம் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
சிலர் எம்.பி. என்ன செய்கின்றார் என விசனம் தெரிவிக்கின்றனர், எம்.பி. உங்களுடன் ஊரெல்லாம் சுற்றுகிறார், பொலீசாரோடு பேசுகிறார், அரச மேலிடங்களுக்கு சொல்லி நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்கின்றார், ஹர்தாலுக்கு ஆதரவளிக்கின்றார், உங்களது ஏச்சுக்களை கேட்டுக் கொண்டு பொறுமையாக இருக்கிறார்,
இவற்றை விட வேறு என்ன செய்ய வேண்டும்? என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்?
இந்த வேண்டாத விமர்சகர்கள்.எம்.பி. செய்கின்ற வேலை எல்லாவற்றையும் வெளியிலே தம்பட்டமடித்த்க் கொண்டா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனரா?, மற்றவர்களுக்காக நடித்து படம் காட்ட எனக்கு தெரியாது. எனது மக்களுக்காக நான் என்றும் செய்ய வேண்டியதை செய்து கொன்டுதான் இருக்கிறேன்.
ஒ.எல் பரீட்சை உட்பட மூன்றாம் தவணைப் பரீட்சைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்றது. மாணவர்களது கல்வி நிலையையே நாங்கள் அதிகபட்சம் கருத்தில் கொண்டு இரண்டாவது நாள் ஹர்த்தால் செய்வதில்லை என்று முடிவுக்கு வந்தோம், வியாபாரிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் நிலை குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.
சட்டமும் பொலீசும் இயலுமானளவு நடவடிக்கை எடுக்க ஒத்துக் கொண்டிருக்கும் போது ஏன் இன்னும் நாம் ஹர்தாலை தொடர வேண்டும்? அவர்கள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லையே! ஏன் நாம் இரண்டாவது நாள் ஹர்தாளைத் தொடர வேண்டும். இது எவ்வளவு வீண் பிரச்சினைகளுக்கு இன்று வழி வகுத்து விட்டன. மறியலில் இருப்போரது குடும்ப நிலை என்ன?
இதனை ஒரு குழு தூண்டி விட்டு இதில் சுயலாபம் தேடுகிறதோ என்னவோ தெரியாது. அப்படியிருந்தாலும் இளைஞர்கள் தமது செயல்பாடுகளை சிந்தித்து செய்ய வேண்டும். ஊர்க் கட்டுப்பாட்டை மீறி நடக்க கூடாது, ஊருக்கு ஒத்துழைக்க வேண்டும்.
நாங்கள் உங்களது வாக்குகளால் பதவிக்கு வந்தவர்கள் என்றும் உங்கள் நலனிலே அக்கறை கொண்டவர்கள், உடனடியாக பலன் கொடுக்கின்ற நீர்க்குமிளி போன்ற பூச்சாண்டி முடிவுகளையன்றி நீண்ட நாள் நிலைத்து நிற்கக் கூடிய சிறந்த முடிவுகளையே எடுப்போம் அம்முடிவுகளின் பலன் கிடைக்க சில நாட்கள் சென்றாலும் சிறந்த முடிவுகளாகவே அவை இருக்கும்.
எமது மற்றொரு எம்.பி சகோதரர் ஹசன் அலி அவர்கள், மாகாண காணி விவகாரங்கள் பற்றிய முக்கிய கலந்துரையாடல்களின் நிமித்தம் தலைவருடன் இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததனால் அவர் ஊரில் இல்லை
ஆனால் அவர் அடிக்கடி என்னுடன் தொடர்பிலே இருந்தார், ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார். தலைவரும் கூட என்னைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இவர்களை இட்டு குறை கூறுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்.
இன்றும் கூட ஊர் பாதுகாப்புக் குறித்த ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி விட்டே நாளை பாராளுமன்ற அமர்விற்காக கொழும்பு செல்கின்றேன்” என்றும் பைசால் காசிம் எம்.பி. குறிப்பிட்டார். MM

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா