அரசாங்கத்துக்கு எதிராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து ஆணை வழங்கிய மக்களை மறந்துவிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதவிகளுக்கும் சுகபோகங்களுக்காகவும் அரசாங்கத்துடன் பேரம் பேசுவது முஸ்லிம் மக்களை இழிவுபடுத்தும் செயலாகும் என ஜக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசனலி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு நடத்தும் பேச்சுவார்த்தையைக் கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து அமோக வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்கள். இந்த முஸ்லிம் மக்களின் புதிய ஆனையானது அரசாங்கத்துடன் இணைவதற்கு அல்ல என்பதை மறந்து முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளான கரையோர மாவட்டம், காணிகள் தொடர்பான பிரச்சினைகள், இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, வசதி குறைந்த மக்களுக்கான சமூக நலத்திட்டங்கள் போன்றவற்றை எல்லாம் கைவிட்டுவிட்டு தனி நபர்களுக்கான அமைச்சுப் பதவிகளுக்கும் சுகபோகங்களுக்காகவும் அரசாங்கத்திடம் பேரம் பேசுவது வேடிக்கையான விடயம்.
கடந்த காலத்தில் பிரிந்துபோன இரு சமூகங்களும் கசப்பான சம்பவங்களை மறந்து இணைந்து ஒன்றாக இந்த மாகாணத்தை ஆட்சி செய்யக்கூடிய காலம் ஏற்பட்டுள்ளபோதும், அதனை எல்லாம் தூக்கியெறிந்து அரசாங்கத்துடன் சேர்ந்து கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பது என்பது இரு சமூகங்களுக்கும் மீண்டும் பாரிய விரிசலை ஏற்படுத்துவதோடு, வாக்களித்த முஸ்லிம் மக்களின் ஆனையை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும். எனவே இவைகளை கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான முடிவுகளை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கவேண்டும் என' தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment