இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/13/2013

கத்தாரில் சிந்திய பாலைவனத்து வியர்வைத்துளிகள் புத்தளத்து மண்ணில் அறுவடை


(அபூ அப்fஹம்)
தந்தையின் கடன், சகோதரியின் திருமணம், குடியிருக்க வீடுஎன அடுக்கடுக்காக வரும் தேவைகளோடு கடவூச்சீட்டைக் கையிலேந்தி தாய் மண்ணையூம் இரத்த உறவூகளையூம் துறந்து எமது உள்ளம் புலம்பெயர்கின்றது. எமக்குள் எத்தனை சின்னச் சின்ன ஆசைகள்கற்பனைகள்…!
எமது பாலைவனத்து வியர்வைத் துளிகள் வீட்டின் முன் வராந்தா முதல் சமையலறை வரையூம் மனைவியின் கையடக்கத் தெலைபேசி முதல் எமது குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் வரையூம் ஊடுருவிப் பரந்து கிடக்கின்றன. நான், எனது குடும்பம், எனது நண்பர்கள்என சிந்தித்த எமக்குள் எதனையோ தொலைத்த உணர்வூ.
ஆம், நமக்கு கல்வி ஆகாரம் ஊட்டிய ஆசான்கள்பாடசாலைகள்ஓடி விளையாடிய தெருக்கள்சமூகம் கண்டு கொள்ளாத ஆதரவற்றவர்கள்என பட்டியல் நீள்கிறது. என்னால் எனது குடும்பத்தை வளப்படுத்த முடியூமென்றால் எமது பிரதேசத்தவர்கள் ஒன்றிணைந்து எமது ஊரை வளப்படுத்த முடியூமே! தூய உள்ளங்கள் சில இணைந்து கத்தாரிய மண்ணில் நம்பிக்கையூடன் Puttalam Association Qatar - PAQ அமைப்பைத் தோற்றுவிக்கின்றன.
சமூகத்திலுள்ள ஆதரவற்றவர்களை அரவணைத்துச் செல்லும் PAQ அமைப்பின் செயற்பாடுகள் கலந்துரையாடப்படுகின்றன. நடுநிசி கடந்து…. கண்கள் விழித்து சமூகம் பற்றிய கலந்துரையாடல் தொடர்கின்றது. வேலையிலிருந்து வந்து ஓரிரு மணித்தியாலங்களில் மீண்டும் வேலைத்தளத்தளத்திற்கு செல்வதற்கே நேரம் போதுமாக இருக்கிறது. குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதற்கு உறவினர் இன்றி கடல் கடந்து வந்தும் கனவனை எதிர்பார்த்திருந்த மனைவியருக்கும், கடல் கடந்து சென்ற கணவனை தொலைபேசி வழியாக எதிர்பார்த்திருந்த மனைவியருக்கும், தந்தையை எதிர்பார்த்திருந்த பிள்ளைகளுக்கும் அந்தக் கணங்கள் ஏமாற்றத்தையே அளித்திருக்கும். தங்குமிடத்தில் நாளைய சமையலுக்கு பெயர் குறிப்பிடப்பட்டவர் ஏச்சுப்பட்ட சந்தர்ப்பங்களையும்; அந்த நடுநிசிக் கலந்துரையாடல்கள் பெற்றுத்தரவே செய்தன.
ஆனாலும், பிறந்த மண்ணையும் உறவுகளையும் பற்றிப் பேசுகின்ற பொழுது அவை பெரிதாக அலட்டிக் கொள்ளப்படுகின்ற விடயமாகவே இல்லை. ஊருக்கான வேலையை எங்கிருந்து ஆரம்பிப்பது? பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் மஷூறா அடிப்படையில் PAQ அமைப்பின் கன்னிச் செயற்திட்டம் தீர்மானிக்கப்படுகிறது.
23.06.2012 சனிக்கிழமைசூரியன் மத்தியை நோக்கி நகரும் வேளை… 17 குடும்பங்கள் புத்தளம் மணல்குன்று முன்பள்ளியில் ஒன்று சேர்கின்றன, முகத்தில் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு. தம்மை விட்டு சிறைக்குச் சென்ற கணவன், பிள்ளை, சகோதரன் என்ற உறவுகள் தந்த கவலைகளுக்கு அப்பால்…. பயங்கரவாதக் குடும்பங்களாகவே தங்களைப் பார்க்கும் சமூகத்தின் நிலையை எண்ணி ஏக்கப் பெருமூச்சோடு பத்து மாதங்கள் கடந்த நிலையில்PAQ அமைப்பின் அழைப்புக்கு பதிலளிப்பதில் இருந்த ஆர்வத்தை அவர்களின் முகபாவனையில் வாசிக்க முடியுமாக இருந்தது.
எமக்கு உதவினால் கிறீஸ் மனிதன் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள எமது உறவுகளோடு அவர்களும் சிறைக்குச் செல்ல வேண்டி வரும் என்பதால் எம்மைச் சூழ இருந்த உறவுகள் எம்மையும் பயங்கரவாதிகளாகவே பார்த்தார்களோ தெரியாது. எனினும் 3,630 கிலோ மீட்டர்களுக்கு  அப்பால் இருந்த புத்தளத்து கத்தாரிய உறவுகள் அவர்களின் பாலைவனத்து வியர்வைத் துளிகளால் எமது உள்ளத்தின் காயங்களுக்கு ஒத்தடம் தந்தார்கள்.
“PAQ அமைப்பினால் வழங்கப்பட்ட மாதத்துக்கு போதுமான உணவுப்பொதியும், சட்ட ஆலோசணைகளும் எமக்குள் புதிய உற்சாகத்தை உருவாக்கியது. சமூகத்தில் பாராமுகமாக இருந்த எம்மை பலரும் போட்டிபோட்டுக்கொண்டு உபசரிக்க களம் சமைத்தது.”
பாலைவனத்து சுடும் வெய்யிலின் வியர்வைத் துளிகளால் சேகரிக்கப்பட்ட றியால்கள் புத்தளத்து மண்ணின் ஆதரவற்றவர்களை அரவணைக்கின்றன.
அனுதாபம் வேண்டாம் ஆதரவு தாருங்கள்…” இது சமூகத்தில் வாழும் இன்னுமொரு சமூகத்தின் குரல். ஆம், மாற்றுத் திறனாளிகள்சமூகத்தில் பாதையோர விளையாட்டுப் பொருட்களாகஏன் பிறந்தோம் என வீட்டுக்குள்ளேயே ஏங்கி அழும் ஜீவன்களாகமறைத்து வைத்தும் சுமையாக அவர்களை எண்ணி நாள்தோறும் கவலைக் கொண்டும் வாழும் சமூகப் பாரம்பரியம் உடைத்தெறியப்படுகின்றது.
இறைவன் மனிதனுக்களித்த திறமைகள் ஆச்சரியமானவை. மாற்றுத் திறனாளிகள் அவர்கள்,  எமக்கு நிகரானவர்கள். ரமழானிய ஆன்மிக செழிப்போடு ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை பிரதான மண்டபத்தில் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் சமமாக அமர்ந்து அவர்களோடு இப்தார் செய்த காட்சியும் அன்பளிப்புகள் வழங்கி அவர்களை ஆணந்தம் அடையச் செய்ததும் கண்கொள்ளாக் காட்சி!
கத்தாரில் கிடைக்கின்ற ஒரு நாள் வெள்ளி விடுமுறையில் வியாழன் இரவு நண்பர்களுடன் இணைந்து வயிராற உண்டு, விளையாடி மகிழும் உள்ளமும் உணர்வுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உண்டு என்ற உணர்வு எம்மை ஒரு முறை சிந்திக்க வைத்தது உண்மை.
பெருநாளுக்கு முந்திய இறுதி இரவில் நாளைய பகலுணவுக்காக கடன்பெற்று எமது வயிற்றுப் பசியைப் போக்கி எம்மை மகிழ்வித்த பெற்றே ரின் தூய அன்பை இம்முறை ரமழானில் புத்தளத்து மண்ணின் ஒரு கோடியில் மஸ்ஜிதுல் கூபாப் பகுதியில் ஆதரவற்ற உறவுகளோடு பகிந்து கொண்ட சந்தர்ப்பம் அது. கடல் கடந்து வாழ்ந்தாலும் பெருநாள் பகலுணவு வேளையில் அவர்களது அடிமனதுப் பிரார்த்தனைகள் எமக்கு மனஅமைதியை உருவாக்கியது.
முச்சக்கர வண்டியில் ஸ்பீக்கர்” கட்டி வீடு வீடாக சில்லறைப் பணம் சேர்த்து சத்திர சிகிச்சை செய்வதற்குள் நோயாளியின் நிலை என்னவாகும்? இறைவன் அருளால் கூட்டு முயற்சியால் புற்று மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு சில நூறாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டன. சமூகத்தில் தங்கி வாழ்ந்த எமது உறவுகளுக்காகவும் எமது றியால்கள் நீண்டு சென்றுள்ளன. ஸனஇய்யாவின் முகாம்களுக்குள் காய்ச்சலால் அவதிப்படும்போதெல்லாம் உள்ளம் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது.
கல்வி பெரும் உரிமை அனைவருக்கும் சமம் என்பர். புத்தளம் அசன் குத்தூஸ் பாடசாலையும் அங்கு பயிலும் மாணவர்களும் இதற்கு விதிவிலக்கா? மாணவர்களையும் பாடசாலைக்குத் தேவையான வளங்களையும் விருத்தியுறச் செய்வதும் சமூகக் கடமை அல்லவா! சில பத்து கத்தார் றியால்கள் எமது மறுமை வாழ்வுக்கு நிரந்தர நன்மைகளை ஈட்டித் தந்தது, அல்ஹம்துலில்லாஹ். புதிதாக அமைக்கப்பட்டு வரும் 120 அடி நீளமான சுற்று மதிலும் முதலாம், இரண்டாம் தர மாணவர்களின் கரங்களில் தவழும் அப்பியாசக் கொப்பிகளும் காகிதாதிகளும் றியால்களின் பெறுமதியை ரூபாவில் ஞாபகப்படுத்தி மன நிம்மதியை ஏற்படுத்துகின்றன.
எம்மைப் போல், தாய் மண்ணையும், உறவுகளையும் துறந்து தொழில்வாய்ப்புக்காக கத்தாருக்கு வரும் எமது மண்ணின் முதன்மைச் சொந்தங்களின் தொழில் தேடுகின்ற பணியில் பத்திரிகை விளம்பரம் முதல் நட்புடன் வழிகாட்டல்களை வழங்கி உறவுகளின் சுக துக்கங்களில் பங்கேட்கும் போது, தூர இருக்கும் இரத்த உறவுச் சகோதரனுடன் சண்டை இட்ட காட்சிகள் மனதைக் காயப்படுத்துகின்றது. மீண்டும், அந்த உறவுகளோடு அன்பாக உறவாட எமது உல்லம் ஆவல் கொள்கின்றது.
மாதாந்தம் பெறும் 600 QR லில் எனது தனிப்பட்ட, குடும்ப தேவைகளுக்கு அப்பால் நான் வழங்கிய 10 றியால் ஒரு வருடத்தில் ஒன்றரை மில்லியன் ரூபாவாக 1,500 குடும்பங்கள் பயனடைந்து வியாபித்தமை இறைவன் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்ற ஒரு பயிரின் உதாரணத்துக்கு ஒத்ததாகும். எமது எதிர்பார்ப்புகள் சில சந்தோஷங்கள், பாராட்டுதல்கள், புகழாரங்கள் அல்ல. எல்லாவற்றுக்கும் அப்பால் அல்லாஹ்வுடைய திருப்தியும் உயர்ந்த சுவனபதியுமாகும்.
14.06.2013. ஒரு வருடம் கடந்து கத்தாரின் Landmark ஆகக் காணப்படும் பனாரில் எமது வருடாந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பனார் கத்தாரின் கலாசார மத்திய நிலையம் மட்டுமல்ல இன்று பனாரில் குழுமியிருக்கின்ற உறவுகள் புத்தளத்துக்கு புதிய கலாசாரத்தை ஏற்படுத்திய முன்மாதிரிகள். பனார் கட்டடத்தால் கத்தார் பெருமை அடைகிறது. இன்று பனாரில் கூடியிருக்கின்ற எமது உறவுகளால் புத்தளம் பெருமை அடைகிறது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா