இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/26/2014

தேசிய ​ ஷூறா சபையின் ரமழான் கால வழிகாட்டல்கள்:

தேசிய  ​ ஷூறா  சபை
 

நம் நாட்டில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்ளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டு வரும் சூழலில் தான் நாம் புனித ரமழான் மாதத்தையூம் எதிர்கொண்டிருக்கிறோம். எனவே, பொதுவாக ஏனைய காலங்களை விட ரமழான் மாதத்தை முஸ்லிம்கள் எவ்வாறு கழிப்பது என்பது சம்பந்தமான சில ஆலோசனைகளை தேசிய ஷூறா சபை வழங்க விரும்புகிறது.
  1. எப்படியான இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் எல்லாவற்றுக்கும் முன்பாக அல்வாஹ்வின் உதவியையே முஸ்லிம்கள் எதிர்பார்க்க வேண்டும். இவ்வுதவி வருவதற்கு அல்லாஹ்வுடனான உறவை நாம் பலப்படுத்துவது அவசியமாகும். ரமழானில் நோன்பு இருப்பதுடன் அதிகமான ஸூன்னத்தான வணக்கங்களிலும் ஈடுபடுவது நல்லது. திலாவதுல் குர்ஆன், திக்ர்கள், இஸ்திக்பார், இரவு வணக்கங்கள் என்பவற்றில் அதிக கவனம் எடுக்க வேண்டும். இவற்றால் அச்சத்தில் இருந்து விடுதலையும் மனதைரியமும் அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையூம் துன்பங்களின் போது பொறுமையும் ஏற்படும். சத்தியத்தை அல்லாஹ் வெல்லவைப்பான், அநீதிக்கு உள்ளாக்கபட்டவர்களது பக்கமாக அவன் இருந்து, தாமதமாகியேனும் வெற்றியைத் தருவான் என்ற நம்பிக்கையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மன்னிப்பது, பொறுமை, அல்லாஹ்வின் கூலியில் நம்பிக்கை, ஈகை, உளப்பரிசுத்தம் என்பன எமக்கான அணிகலன்களாக இருக்கட்டும்.
  2. பிரதேச உலமாக்கள்,கல்விமான்கள், முக்கியஸ்தர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஆலோசனை சபை ஒன்றை ஒருவாக்கிக்கொள்வதோடு மிக முக்கியமான பிரச்சினைகள் ஊரில் தோன்றும் போது அவர்களது ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடப்பது.
  3. ரமழான் காலத்திலும் ஏனைய காலங்களிலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள்,பிற மத ஆலயங்களது மதகுருமார் ஆகியோருடன் முஸ்லிம்கள் தொடர்புகளை ஏற்படுத்தி நல்லுறவைப் பேணிக்கொள்ள வேண்டும். ஏதாவது அசம்பாவிதங்கள், இன முறுவல்கள் ஏற்பட்டால் உடனடியாக அவர்களுடனும் தொடர்பு கொண்டு நிலமையை வழமைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இப்தார் மற்றும் பெருநாள் தின நிகழ்வுகளுக்கு அவர்களை அழைப்பது பொருத்தமாக அமையும்.
  4. பள்ளிவாயலில் இஷாத் தொழுகையை தொடர்ந்து தராவீஹ் தொழுகையை இயன்றவரை நேரகாலத்தோடு நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்கு உடனடியாக திரும்புவது.
  5. ஆண்களது மேற்பார்வையுடனும் பாதுகாப்புடனும் பெண்கள் பள்ளிவாயளுக்கு தராவீஹ் தொழுகைக்காக வருவது.
  6. பள்ளிவாயலின் வெளி ஒலி பெருக்கிகளை அதான் மற்றும் விஷேட அறிவித்தல்களைத் தவிர பயான்கள், தொழுவித்தல் போன்றவற்றிற்காக பயன்படுத்துவதை முற்றாக தவிர்ப்பது.
  7. பள்ளிவாயல்களுக்கு வருவோர் தமது வாகனங்களை உரிய வாகன தரிப்பிடங்களிலோ அல்லது வேறு பொருத்ததமான இடங்களிலோ பிறருக்கு தொந்தரவு ஏற்படாத விதத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்வது. இதில் பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் வழிகாட்டல்களும் அவசியமாகும்.
  8. வதந்திகளை பரப்புவதில் இருந்தும், நம்புவதிலிருந்தும் தவிர்ந்துகொள்வது.எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அவற்றை ஊர்ஜிதப்படுத்துவது.
  9. சந்திகள், கடைத் தெருக்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பாதை ஓரங்கள் என்பவற்றில் கூட்டம் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருப்பதானது பிற சமயத்தவர்கள் மத்தியில் சந்தேகத்தை உண்டுபண்னும் என்பதாலும் வீண் வம்புகளுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் இட்டுச்செல்லும் இன்பதாலும் அவற்றைத் தவிர்ப்பது.
  10. இயக்கங்களுக்கிடையிலான மோதல்களை உருவாக்கும் வகையிலான சொற்பொழிவுகளை உலமாக்கள் தவிர்ப்பதுடன் நல் அமல்களில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடும் வகையிலான கருத்துக்களை உள்ளடக்கிய குத்பா பிரசங்கங்களையும் வேறு உபந்நியாசங்களையும் செய்வது.குறிப்பாக இளைஞர்கள் வழிபிறழ்ந்து விடாதிருக்கவும் பிறருக்கு தொந்தரவின்றி  இரவு காலங்களைக் கழிப்பதற்கும் ஒழுக்க விழுமியங்களுடன் வாழ்வதற்குமான ஏற்பாடுகளைச் செய்வது. 
  11. குறிப்பாக கொழும்பு போன்ற நகர்ப் புறங்களுக்கு முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த யாசகம் கேட்போர் வந்து பாதை ஓரங்களில் தங்குவதாலும் பிற மதத்தவர்களது வியாபார நிலையங்களுக்கும் வீடுகளுக்கும் செல்வதாலும் முஸ்லிம் சமூகம் பற்றிய பிழையான மனப்பதிவுகள் ஏற்படலாம் என்பதுடன் தற்போதைய சூழலில் இன ரீதியான அசம்பாவிதங்களுக்கும் வழி வகுக்கலாம் என்பதால் ஊர்களில் ஸகாத்,ஸதகாக்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன் யாசக முறையை நீக்குவதற்கான காத்திரமான வழிமுறைகளைச் செய்வது நல்லது.பல தடவை உம்ராக்களுக்காக செல்பவர்கள் உடனடியாக முன்னுரிமைப்படுத்த வேண்டிய- ஏழ்மையை கட்டுப்படுத்தல் போன்ற திட்டங்களுக்காக தமது பணத்தைச் செலவிடலாம்.
  12. வீண்விரயம்,அர்த்தமற்ற பொழுதுபோக்குகள் என்பவற்றை முற்றாகத் தவித்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் உலகுக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் காரியங்களில் மாத்திரம் ஈடுபடுவது
  13. .முஸ்லிம் சமுதயத்தில் ஆழமான ஈமானும் சமூக ஐக்கியமும்,தெளிந்த சிந்தனையும் உலக,மார்க்க அறிவுகளில் ஆழமும்,பண்பாட்டு விழுமியங்களில் உச்ச நிலையும்,பிற சமூகங்களுடன் நல்லுறவும் ஏற்படவேண்டியிருப்பதால் பொறுப்புக்களை வகிப்பவர்கள் தமது பொறுப்புக்களை அமானிதங்களாகக் கருதி தத்தமது சக்திக்கு உட்பட்ட வகையில் செயல்பட வேண்டும்.
மேற்கூறிய வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு மிகுந்த பொறுப்புணர்சியுடன் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய ஷூறா சபை இலங்கை வாழ் முஸ்லிம்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறது. 

அனைவருக்குக் வல்ல அல்லாஹ் புனித ரமழானை பாக்கியமுள்ளதாகவும் பாதுகாப்பன காலமாகவும் ஆக்குவானாக!

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா