இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/12/2013

ரிசானா விவகாரம், உணர்ச்சிகளால் மறைக்கப்பட்ட உண்மைகள்


-ஜுவைர் மீரான்-
நடந்தவைகளை மாற்றும் சக்தி நமக்கில்லை, ஆனால் சில பாடங்களைப் படித்துக் கொள்ள முடியும்.
சகோதரி றிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை கூட பல்வேறு பாடங்களை சொல்லித் தருகின்றது. அனால் அவற்றை அலசுவதனை விட, மேற்படி மரண தண்டனை தொடர்பில் வெளியிடப்படும் தவறான அடிப்படையிலான சில கருத்துக்கள் குறித்து ஓரளவு தெளிவை ஏற்படுத்திவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.



சகோதரி ரிசானாவை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் பல்வேறு தரப்புக்களிலிருந்து, பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பொழுதும், அவை எதுவுமே வெற்றியளிக்கவில்லை என்பது, குறித்த சகோதரியின் விதியை அல்லாஹ் அவ்வாறுதான் ஏற்படுத்தி வைத்துள்ளான் என்பதனையே காட்டுகின்றது.



இந்நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, முஸ்லிமல்லாதவர்களும் கூட மேற்படி சகோதரிக்கு நேர்ந்த கதி குறித்து சோகத்தில் இருக்கும் இந்நேரத்தில், பல்வேறு தரப்பட்டவர்களும் தங்கள் அனுதாபம், கவலை, ஆத்திரம், வெறுப்பு, இஸ்லாத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை பல்வேறு பட்ட ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இவற்றில் குறிப்பிடத் தக்க அளவிலான வெளிப்படுத்தல்கள் தவறான அடிப்படைகளில் இருந்து வெளிப்படுகின்றன.



இது இவ்வாறு இருக்க, யாழ் முஸ்லிம் இணையத்தளம், அரசியல் தலைவர்களின் அனுதாப அறிக்கைகள் எதனையும் பிரசுரிப்பதில்லை என்று அறிவித்துள்ளது. அனுதாப அறிக்கைகள் எவ்வித பயனையும் பெற்றுத் தரப்போவதில்லை என்பதனால், இவ்வாறான முடிவு சரியானது என்றே கருத வேண்டும். 



சிலர் இச்சந்தர்ப்பத்தில் தமது மொழியறிவு, இலக்கியப் புலமை என்பவற்றை பறைசாற்றுமுகமாக கவிதை, சிறுகதை என்று துன்பத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டக் கூடிய சொல்லாடல்களில் ஈடுபடுகின்றனர். இதுவும் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், இவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதனை விட வேறெதையும் செய்துவிடப் போவதில்லை.




அடுத்து, இவ்விவகாரத்தைத் தொடர்ந்து வெளியிடப் பட்ட பல்வேறு கருத்துக்களை நோக்கும் பொழுது, கருத்துத் தெரிவிப்பவர்களிடம் இந்நிகழ்வுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவற்ற நிலை காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அவற்றுள் பிழையாக விளங்கிக் கொள்ளப் பட்ட, ஆனால் தெளிவு படுத்தப்பட முடியுமான சில விடயங்களை மட்டும் நோக்குவோம்.



சவூதி அரேபியாவின் சட்டம் 

சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள சட்டம், இஸ்லாமிய ஷரிஆ சட்டம் என்று கூறப்பட்டாலும், அது முழுமையான ஷரிஆ சட்டம் அல்ல என்பதே உண்மை. சவூதி அரேபியாவில் இஸ்லாமிய நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப் படுவதாக மேற்கத்தைய ஊடகங்கள் குறிப்பிட்டாலும், அது உண்மை அல்ல.பரம்பரை அரச ஆட்சி முறை, வீடுகளில் பணிப்பெண்கள், சாரதிகளாக மஹ்ரம் இல்லாத அன்னியவர்கள் அனுமதிக்கப்படுவது போன்றவை இஸ்லாத்திற்கு முரணானவை ஆகும். இஸ்லாமிய ஷரிஆ சட்டத்துடன் நெருக்கமான ஒரு சட்டம் உலகத்தில் சவூதி அரேபியாவில் உள்ளது என்பது சரியாகும். சில தண்டனைகள் இஸ்லாத்தில் கூறப் பட்டுள்ள வடிவில் வழங்கப்பட்டாலும், விசாரணைகள் எந்த அளவு தூரம் முறையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் இடம் பெறுகின்றன என்பது கேள்விக் குறியே.
விசாரணைகளில் முறையற்ற தன்மை
ரிசானாவின் பொறுப்பிலிருந்த குழந்த மரணித்து, ரிசானா விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது, அங்கே மொழிபெயர்ப்பாளராக மலையாளி ஒருவரே இருந்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க நாடுகளின் திறனுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களில் கணிசமான தொகையினர் மலையாளிகள் ஆவர். இவர்கள் வேற்று இனத்தவர்கள்/ நாட்டவர்கள் தொழிலுக்கு வருவதனை தடுப்பதற்காக எதையும் செய்யக் கூடியவர்கள் ஆவார்கள். தமிழுக்கும், மலையாளத்துக்கும் இடையில் மொழி ரீதியாக கணிசமான வேறுபாடுகள் காணப் படுகின்றன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பிரதேச வழக்குத் தமிழைப் பேசக்கூடிய போதிய கல்வியறிவற்ற ஒருவரிடம், மலையாளி ஒருவர் மொழிபெயர்ப்பாளராக இருந்து விசாரணை நடத்தி வாக்குமூலமொன்றை பெறும் பொழுது, அது எவ்வகையிலும் சரியானதாக அமையப் போவதில்லை என்பது தெளிவு. 

ரிசானாவுக்கு எதிரான வழக்கில், தடையவியல் ஆதராங்களோ, பிரேத பரிசோதனை அறிக்கைகளோ, கண்கண்ட சாட்சிகளோ முக்கிய ஆதாரங்களாக முன்வைக்கப் படாமல், தீர்ப்பு வழங்கப்படுவதற்கான பிரதான காரணியாக அமைந்திருந்தது, அவரிடம் இருந்து அரபு - மலையாள மொழிபெயர்ப்பாளரால் பெறப்பட்ட பெறப்பட்ட வாக்குமூலம் ஆகும். இது இஸ்லாமிய மற்றும் சர்வதேச விசாரணை நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது ஆகும்.
அமெரிக்க, ஐரோப்பியர்களுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதில்லை, ஏழை தென்னாசிய நாட்டவர்களுக்கு மட்டுமே மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன
மேற்படி குற்றச் சாட்டு உண்மையானதா என வெளிப்படையாக நோக்கின், ஆம், உண்மையானது என்று தான் கூற வேண்டும். எனினும் இதில் சொல்லப்படாமல் மறைக்கப்பட்ட இன்னொரு விடயமும் உள்ளது. அது, தென்னாசியர்களுக்கு மட்டுமல்ல, சவூதி அரேபிய செல்வந்தர்களுக்கும் கூட எவ்வித தயக்கமும் இன்றி மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்கின்ற உண்மை ஆகும்.

சவூதி அரேபியாவில் எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, சவூதி அரேபியாவிற்கு மேற்கத்தேய நாடுகளின் தொழில் நிபுணர்கள், தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் அத்தியாவசியமாகத் தேவைப்பட்டனர். அப்பொழுது சவூதி அரேபிய அரசுக்கும், அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு அரசுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு, இன்று வரை நடைமுறையில் உள்ள தொழிலாளர் ஒப்பந்தங்களின் படி, அமெரிக்க, ஐரோப்பிய பிரஜைகளை எவ்வித குற்றத்திற்காகவும் சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்களின் கீழ் விசாரிக்கவோ தண்டிக்கவோ முடியாது, குறித்த பிரஜையின் சொந்த நாட்டுச் சட்டத்தின் கீழேயே விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். ஆகவே, அமெரிக்க, ஐரோப்பிய நாட்டவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாவதில்லை என்பது சரியானதே, ஆனால் அதற்கான காரணம், 'பாரபட்சம்' என்பது அல்ல.

இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளும், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளும், ஆபிரிக்க நாடுகளும் தமது நாட்டுத் தொழிலாளர்கள், சவூதி அரேபிய சட்டதிட்டங்களுக்கு அமைய விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுவதற்கு உடன்பட்டே தொழிலாளர் ஒப்பத்தங்களை மேற்கொண்டுள்ளன. சவூதி அரேபியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துத் தண்டனைகளுமே இவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. பொதுவாகவே சவூதி அரேபியாவில் சலுகைகள் காட்டப் படுவதில்லை, அதிலும் கொலைக் குற்றங்களில் உள்நாட்டவர்களுக்கு என்று எவ்வித சல்கைகளும் காட்டப் படுவதே இல்லை, அது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரியே.

* இங்கு மிக முக்கியமான இன்னொரு வடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இலங்கை அரசுக்கும், சவூதி அரேபிய அரசுக்கும் இடையிலான தொழிலாளர் ஒப்பந்தத்தின் படி, இலங்கைப் பிரஜைகள் தொழிலுக்காகச் சென்றால், அங்கே எவ்வித உருவ வழிபாடுகளிலும், சூனியம் மந்திரம் போன்றவற்றிலும் ஈடு பட முடியாது. மேற்சொன்னவை சவூதி அரேபியர்களுக்கு தடை செய்யப் பட்டுள்ளதால், இலங்கைத் தொழிலாளர்களுக்கும் தடை ஆகும்.
குழந்தையின் மரணம் நிகழும் பொழுது ரிசானா 18 வயதை அடைந்திருக்கவில்லை, ஆகவே சிறிய வயதுடையவர் மீது கொலைக் குற்றம் சுமத்த முடியாது
சம்பவம் நிகழும் பொழுது சகோதரி றிசானா 18 வயதை அடைந்திருந்தாரா, அல்லது 17 வயதில் தான் இருந்தாரா என்ற ஆய்வுகள் கூட இடம்பெற்றிருந்ததன. சவூதி அரேபியாவில் நடைமுறையிலுள்ள சட்டம் மற்றும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ஒருவர் பருவ வயதை அடைந்துவிட்டால், அவர் சிறுவர் அல்லது சிறுமியாக கருதப் பட மாட்டார், பெரியவராகவே கருதப்படுவார்.
ரிசானாவை வயது மாற்றிய கடவுச் சீட்டில் அனுப்பிய முகவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்
இது கவலையினதும் உணர்ச்சியினதும் வெளிப்பாடு என்பது சொல்லாமலேயே புரியும். இது போன்ற செயல்கள் சட்ட விரோதமாக இருந்த பொழுதும், இலங்கைப் பிரஜைகளில் அதிகமானவர்கள் இவ்வகையான செயல்களில் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டே இருக்கின்றனர்.


தொழில் பெறுவதற்கான நேர்முகப் பரீட்சைக்குச் செல்வதற்காக, தமக்குத் தெரிந்தவர்களின் நிறுவனங்களில்  இருந்து, செய்யாத தொழிலை செய்ததாக பெறப்படும் அனுபவ/ சிபார்சுக் கடிதங்கள், மூன்று மாதம் செய்த தொழிலை, ஒரு வருடம் செய்ததாக சுய விபரக் கோவையில் தெரிவிப்பது போன்றவை இவ்வகையையே சாரும். ஆகவே, நமது கோபத்தை முகவருக்கு எதிராக மட்டும் திருப்புவது பயனற்றது. ரிசானாவின் குடும்ப வறுமையே பிறந்த திகதி மாற்றி கடவுச்சீட்டு பெறப்படுவதற்கான முக்கிய காரணி ஆகும். (உணர்வுகளை புண்படுத்த விரும்பாததால், இதில் சம்மந்தப்பட்டவர்கள், சம்மதித்தவர்கள் குறித்து மேலும் எழுத விரும்பவில்லை)

கடந்த ஆறு வருட காலமாக, "ரிசானா" என்பது இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் அடிக்கடி இடம்பெற்ற தலைப்பாக, ஊடகங்களின் பக்கங்களை கட்டுரைகள் கொண்டு நிறைத்த விடையதானமாக, அரசியல் வாதிகள், மனித உரிமை ஆர்வலர்களின் வாய்களில் தவழ்ந்த பெயராகக் காணப்பட்ட பொழுதும், நேற்று வெளிவந்த புகைப்படங்களில் உள்ள ரிசானாவின் வீட்டைப் பார்க்கும் பொழுது, அதில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. ஓலைக் கிடுகுகளும், அடுக்கப் பட்ட செங்கல்லுகளும் கொண்ட ஒரு குடிலே இன்னுமும் அவர்களின் வீடு. ஆறு வருடங்களாக பேசிய அளவுக்கு, ரிசானாவின் குடும்பத்திற்கு எவ்வித உதவிகளும் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதை யதார்த்தமாக காண முடிகின்றது.

இத்தோடு ரிசானாவை மறந்து விடாமல், பாதிக்கப் பட்ட குடும்பம் என்ற வகையில் முதலில் உடனடியாக ரிசானாவின் குடும்பத்திற்கும், அடுத்ததாக அதே நிலைமையில் உள்ள ஏனைய வறிய குடும்பங்களுக்கும் நம்மாலான உதவிகளை செய்து, இனியும் ஒரு பெண்பிள்ளை வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக செல்வதனை தடுக்க முயல்வோம்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா