இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/05/2013

'2020ம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்' இலங்கைக்கான தேசியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

கொழும்பு அப்ரார் நிறுவனம் 2020ம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்| எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்துள்ள இலங்கைக்கான தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 02.12.2013 ம் திகதியன்று குருணாகல் - சியம்பளாகஸ்கொடுவை மதீனா தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். மன்சூர் நளீமி அவர்களின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இவ்வங்குரார்ப்பண நிகழ்வில் அப்ரார் நிறுவனத்தின் தலைவரும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் குழந்தை நோய்நலப் பிரிவுத் தலைவருமான வைத்திய நிபுணர் முஸ்தபா ரயீஸ் அவர்களும் அப்ரார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸலாம் ஏ ஹமீட் அவர்களும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் என சுமார் 100க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

வைத்திய நிபுணர் முஸ்தபா ரயீஸ் அவர்கள் உரையாற்றுகையில், 'இன்று முஸ்லிம் பாடசாலைகளிலும் மத்ரஸாக்களிலும் மாணவர்களின் அடைவுகளில் பெறும் வீழ்ச்சியைக் காணமுடிகின்றது. அது மட்டுமன்றி மாணவர்கள் இடைவிலகும் வீதமும் அதிகரித்துள்ளது. இன்னும் மாணவர்கள் நெறி பிறழ்வுகளுக்கு உள்ளாகுதல், பாடசாலைகளையும் மத்ரஸாக்களையும் ஆசிரியர்களையும் வெறுத்தல் மட்டுமல்லாது இவற்றின் அடியாக கல்வியையே வெறுத்தொதுங்கும் அபாயகரமான நிலையும் வளர்ந்து வருகிறது. இவற்றுக்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் தனது மருத்துவ அனுபவங்கள், உளவள ஆலோசனை நிகழ்வுகள் என்பவற்றினூடாகப் பெற்ற நேரடி அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, மேற்குறிப்பிட்ட மாணவர்களின் பிரச்சினைகளுக்கு காரணங்களாக அமைவது பாடசாலைகளிலும் மத்ரஸாக்களிலும் வீடுகளிலும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளும் அவர்களை மதிக்காமை, அங்கிகரிக்காமை போன்றனவையே என்பதுதான் உண்மை. ஒரு ஆசிரியர் மாணவனை தண்டிப்பதற்காக கையில் பிரம்பொன்றை எடுக்கிறார் என்றால் அவர் எடுப்பது பிரம்பல்ல, ஒரு கத்தரிக்கோல். ஆலவிருட்சமாக வளரவேண்டிய மரத்தை அதன் வேர்களையும் கிளைகளையும் கத்தரித்து ஷபொன்சாய்| மரமாக்கவே அவர் முயற்சிக்கிறார். 42 நாட்களில் 90 அடிகளையும் தாண்டி வளரக்கூடிய ஷசைனீஸ் பம்பு| எனும் சீன மூங்கில் மரங்கள் இன்று இவ்வாறு கத்தரிக்கோல்களை கையில் எடுப்பவர்களினால் ஷபொன்சாய்| மரங்களாக மாறியிருக்கின்றன.' என்றார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் , ஒரு மாணவனுக்கு விழும் அடி அவனது உடம்பில் விழும் அடியல்ல. மாறாக அவனது உள்ளத்தின் ஆழத்தில் விழும் அடி. உடலியல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகள், உள ரீதியாக வழங்கப்படும் தண்டனைகள் அனைத்தும் இது போன்றதே. நான் பரிசோதித்த பலரில் இதன் தாக்கத்தை நேரடியாகக் கண்டுள்ளேன். அதில் சிலர் மாணவர்கள்;; இன்னும் சிலர் இப்போது மாணவர்களாக இல்லை. மாணவப் பருவத்திலிருந்து அவர்கள் விடுபட்டடுவிட்ட போதும் உள்ளத்தில் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. பாலர் பாடசாலையில் முதல்நாள் விழுந்த அடியினால் தற்போது 7 வயதாகியும் பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் தவிக்கின்ற எத்தனையோ பெற்றாரைச் சந்தித்திருக்கின்றேன். மத்ரஸாக்களில் அல்லாஹ்வின் குர்ஆனை உள்ளத்தில் சுமப்பதற்காக, ஹிப்ழ் பண்ணுவதற்காகச் சேர்ந்து கிடைத்த தண்டனைகளால் உள்ளத்தில் வடுக்களைச் சுமந்து வாழ்கையை இழந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இவைகள் வெறும் கற்பனைகளோ கட்டுக்கதைகளோவல்ல. நான் சந்தித்த மனிதர்களிலிருந்து முன்வைக்கின்ற உண்மைகள். எனவேதான் கூறுகின்றேன்; கையில் பிரம்பை எடுப்பதும் உடலியல் தீதியான தண்டனைகள், உள ரீதியான தண்டனைகள் அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகங்களே. எனவே, ஒளிந்திருக்கின்ற மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து இந்த உலகிலும் மறுமையிலும் மிகச் சிறந்த அடைவைப்பெறும் வகையில் அவர்களை மாற்ற வேண்டுமானால் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும் உருவாக வேண்டும். இதற்காகத்தான் 2020ம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்| எனும் தொனிப்பொருளிலமைந்த தேசியதிட்டமொன்றை அப்ரார் நிறுவனத்தினூடாக இன்றிலிருந்து முன்னெடுக்கின்றோம்' என வைத்திய நிபுணர் முஸ்தபா ரயீஸ் அவர்கள் தனது அங்குரார்ப்பண உரையில் குறிப்பிட்டார்கள்.
 
தகவல்: ஸலாம் ஏ ஹமீட், பிரதம நிறைவேற்று அதிகாரி, அப்ரார் நிறுவனம்.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா