தமிழ் சிறைக்கைதிகளுடைய விவகாரம் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக அவற்றை நான்கு விஷேட மேல் நீதிமன்றங்கள் மேற்கொள்ளுமெனவும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் ஆசியா, பசுபிக் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா கிளைகளுக்குப் பொறுப்பான மேலதிகாரி ஹெனி மெகலியிடம் தெரிவித்தார்.
தற்பொழுது இலங்கை வந்துள்ள மனித உரிமைக்கான இக் குழுவினர் வியாழக்கிழமை (20) மாலை அமைச்சர் ஹக்கீமை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, இறுதி போர் நடந்த போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், இலங்கையில் புதிதாக இயற்றப்படும் குற்றவியல், குடியியல் சட்டங்கள், பாதிப்புக்குள்ளான வடகிழக்கு முஸ்லிம்களின் விவகாரம் போன்றவை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்பன குறித்து பிரஸ்தாப குழுவின் தலைவர் நீதியமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் முக்கியத்துவத்தின் அடிப்படையில் விதந்துரைகள் ஒவ்வொன்றாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம் மற்றும் வழக்குகளின் போது செய்மதி ஊடாகவும், காணொளி மூலமான தொடர்பாடல் ஊடாகவும் பெறப்படும் சாட்சியங்களின் முக்கியத்துவம் அவற்றின் நம்பகத்தன்மை தீர்மானிப்பது பற்றியும் அமைச்சர் மனித உரிமை குழுவினருக்கு விளக்கமளித்தார்.
காணாமல் போவோர், கடத்தப்படுவோர், சித்திரவதைக்குள்ளாவோர் பற்றிய சட்ட ஏற்பாடுகள் பற்றியும் அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றியும் தூதுக்குழுவினர் அமைச்சர் ஹக்கீமுடன் கலந்துரையாடினர்.
வடகிழக்கிலிதுருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றியும், அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், அவர்களது வாழ்வாதார முயற்சிகள் பற்றியும் அமைச்சர் ஹக்கீமிடம் இருந்து அவர்கள் விபரமாக கேட்டறிந்து கொண்டனர். இச் சந்திப்பில் நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமிலினி டி சில்வாவும் பங்குபற்றினார்.










0 comments:
Post a Comment