(A.jabbar)
இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் அமைவது கட்சியின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்து பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கு பெரிதும் உதவுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் ஒலுவில் கிராமத்தில் வியாழக்கிழமை (30) மாலை நடைபெற்ற பெண்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் பெருந்திரளான பெண்கள் கலந்துக்கொண்டனர். அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் நபீல் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
அங்கு உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஒலுவில் பிரதேச மக்கள் இந்தக் கட்சியை வளர்த்தெடுப்பதில் பாரிய பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
ஒலுவில் துறைமுகத்தை விரைவில் கண்களால் காண வேண்டும் என்ற ஆசையினால் முதல் கட்டமாக ஒலுவிலில் களங்கரை விளக்காக திகழும் வெளிச்ச வீட்டையும், அதை அண்டியதாக மஹாபொல கடல்சார் பயிற்சி நிலையத்தையும், அதிதிகள் விடுதியையும் நிறுவி முழுமையான துறைமுகத்தை அமைக்க இருந்தார். ஆனால் அவரது வாழ்நாளில் அது கைகூடவில்லை.
பின்னர் நான் துறைமுக அபிவிருத்தி, கப்பல் துறை அமைச்சுகளோடு கூடியதாக எனது அமைச்சை சந்திரிக்கா பண்டாரநாயக்கா அம்மையாரின் காலத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட போது, இதனை ஒரு பூரணத்துவம் வாய்ந்த துறைமுகமாக ஆக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அதற்கான உடன்படிக்கை செய்திருந்த நிலையிலும் பின்னர் எதிர்க்கட்சியில் இருந்ததால் அது முழுவதுமாக நிறைவேறாவிட்டாலும், ஓரளவுக்கு அதற்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், அபிவிருத்தியோடு சேர்ந்து இப்பிரதேச மக்கள் பலவிதமான பாதிப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. தென்னை மரங்களோடு கூடிய வளமான காணிகள், ஊடுபயிர் செய்யக்கூடிய காணிகள் என்பன சுவீகரிக்கப்பட்டதோடு அவற்றுக்கான உரிய இழப்பீடுகள் வழங்கப்படாதது பெரும் குறைபாடாகவே இருந்து வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுக காணிச்சுவிகரிப்புக்கு வழங்கப்பட்டது போன்ற தொகை ஒலுவில் பிரதேச காணி சொந்த காரர்களுக்கு கிடைக்கவில்லை.
மண்ணரிப்பினால் கரையோர பிரதேசம் காவுக்கொள்ளப்படும் அபாயமும் ஏற்பட்டது. கடல்படையினர் வந்து சுனாமியின் விளைவாக கட்டப்பட்ட பாடசாலையில் முகாம் இட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனோடு அண்டிய அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லைக்குள் விவசாயத்தில் ஈடுபட்ட வறிய குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் அபாயமும் தலை தூக்கியது. அவர்களுக்கு படையினரும், வன இலாகா அதிகாரிகளும் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதாக தொடர்சியாக முறைபாடு செய்யப்படுகிறது. காட்டு இலாகா அதிகாரிகள் இந்நாட்டிலுள்ள காடுகள் அனைத்தும் அவர்களுக்கு சொந்தமானதென்ற மனப்பான்மையில் இருக்கிறார்கள். பகலில் பற்றைக் காடுகளில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் இரவில் அச்சத்தோடு காலங்கழிக்கின்றார்கள்.
இந்த தேர்தல் முடிவுகள் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் கொண்டுவரும். அதற்காக எமது கட்சியை பலப்படுத்துவோம். அதற்கு உங்களது பெறுமதியான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸுக்கு அளித்து எங்களது கரங்களை மேலும் பலப்படுத்துங்கள்.
ஒலுவில் பிரதேசத்தில் எமது மறைந்த பெருந்தலைவரின் முயற்சியினால் இலங்கையிலேயே சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளது. அதன் வளர்ச்சியிலும் நாம் அதிக கரிசனை காட்டி வருகின்றோம்.
ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த பெண்களான உங்கள் மத்தியில் நான் இந்த பிரதேசத்தை மையப்படுத்தியே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் மாவட்ட ரீதியாக, மாகாண ரீதியாக, தேசிய ரீதியாக பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை காண்பதற்கு நாம் எங்களது பேரம் பேசும் சக்தியை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
அதன் ஒரு கட்டமாக மாகாண ஆட்சியில் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இடம்பெறுவது அமையப்போகிறது. அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும், அதற்காக போராடுவதற்கும் தீர்மானிக்கும் சக்தி என்ற நிலையில் பேரம் பேசுவதற்கான ஆற்றலை மேலும் வலுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
திருகோணமலையில் தங்கியிருந்த இடத்தில் ஜனாதிபதியை சில தினங்களுக்கு முன் சந்திக்க நேர்ந்த போது, 'உங்களுக்கு ஏசுமாறு முஸ்லிம் அமைச்சர்கள் என்னிடம் கூறுகிறார்கள்' என்றார். 'ஆனால் நான் உங்களுக்கு ஏச மாட்டேன்' என்றேன். அவர் புன்முறுவல் பூத்தார். இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment