முஸ்லிம் காங்கிரசுக்கு இன்னும் அவகாசம் தருகின்றோம். பேசுவோம் வாருங்கள். முதலமைச்சர் பதவியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தன்.
இன்று காலை கொழும்பிலுள்ள ஹோட்டல் ஜானகியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது தேர்தல் பிரசாரங்களில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது வெக்கக்கேடானது என்றும் கூறியிருந்தார்.
மொத்தத்தில் அரசுக்கு எதிராக பிரசாரத்தினை மேற்கொண்டுதான் 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது முஸ்லிம் காங்கிரஸ். முஸ்லிம் காங்கிரஸின் அரசுக்கெதிரான பிரசாரங்களை நம்பி ஜனநாயக ரீதியில் வாக்களித்த முஸ்லிம் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடக் கூடாது.
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் பெருமளவு முஸ்லிம்கள் எமது தமிழ் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பார்கள்.
இப்போது கூட பெரும்பாலான முஸ்லிம் மக்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்து கிழக்கு மாகாண சபையில் செயற்பட வேண்டும் என்றே கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
நாங்களும் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலைமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராகவே இருக்கிறோம். எங்களுடைய தேர்தல் பிரசாரங்களில் கூட இதனை வலியுறுத்தியிருந்தோம். இப்பொழுதும் இதனைத்தான் நாங்கள் கூறுகின்றோம். எமக்கு ஒரு போதும் பதவி ஆசை கிடையாது.
ஆகையினால், முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியான அபிலாஷைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழிவிட வேண்டும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக அரசாங்கம் எங்களுடன் பேசினால் அதுபற்றி பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று இன்றுடன் ஒரு வாரம் கடந்து விட்டது. இந்நிலையில் மறுபடியும் மறுபடியும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவது யாதெனில், இத்தேர்தல் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் நடைபெறவில்லை என்பதையே.
தேர்தல் விதிகளை அரசாங்கம் பலமுறை மீறி நடந்துள்ளது. தேர்தலுக்கு முதல்நாள்கூட கிழக்கின் பல கிராம மக்களுக்கு சைக்கிள், தண்ணீர் இறைக்கும் பம்பிகள், விளையாட்டு உபகரணங்கள் என பல நன்கொடைகளை வழங்கியிருந்தது. இது பாரிய தேர்தல் முறைகேடாகும்.
அதுமட்டுமல்லாமல், கிழக்கின் எமது முதன்மை வேட்பாளரையும் அவரது குடும்பத்தினரையும் பகிரங்கமாக மிரட்டியுமிருந்தார்கள். பல துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் என்னுடைய கையெழுத்தைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலிலிருந்து விலகிக் கொள்கிறது, இருப்பினும் பிறிதொரு கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு அக்கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டு துண்டுப் பிரசுரமொன்றை வெளியிட்டிருந்தனர்.
இவை தவிர கிராமங்களுக்கு சென்று வாக்காளர் அட்டைகளை பரிசோதிப்பதாக கூறி, யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்று கணக்கெடுப்பும் நடத்தியிருக்கிறார்கள். இதுபோல் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் நடைபெற்ற அன்றும் பல முறைகேடுகள் இடம்பெற்றன. வாக்குச் சாவடிகளின் இருமருங்கிலும் இராணுவத்தினரை நிறுத்திவைத்து, மக்கள் மீது அழுத்தம் கொடுத்தனர். இராணுவத்தினரும் மக்களை தவறாக வழிநடத்தினர். வாக்குகளை எண்ணும் பணிகூட சுதந்திரமாக நடைபெறவில்லை. அங்கும் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. அதனை ஏலவே நாங்கள் ஊடகங்களுக்கு சுட்டிக் காட்டியிருந்தோம்.
இந்நிலையில்தான், தேர்தல் முடிவடைந்து ஒருவாரம் கழித்து உங்களை சந்தித்திருக்கிறோம். இன்று பல ஊகங்கள் நிலவி வருகின்றன. அதில் ஒன்றுதான் கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுக்கள். இதுபற்றி கதைக்கும் அதிகாரம் உடையவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே. அவர் இவ்விடயம் தொடர்பில் எங்களுடன் பேசினால் அதுபற்றி நிச்சயமாக நாங்கள் தட்டிக்கழிக்காமல் பரிசீலிப்போம்.
ஜனாதிபதி தவிர வேறு யாராவது இதுபற்றி பேசினால் அதற்கு நாங்கள் செவிசாய்க்க மாட்டோம். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் இதுவரை எங்களுடன் பேசவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் பதவிகளுக்கு ஆசைப்பட்டு அடிபணியாது. அப்படி அடிபணிய வேண்டியிருந்தால் எப்பொழுதோ நாங்கள் அதனைச் செய்திருப்போம். ஆகையால் கிழக்கு மாகாணசபை விடயத்திலும் எங்களுக்கு பதவி ஆசைகாட்டி பணிய வைக்கலாம் என சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனாலும், அது ஒருபோதும் நடைபெறாது’ என்று மேலும் கூறினார்.
இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் நாடாளுமன்ற குழுக்களில் தலைவர் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, அரியநேத்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment