இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/14/2013

றிசான குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை - ஹிஸ்புல்லா


TM : மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு உதவுவதற்காக சவூதி பிரஜையினால் வழங்கப்பட்ட  நிதியுதவியை திருப்பியனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.


கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.இந்த நிதி பிரதி அமைச்சர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் காத்தான்குடியிலுள்ள அவரின் அலுவகத்தில் வைத்து சவூதி பிரஜையினால் கையளிக்கப்பட்டது. 



இந்நிலையில், தனது மகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவூதி அரேபியாவினால் வழங்கப்படும் எந்தவித உதவிகளையும் ஏற்கமாட்டோம் என ரிசானாவின் தாயான பரீனா நபீக் அறிவித்திருந்தார்.



இதனால் ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிடினால் வழங்கப்பட்ட நிதி இதுவரை ரிசானாவின் குடும்பத்திடம் வழங்கப்படவில்லை என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.



"இந்த பணத் தொகையினை உரியவரிடம் திருப்பி அனுப்பவே நான் முடிவு செய்திருந்தேன். எனினும் குறித்த பணத்தை திருப்பி அனுப்ப வேண்டாம் என திருகோமணமலை மாவட்டத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் ரிசானாவின் உறவினர்கள் தன்னிடம் வேண்டிக்கொண்டனர்" என அவர் குறிப்பிட்டார்.



இதனால் இந்த பணம் இதுவரை திருப்பி அனுப்பப்படவில்லை. இது தொடர்பான விரைவில் இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.
»»  read more

2/04/2013

இன்று இலங்கையின் சுதந்திர தினம் அதேவேளை ரிசனவுக்கு 25ஆவது பிறந்த தினம்


TM:நான்கு மாத குழந்தையை கொலைச்செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கிக்கு இன்று 04 ஆம் திகதி 25 ஆவது பிறந்தநாளாகும். ரிசானா நபீக் முதூர் சாபிநகரில் 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி பிறந்தார்.

திருகோண மலையில் இன்று நடைபெற்ற 65 ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் பங்கேற்குமாறு விழா ஏற்பாட்டுக்குழு ரிசானாவின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்தபோதிலும் அந்த அழைப்பை அவருடைய குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான வைபவத்தில் கலந்துக்கொள்வதற்கான மனநிலையில் தாம் இல்லை என்று ரிசானாவின் தயார் தெரிவித்துள்ளார். 6 வயது கூட்டியே அவரை சவூதி அரேபியாவுக்கு வெளிநாட்டு முகவர் நிலையத்தை சேர்ந்தோர் 17 வயதில் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
»»  read more

1/25/2013

என் மகள் வாழ்ந்த வீட்டை இடிக்க வேண்டாம் ரிசானாவின் தாயார்


என்னுடைய செல்லம் வாழ்ந்த வீட்டை உடைக்க வேண்டாம் என்று இராணுவத்தினரிடம் ரிசானாவின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.மூதூர் சாபி நகரில் வசிக்கும் ரிசானாவின் பெற்றோருக்கு வீடொன்றைக் கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தின் 22 ஆவது படையணியின் பிரிகேடியர் அருண வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ரிசானாவின் தாயாரான அஹமது செய்யது பரீனா மற்றும் தந்தை மொஹமது சுல்தான் நபீக் ஆகியோரே அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இதன்போது சவூதியில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட தனது மகளான ரிசானா நபீக் வாழ்ந்த குடிசையை உடைக்காமலே தங்களுக்கான புதிய வீட்டை கட்டுமாறு ரிசானாவின் தாயார் இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை இவ்வீட்டு நிர்மானங்களுக்கு பொறுப்பாக இராணுவத்தின் 224 ஆவது படையணி தலைமை அலுவலகத்தின் கர்னல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.IN
»»  read more

1/22/2013

ரிசானாவின் குடும்பத்தினர் ஜனாதிபதியை சந்திப்பபு

ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார். மேலும் ரிசானாவின் சகோதரிக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்தில் வேலை செய்வதற்கான நியமனக் கடிதமும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
»»  read more

1/20/2013

சவூதி பிரமுகர் வழங்கிய பணத்தை ரிசானா குடும்பத்தினர் ஏற்காவிடில் திருப்பியனுப்பப்படும்: ஹிஸ்புல்லா

VI: சவூதி அரேபிய பிரமுகர் வழங்கியுள்ள பத்து இலட்ச ரூபா பணத்தை ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள மறுத்தால் அப் பணம் திருப்பி அனுப்பப்படும் என்று பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்
.
இலங்கைக்கு கடந்தவாரம் விஜயம் செய்த சவூதி அரேபிய இளவரசரின் சட்ட ஆலோசகர், இலங்கை ஊடகங்களில் ரிசானா நபீக்கின் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை மக்களின் உள்ளக் கிடக்கைகளை அறிந்து தனது சொந்த பணத்தில் 10 இலட்சம் ரூபாவை வழங்கினார்.

ரிசானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வழங்கும்படி கூறி அவர் அப்பணத்தை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கையளித்துள்ளார்.

இந்நிலையில் சவூதி அரேபிய அரசு வழங்கும் பணத்தை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பணத்தை வழங்க நேற்று மூதூருக்கு செல்லவிருந்ததாகவும் ரிசானாவின் தாயாரின் அறிவிப்பை அடுத்து மூதூர் விஜயத்தை ஒத்திவைத்ததாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
»»  read more

1/18/2013

சவுதி அரேபிய நாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ள போவதில்லை!- ரிசானாவின் தாயார்


TW:எமது மகளை கொலை செய்த சவூதி அரேபிய அரசாங்கத்தினதோ அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த நபர்களினதோ எந்த உதவிகளும் தமக்கு தேவையில்லை என்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானாவின் தாயாரான அஹமது செய்யது பரீனா தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எந்த உதவிகளையும் தான் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ள ரிசானாவின் தாயார், சவூதி அரேபியாவைச் சேர்ந்த பலர் தனக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறான அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுப் பக்கம் எவரும் வரவேண்டாம் என்றும் அவர் கண்டிப்பாக குறிப்பிட்டுள்ளார்
ரிசானாவின் குடும்பத்துக்கு அமைச்சர் ஹக்கீம் நிதியுதவி
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்துக்கு நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் ஐந்து இலட்ச ரூபாவை வழங்கியுள்ளார்.
இதேவேளை சமூகசேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மூன்று இலட்ச ரூபாவை ரிசானாவின் குடும்பத்துக்கு நேரடியாக சென்று கையளித்துள்ளார்.
»»  read more

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானாவின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க செல்லும் அமைச்சர்கள்


சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் மூதூர் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கமைய இந்தக்குழு இன்று மாலை 3.00 மணிக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது.
இக்குழுவில்,அமைச்சர்களான ஜோன் செனவிரட்ண, பந்துல குணவர்தன, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அனுர பிரியதர்ஷன யாப்பா, சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, பிரதி அமைச்சர் விஜய முனிசொய்ஸா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் அடங்குகின்றனர்.
ரிசானாவின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் இக்குழுவினர், அவர்களது அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அக்குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிரந்த வீடொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டி வைக்கவுள்ளதாக முதலமைச்சரின் ஆலோசகர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் முகம்மது ஸகீது தெரிவித்துள்ளார்
»»  read more

1/16/2013

ரிஸானா நபீகின் மரண தண்டனை – குற்றவாளிகள் யார்? (வீடியோ)

SLTJ : இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது. கொலையுண்ட குழந்தையின் பெற்றோர் கல்நெஞ்சம் படைத்தவர்கள் சவுதி அரேபியா மனித நேயமற்ற நாடு என்று ரிஸானா விடயத்தில் ஊடகங்கள் உலரிக்கொட்டும் விமர்சனங்கள் சரியானவையா? ரிஸானாவின் மரணத்தில் நடந்தது என்ன? இலங்கை அரசின் ஏமாற்று நாடகம் மற்றும் உண்மையில் குற்றவாளிகள் யார் என்பதை சுருக்கமாய் விபரிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் எம்.டீ.எம். பர்ஸான் அவர்களின் உரை.

»»  read more

1/15/2013

ரிஸானாவின் குடிசையில் கண்ணீர் வெள்ளம்!

VI : மூதூர் ஷாபி நக­ரி­லுள்ள ரிஸானா நபீக்கின் குடி­சையைச் சென்­ற­டைந்­த­போது சனிக்­கி­ழமை மாலை 3 மணி­யையும் தாண்­டி­யி­ருந்­தது.


குடி­சையைச் சூழ பெருங் கூட்டம். மௌனம் குடி­கொண்­டி­ருந்த அந்த வளவில் கரை புரண்­டோ­டிய கண்ணீர் வெள்­ளத்­தினால் ரிஸா­னாவின் குடி­சையே கரைந்­து­வி­டும் ­போ­லி­ருந்­தது.

குடி­சைக்கு வெளியே அமைக்­கப்­பட்­டி­ருந்த சிறு கொட்டில் ஒன்­றின்கீழ் போடப்பட்டிருந்த சாக்குக் கட்­டிலில் தூங்கிக் கொண்­டி­ருந்தார் ரிஸா­னாவின் தந்தை முகம்­மது நபீக்.

ரிஸா­னாவின் மரணச் செய்தி கேட்டு தந்தை நபீக் மார­டைப்­பினால் மர­ணித்­து­விட்­ட­தாக வதந்தி ஒன்று நாடு முழு­வதும் வேக­மாகப் பரவிக் கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே நான் அவரைச் சந்­தித்தேன். மகளின் மறை­வினால் மூன்று நாட்­க­ளாக தூக்­கத்தைத் தொலைத்­தி­ருந்த அவர் அப்­போ­துதான் சற்று கண்­ண­யர்ந்து தூங்­கு­வ­தாக அங்­கி­ருந்­த­வர்கள் சொன்­னார்கள். அவர் கண்­வி­ழிக்கும் வரை அங்­கேயே காத்­தி­ருந்தேன்.

"ரிஸானா கடும் பயந்த சுபாவம் கொண்­டவ. ஸ்கூலில் கூட யாரும் அடிச்சா அவ திருப்பி அடிக்­க­மாட்டா. கை நீட்­ட­மாட்டா. ஊட்ட வந்­துதான் சொல்­லுவா.. அவ ஒரு அமை­தி­யான புள்ள.

குடும்பக் கஷ்­டத்­தா­லயும் தம்பி தங்­கச்­சி­மார படிக்க வைக்­கணும் என்­டும்தான் அவ சவூ­திக்கு போனா... அந்த நேரத்­துல என்­னால தொழி­லுக்குப் போக ஏலாத நிலை...அங்­கால புலிப் பிரச்­சின....இங்­கால ஆமிப் பிரச்­சின....

அல்­லாஹ்தான் அவவ தந்தான்..இப்ப அவனே அவவ எடுத்­துக்­கிட்டான்...."

இதற்கு மேல் அவரால் பேச முடி­ய­வில்லை.... சுருக்­க­மாகக் கதைத்­து­விட்டு மீண்டும் கண்­ண­யர்­கிறார்.

***

ரிஸா­னாவின் தாயாரைச் சந்­திப்­ப­தற்­காக பல மணி நேரம் காத்­தி­ருந்தேன். ஆறுதல் சொல்­வ­தற்­காக வந்­தி­ருந்த பெண்­களால் நிறைந்­தி­ருந்­தது அந்தச் சிறு குடிசை. அவர்கள் ரிஸா­னாவின் தாயாரைக் கட்­டிப்­பி­டித்து கத­றி­ய­ழுது கொண்­டி­ருந்­தார்கள். அழு­கு­ரல்­களைத் தவிர வேறு எந்த சப்­தமும் அங்­கி­ருந்து வெளி­வ­ர­வில்லை.

போர்வை ஒன்­றினால் போர்த்­தி­ய­படி ரிஸா­னாவின் தாயார் பரீனா நடுவில் அமர்ந்­தி­ருக்க அவ­ருக்கு வலப் புற­மா­கவும் இடப் புற­மா­கவும் ரிஸா­னாவின் சகோ­த­ரிகள் அமர்ந்­தி­ருந்­தார்கள்.

ரிஸா­னாவின் தாயார் பேசத் தொடங்­கினார்...இல்லை இல்லை அழத் தொடங்­கினார்.

அவர் சொல்­வதைக் கேளுங்கள்....

" என்ட புள்­ளய இழந்­து­போட்டு நான் படு­ற­பாடு எனக்கு மட்­டும்தான் தெரியும்.

ஒன்­பதாம் ஆண்டு வரயும் படிச்­சிப்­போட்டு உம்மா இதுக்கு மேல என்­னால படிக்க ஏலா..நான் வெளி­நாட்­டுக்கு போய் காசு அனுப்பி தம்பி தங்­கச்­சி­மார படிக்க வைக்கன் என்டு சொன்னா...

எங்­கட குடும்ப கஷ்டம் அப்­படி....புலிப்­பி­ரச்­சி­னை­யால வாப்­பாக்கு ஒழுங்­கான தொழில் இல்ல... ஒருநாள் திண்டா அடுத்த நாளைக்கு திங்க ஏலா..இந்த நில­மை­யி­னா­லதான் நாங்­களும் அவவ அனுப்பி வைச்சம்.

அவ எந்தக் காரணம் கொண்டும் இந்தக் குற்­றத்த செய்­ய­மாட்டா என்டு நான் சத்­தியம் பண்­ணுவன்.

''உம்மா நான் அந்தப் புள்­ளய கொலை செய்­ய­லம்மா.... செய்­யாத குற்­றத்­துக்கு ஏன் உம்மா நான் தண்­டனை அனு­ப­விக்­கனும்-?'' என்டு கேட்டா.... அந்தக் கேள்­விக்கு என்­னால பதில் சொல்ல முடி­யல...

ஏழரை வரு­ஷமா கல்லை விழுங்­கிக்­கிட்டு கக்க முடி­யா­த­ளவு என்ட புள்­ளக்­காக ஏங்­கி­யி­ருக்கன்... ராத்தா எப்­பம்மா வருமா என்டு என்ட புள்­ளயல் கேட்­கு­துகள்.... அதுக்கு நான் என்ன பதில் சொல்­லுவன்...?

ஜனா­தி­ப­தியே நீங்க ஒரு சரி­யான ஜனா­தி­ப­தியா இருந்தால் இந்த நாட்­டி­லுள்ள எந்­த­வொரு பிள்­ளை­யையும் சவூ­திக்கு அனுப்பக் கூடா. உங்­களக் கெஞ்சிக் கேட்­கிறேன். என்ட புள்ள ரிஸா­னாக்கு வந்த நிலை வேற யாருக்கும் வந்­துடக் கூடா. குப்பை கொட்­டி­னாலும் பர­வால்ல.... இந்த நாட்­டுக்­குள்­ளயே புளப்­புக்கு ஏதா­வது செஞ்சி கொடுங்க...

என்ட புள்­ளய தன்ட புள்ள போல கேட்டு சவூ­திக்கு கடிதம் அனுப்­பின ஜனா­தி­ப­திக்கு நான் நன்றி சொல்றன். லலித் கொத்­த­லா­வல சேர் என்ட புள்­ளக்­காக அவ­ருட காச செல­வ­ழிச்­சாரு.. அவ­ருக்கு நன்றி சொல்றன்.... டொக்டர் கிபாயா, மஹ்ரூப் சேர், என்ட புள்­ளைக்­காக கஷ்­டப்­பட்ட எல்­லா­ருக்கும் நன்றி சொல்றேன்.

இலங்­கை­யில எனக்குத் தெரி­யாத அத்­தன பேரயும் என்ட புள்ள சவூ­தி­யில இருந்­துக்­குட்டு எனக்குக் காட்­டித்­தந்­தி­ருக்கா... ஜெயி­லுக்­குள்ள இருந்­துக்­கிட்டே அவ என்ன உம்­றா­வுக்கு எடுத்­தி­ருக்கா....

ஜெயில்ல போய் நான் அவவ சந்­திச்சேன்.... அவவ பிரிஞ்சி வரும்­போது ஏன் உம்மா என்ன விட்­டுட்டுப் போரீங்க... எப்ப உம்மா என்ன கூட்­டிட்டுப் போவீங்க என்டு கேட்டா...

கடை­சியா டிசம்பர் 12 ஆம் தேதி அவ என்­னோட போன்ல பேசினா... ''உம்மா எப்ப உம்மா உங்க கையால ஆக்­கின சோற நம்ம குடில்ல இருந்து சாப்­பி­டு­றது....? நீங்க, வாப்பா, தம்பி, தங்­கச்­சிமார் எல்­லா­ரோ­டயும் ஒன்டா இருந்து சோறு திங்­க­னும்­போல இருக்­கும்மா'' என்டு சொன்னா.... அந்த ஆசை நிறை­வே­றா­ம­லேயே என்ட புள்ள போயிட்­டாளே...

என்ட புள்ள இன்னும் உயி­ரோட இருக்கு என்டு நான் நம்­புறன்....அல்லாஹ் என்ட புள்­ளயத் தருவான்.... இந்த மாசம் என்ட புள்ள எனக்கு கோல் எடுக்கும்... அந்தக் கோல் வராட்­டித்தான் நான் என்ட புள்ள மௌத்தாப் போயிட்­டன்டு நம்­புவன்...அது­வ­ரைக்கும் நான் நம்­ப­மாட்டேன்..
சவூ­திக்­காரன் ஏன் எனக்­குட்ட சொல்­லாம என்ட புள்­ளய கொன்டான்...?

ரிஸா­னாக்கு மரண தண்­டனை என்டு போன்ல மெசேஜ் வந்­துச்சி..அதயும் நான் நம்ப இல்ல... அர­சாங்­கத்­துக்குக் கூட அவன் இன்னும் அறி­விக்­கல்ல..ஏன் அவன் அப்­படிச் செஞ்சான் என்டு கேட்­கிறேன்.... சவூதிக்­காரன் பதில் சொல்­லட்டும் என்­டுதான் காத்­திட்­டி­ருக்­கிறேன்...அதுக்­கப்­புறம் நான் அவ­னுக்கு பதில் சொல்­லுவன்...பாருங்க...

முழு நாடுமே எண்ட புள்­ளக்­காக துஆ செய்­திச்சி....எல்­லா­ருக்கும் நான் நன்றி சொல்றேன்...

ஏழரை வரு­சமா அவள் என்ட புள்­ளய மன்­னிக்­கல்ல... என்ட புள்ள குற்றம் செஞ்­சாத்­தான அவள் மன்­னிக்­கனும்...என்ட புள்ள குற்றம் செய்­ய­லயே....

அவள் என்ட புள்­ளய மன்­னிக்­காட்­டியும் நான் அவள மன்­னிக்கன்...!

***

ரிஸா­னாவின் தம்பி ரிப்கான். வயது 21. துக்கம் தாளாது ஆங்­காங்கே அலைந்து திரிந்து கொண்­டி­ருந்த ரிப்­கானை ஒரு­வாறு தேடிப்­பி­டித்தேன். தனது தந்­தைக்குச் சொந்­த­மான வண்டில் மாடு­க­ளுக்கு வைக்கோல் போட்டுக் கொண்­டி­ருந்தார். அழு­த­ழுது அவ­ரது கண்கள் வீங்கிப் போயி­ருந்­தன. சகோ­த­ரியின் மரணச் செய்தி கேட்ட கணம் முதல் ஒழுங்­காகச் சாப்­பிட்­டி­ருக்­க­வில்லை என்­பதை அவ­ரது உடல் நிலை காட்­டி­யது.

"ரெண்டு நாளா மாடு­க­ளுக்கு ஒழுங்கா சாப்­பாடு போடல... அதான் வைக்­கோலும் தண்­ணியும் வைக்­கலாம் என்டு வந்தேன்" என்றார்.

தாம் பசியால் வாடி­னாலும் மாடு­க­ளுக்கு பசி வந்­து­விடக் கூடாது எனக் கருதும் இரக்க குணம் கொண்ட குடும்­பத்தில் பிறந்த ரிஸா­னாவா நான்கு மாத பச்­சிளம் குழந்­தையைக் கொலை செய்­தி­ருப்பாள்?

ரிஸா­னாவின் குடும்பத்­துக்கு வரு­மானம் தேடிக் கொடுப்­பது அந்த இரண்டு வண்டில் மாடு­க­ளும்தான். இப்­போது அந்த மாடு­களும் சோர்­வி­ழந்து கிடக்­கின்­றன ரிஸா­னாவின் இழப்பால்!

***

ரிஸானா ஏன் வெளி­நாடு போனாள் என்­ப­தற்கு அவ­ளது குடிசை மட்­டுமே சாட்சி சொல்லப் போது­மா­னது.

ரிஸா­னாவின் குடிசை அமைந்­தி­ருப்­பது ஷாபி நகரின் எல்­லை­யி­லாகும். அவர்­க­ளது குடி­சையை ஒட்­டினாற் போல் ஒரு பொலிஸ் காவ­லரண் அமைந்­தி­ருக்­கி­றது. தற்­போது அந்த முகாம் அகற்­றப்­பட்­டு­விட்­டாலும் யுத்தம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் குறித்த முகாம் மீது விடு­தலைப் புலிகள் அடிக்­கடி தாக்­குதல் நடத்­து­வது வழக்கம்.

குடி­சையைத் துளைத்துக் கொண்டு ஊடு­ருவும் துப்­பாக்கிச் சன்­னங்கள் ரிஸானா குடும்­பத்­தி­னரின் உயிர்­களை எந்­த­வொரு நேரத்­திலும் பதம் பார்க்­கலாம் எனும் அச்சம் அவர்­க­ளுக்கு இல்­லா­மலா இருக்கும்? அத­னால்தான் ஆறு பேரைக் கொண்ட தனது குடும்பம் பாது­காப்­பாக உயிர்­வாழ கற்­களால் கட்­டப்­பட்ட ஒரு வீடு வேண்டும் என ரிஸானா சிந்­தித்­தி­ருக்­கிறாள்.

ரிஸா­னாவின் தந்தை காடு­க­ளுக்குச் சென்று விற­குகள் சேக­ரித்து வரு­வ­தையே தனது தொழி­லாகக் கொண்­டி­ருந்தார். ஆனால் ஒரு புறம் விடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்­த­லாலும் மறு­புறம் இரா­ணு­வத்­தினர் தொழி­லுக்குச் செல்ல தடை விதித்­த­தாலும் அவரால் குடும்ப வண்­டியை ஓட்ட முடி­ய­வில்லை. இத­னால்தான் வரு­மா­னத்­திற்கு வழி தேடி ரிஸானா சவூதி அரே­பி­யாவை தெரிவு செய்தாள் என்­கிறார் ரிஸா­னாவின் உற­வி­ன­ரான முஜீப்.
***
ரிஸா­னா­வுக்­காக அனு­தா­பப்­படும் பலரும் அவ­ளது குடும்­பத்­திற்கு உதவி செய்ய முன்­வந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். உல­கெங்­கு­மி­ருந்து அழைப்­புகள் வந்த வண்­ண­மி­ருக்­கின்­றன. உங்­க­ளுக்கு என்ன வேண்டும்? எவ்­வ­ளவு பணம் வேண்டும்? வீடு கட்டித் தரு­கிறோம்.... பிள்­ளை­களைப் படிப்­பிக்க உதவி செய்­கிறோம்.... வேலை­வாய்ப்புத் தரு­கிறோம்....

ஆனால் அனைத்­தையும் நிரா­க­ரித்துக் கொண்­டி­ருக்­கிறார் ரிஸா­னாவின் தாய். பிள்­ளையின் பெயரால் நாங்கள் சொகு­சாக வாழ விரும்­ப­வில்லை. இந்தக் குடி­சைக்­குள்­ளேயே ரிஸா­னாவின் நினை­வு­க­ளோடு செத்துப் போக விரும்­பு­கிறேன் என்­கிறார் அவர்.

ஆனாலும் மூதூர் பிராந்­திய இரா­ணுவ கட்­டளைத் தள­பதி கேர்ணல் விகும் லிய­னகே உட­ன­டி­யா­கவே செயலில் இறங்­கி­விட்டார். ரிஸா­னாவின் குடும்­பத்­திற்­கென வீடு ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்­கான பணி­களை அவர் தொடக்கி வைத்­தி­ருக்­கி­றார்.

ரிஸா­னாவின் குடி­சை­யி­லி­ருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள அவர்­க­ளுக்குச் சொந்­த­மான வளவில் வீட்­டுக்கு அத்­தி­வாரம் இடு­வ­தற்­கான வேலை­களில் இரா­ணுவ வீரர்கள் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. வீடு கட்டத் தேவை­யாக கற்கள், மண் என்­ப­னவும் அங்கு கொட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. கூடி­ய­வி­ரைவில் வீட்டை நிர்­மா­ணித்துத் தரு­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

இதற்­கி­டையில் ஜனா­தி­பதி ஒரு வீட்டை ஒதுக்­கி­யுள்­ள­தா­கவும் சவூதி தன­வந்தர் ஒருவர் வீடு கட்­டப்­போ­வ­தா­கவும் பல தக­வல்கள் வெளி­வந்­த­வண்­ண­மி­ருக்­கின்­றன. இவற்றில் எவை நடந்­தேறப் போகின்­றன என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

இது­வரை எந்­த­வொரு குறிப்­பி­டத்­தக்க அர­சி­யல்­வா­தியும் ரிஸா­னாவின் குடி­சைக்கு விஜயம் செய்­ய­வில்லை. ஆறுதல் கூற­வ­ர­வில்லை. ஆனால் அறிக்­கை­களால் மட்டும் அர­சியல் நடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். தயவு செய்து எமது பிள்­ளையின் பெயரால் அர­சியல் நடத்­தா­தீர்கள் என மன­மு­ருகிக் கேட்­கிறார் ரிஸா­னாவின் தாயாரின் சகோ­த­ர­ரான லரீப்.

இதற்­கி­டையில் ரிஸா­னாவின் குடும்­பத்­திற்­காக கிடைக்­கப்­பெறும் உத­வி­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பிப்­பது பற்றி மூதூர் முக்­கி­யஸ்­தர்கள் கலந்­து­ரை­யாடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ரிஸா­னாவில் ஞாப­கார்த்­த­மாக ஒரு அமைப்பை நிறுவி அதன் மூல­மாக ரிஸா­னாவின் குடும்­பத்தைப் பரா­ம­ரிப்­பது பற்றி ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது என்­கிறார் ரிஸா­னா­வுக்கு கற்­பித்த ஆசி­ரி­யரும் அக் குடும்­பத்தின் நல­னுக்­காக கடந்த 7 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இயங்கி வரு­ப­வ­ரு­மான ஜிஹாத் சேர்.

***
ரிஸானாவின் மரணச் செய்தி கேட்டு அந்தக் குடிசையை நோக்கி மக்கள் அலை அலையாகத் திரண்டு கொண்டிருக்கிறார்கள்.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டுமன்றி மட்டக்களப்பு, அம்பாறை, இரத்தினபுரி, கொழும்பு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் அங்கு வந்திருந்தார்கள். இனம், மதம், மொழி வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ரிஸானாவுக்காக மட்டுமே ஒன்றுகூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது. எல்லோரும் பேச வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஆனால் பேச முடியவில்லை. துக்கம் அவர்களது நெஞ்சை அடைத்திருந்ததால் கண்ணீரால் மட்டுமே அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

***
இதற்கு மேல் அங்கு நின்று அழுவதற்கு என்னிடமும் கண்ணீர் இல்லை. நேரமும் இரவு 8 மணியாகியிருந்தது. ரிஸானாவின் குடிசையிலிருந்து விடைபெறுகிறேன். கடைசியாக ரிஸானாவின் உம்மாவிடம் ஒரு கேள்வி.

" உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?

"ம்.... ரிஸானா வேண்டும்'

கொடுக்க முடியுமா எங்களால்?

»»  read more

ரிசானாவுக்கு போலி பிறப்பத்தாட்சி பத்திரம் தயாரிக்க உதவியவருக்கு ஒத்திவைத்த சிறை

TM : சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் போலி பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை தயாரிக்க உதவியதாக கூறப்படும் சந்தேகநபருக்கு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்த சிறையும் தண்டமும் விதித்தது.

தலைமறைவாகி இருந்த சந்தேகநபரான தம்பிலெப்பை அப்துல் சலாம், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஏனைய இரண்டு சந்தேகநபர்களுடனும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

ரிசானா நபீக் வெளிநாட்டு அனுப்பக்கூடிய வயதுடன் கடவுச்சீட்டு பெறுவதற்கு போலியான பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை தயாரித்த சந்தேகநபர்களான தம்பிலெப்பை அப்துல் சலாம், பக்கீர் மொஹம்மட் வஜுர்தீன் மற்றும் சாஹுல் ஹமீட் அப்துல் லத்தீப் ஆகியோருக்கு எதிராக மேல் நீமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தம்பிலெப்பை அப்துல் சலாம் தான் குற்றமற்றவர் என நீதிமன்றில் கூறியபோதும் ஏனைய இருவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டதால் இவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தலைமறைவாகிய தம்பிலெப்பை அப்துல் சலாமை புலனாய்வு பொலிஸார் பேருவளையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரை வழக்கு விசாரணைகள் முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விசாரணையின் பின் இன்று செவ்வாய்க்கிழமை இவருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5,000 ரூபா தண்ட பணமும் விதிக்கப்பட்டது.
»»  read more

தண்டனை நிறைவேற்றும் தினம்வரை தனக்கு மரண தண்டனை என றிஸானா அறிந்திருக்கவில்லை!


ரிஸானா நபீக்கிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு விசாரணை அடங்கலான சகல செயற்பாடுகளிலும் குறைபாடு காணப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் எம். ஆர். ஹம்ஸா தெரிவித்தார்.
தண்டனை நிறைவேற்றும் தினம் வரை ரிஸானா தனது தண்டனை குறித்து அறிந்திருக்கவில்லை என்று கூறிய அவர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் குறித்து வினவியதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:-
ரிஸானா 6 வாரங்கள் தான் சவூதியில் பணி புரிந்தார். அவருக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரிந்திருக்கவில்லை. குழந்தைகளை பராமரிக்கும் பயிற்சியும் அவருக்கு இருக்கவில்லை. அவர் தினமும் 3 தடவை குழந்தைக்கு பாலூட்டி வந்துள்ளார். சம்பவ தினம் 2 தடவை பாலூட்டிய போதும் எதுவித பிரச்சினையும் எழவில்லை. மூன்றாவது தடவையே குழந்தை மூச்சுத்திணறி இறந்துள்ளது.
பக்கத்துவீட்டிலுள்ள தெலுங்கு பெண்ணே ரிஸானாவுக்கு மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டார். சரியாக தகவல் பரிமாறப்படாததாலும் ரிசானா கொலை குற்ற வாளியாக்கப்பட்டார்.
மருத்துவத்தின் அறிக்கையிலும் கொலைக்கான ஆதார மெதுவும் இருக்கவில்லை எனவும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலே மேன்முறையீடு செய்யப்பட்டதோடு மேன்முறையீட்டு நீதிபதிகளாகவும் முதலில் விசாரணை நடத்திய நீதிபதிகளே நியமிக்கப்பட்டி ருந்தனர். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ புதிய சாட்சிகளை அழைக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய அவர் சந்தேகத்திற்கிட மின்றி குற்றம் நிரூபிக்கப்படாமலே ரிஸானாவுக்கு தண்டனை விதிக்கப் பட்டதாகவும் கூறினார்.
ரிஸானாவிற்கு மரண தண்னை விதிக்கப்பட்டது தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. அவரை சென்று சந்தித்து வந்த டாக்டரூடாகவே எமக்குத் தகவல் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார். ரிஸானாவின் ஜனாஸாவை ஒப்படைக்குமாறு தூதரகத்தினூடாக அறிவித்திருந்த போதும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்
»»  read more

றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மௌலவி மக்தூம்


Family members of Saudi Crown Prince Sultan bin Abdulaziz perform final prayers at his grave at Al Oud cemetery in Riyadhஅஸ்ஸலாமு அலைகும் :றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்2:155(
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல் குர்ஆன் 2:156)
أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல் குர்ஆன் 2:157)சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட உங்கள் மகள் றிசானாவை அவருக்கு அத்தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் சந்தித்தோம். அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் (மரன சாசனம்) பற்றி வினவவே இச்சந்திப்பு இடம்பெற்றது.
அவரை சந்தித்ததும் அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் ஏதும் இருக்கிறதா? என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது ஊருக்கு நான் எப்போது செல்வது? என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
சரி, எண்ணத் தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் மரண தண்டனை இப்போது விதிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப் பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.
உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப் படப் போகிறது என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.
அப்போது நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா? என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.
மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதை புரிய படுத்தினேன்.
என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா? என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது. அங்குள்ள அதிகாரிகளிடம் இது பற்றி கூறி, அவருக்காக பரிந்து பேசினேன். அவர்களும் மரணித்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி முயற்சி செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.
அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப் படும். உங்களிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது? என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொட்சம் இருப்பதாகவும், அதனை சதகா செய்திடுமாரும் வேண்டிக் கொண்டார்.
அவற்றை யாருக்கு? எங்கு? எந்த வழியில் சதகா செய்வது என்று கேட்கப் பட்டபோது, இங்கேயே, எந்த வழியிலேனும் சதகா செய்திடுங்கள் என்று உறுதிப்பட கூறி அவரே அவருக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்பு சாட்டினார்.
அவருக்கு “ஷஹாதா” (அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு) என்னும் சாட்சிப் பிரகடனம் கூற சொல்லிக் கொடுக்கப் பட்டது.
அதன் பிறகு இரண்டு ரகஅதுகள் தொழவும், துஆ செய்யவும் அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டது.
அங்கிருந்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்தது போன்றே இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. அங்கிருந்த அனைவரின் எதிர் பார்ப்பும் ரிசானா மன்னிக்கப் பட வேண்டும் என்பதே. நீண்ட நேர உரையாடல் எந்த பலனும் அளிக்காத போதும், அவரின் தண்டனை நிறைவேற்ற நியமிக்கப் பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப் பட்ட போது கூட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உயரதிகாரியிடம் ஒருவர் மன்னித்து விட்டார்களா? என்று கேட்டார், இன்ஷா அல்லாஹ் மன்னித்து விடுவார்கள் என்றே அவர் அதற்கு பதில் அளித்தார். அதாவது இறுதி நேரத்திலாவது மன்னித்து விடுவார்கள் என்பதே அவரின் எதிர் பார்ப்பாக இருந்தது. நாட்டு மன்னர், இளவரசர் சல்மான் போன்றோர் இதற்காக முயற்சித்தும் பலனளிக்காமை இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. மேலும் அங்கிருந்த யாரும் அவருடன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. பண்பாகவும், பாசமாகவுமே நடந்து கொண்டார்கள்.
அதன் பிறகு அவருக்கு நியமிக்கப் பட்டிருந்தது போன்றே அல்லாஹ்வின் நாட்டத்துடன் சென்ற புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவரை சுவர்கத்திற்கு சொந்தக் காரியாக ஆக்கியருள்வானாக. இப்பொழுது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வந்தது. அது: “முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு நன்மையை செய்திட முயற்சி செய்தாலும், இறைவனின் ஏற்பாட்டை மீறி ஒன்றும் செய்திட முடியாது. மேலும் முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு தீமையை செய்திட நினைத்தாலும் இறைவனின் ஏற்பாட்டை மீறி எந்தவொன்றும் செய்திட முடியாது”
உங்கள் மகள் ரிசானா விடயத்திலும் இதனையே கற்றுக் கொண்டோம். முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். நான் கூட உங்கள் மகளுக்காக நிறையவே துஆ செய்தேன். உங்கள் மகளின் மரண தண்டனைப் பற்றிய செய்தி ஒரு நாள் முன்னதாகவே எனக்கு கேள்வி பட்டது. அதாவது மேற்குறிப்பிட்ட சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது. அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் அவருக்காக துஆ செய்தேன். எனக்கும் அந்த நேரத்தில் அவருக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் தென்படவில்லை. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது “இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப் படுகிறார் என்றால் அநியாயக் காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக” என்று கூட பிரார்த்தித்தேன்.
மேலும் அது பற்றிய செய்திகள் வருகிறதா? என்று அடிக்கடி இணைய தளங்களை பார்த்தேன். எனினும் அங்கே செல்லும் வரை எந்த செய்தியையும் காணவில்லை. அங்கிருந்த அதிகாரிகளிடம் இது பற்றி வினவிய போது, உங்கள் நாட்டு தூதரகம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். எனவே உத்தியோகப் பூர்வமாக செய்தி வரும் வரை நான் வேறு யாரிடமும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.
இது இவ்வாறிருக்க இன்று ஊடகங்களில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் நிறைய பரிமாறப் படுகின்றன. சில முஸ்லிம் சகோதரர்கள் கூட ஈமானுக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அல்லாஹ் எங்களை மன்னிக்க வேண்டும். உண்மையை விளங்கப் படுத்தும் நோக்கிலேயே இதனை எழுதினேன். நான் ஏற்கனவே றிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன். முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது றிசானா தன்மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.
நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப் பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள். எனினும் நான் அவர்களிடம் எனக்கு இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்க உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்ட போது, இன்ஷா அல்லாஹ் உதவுகிறோம் என்று கூறினார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை வெளி உலகுக்கு கொண்டு வருவேன். இங்கு விமர்சிக்கப் படுவது அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் சட்டம் என்பதாலேயே இதற்கு முயற்சி செய்கிறேன். வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை.
உங்கள் மகள் ரிசானா அநியாயாமாக கொள்ளப் பட்டிருந்தால், தெரிந்து கொண்டே அவருக்கு அநியாயம் செய்தோரை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான். மறுமையில் இதற்கு பதிலாக அநியாயம் செய்தோரின் நன்மைளை எடுத்து இவரின் நன்மைகளில் சேர்க்கப் படவோ, அவர்களுக்கு போதியளவு நன்மைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவரின் தீமைகளை அவர்களின் மீது சுமத்தப் படவோ வாய்ப்புள்ளது. மேலும் இவருக்கு நிறைய வெகுமதிகளையும், சுவன பாக்கியத்தையும் இறைவன் வழங்குவான். அதே நேரம் இவர் தவரிளைத்திருந்தால் அந்த தவறு இத்தண்டனை மூலம் மன்னிக்கப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ். இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். 14:42
உயிரிழந்த அக்குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை என்பதற்காக அவர்களை விமர்சிப்பதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை. மன்னிபதற்கும், மன்னிக்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. மன்னித்திருந்தால் நிறைய நன்மைகளை அடைந்திருப்பார்கள் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்த தவறவில்லை.
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். 42:40
அவர்கள் இக்குழந்தையை எவ்வளவு சிரமத்துடம் பெற்றெடுத்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். மேலும் அவர்கள் உங்கள் மகள் தான் இக்கொலையை செய்திருப்பாள் என்று உறுதியாகவே நம்பாமல் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு முன் வந்திருக்க முடியாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உங்கள் மகள் அந்த நேரம் சண்டைப் பிடித்துக் கொண்டு கோவத்துடன் இருந்தார் என்பதே. எது எப்படியோ மருத்துவ அறிக்கையும் அதனை உறுதி செய்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் இறைவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன், மிகவும் ஞானமுள்ளவன். அவனுக்குத் தான் தெரியம் எதில் மக்களுக்கு நலவு இருக்கிறது, எதில் தீமை இருக்கிறது என்று. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216
உங்கள் மகள் உலகமறிய இவ்வாறு மரணத்தை சந்தித்ததன் மூலம் என்னென்ன மாற்றங்கள், நலவுகள் ஏற்பட போகிறதோ என்பதை இறைவன் மாத்திரமே அறிவான். உங்கள் மகள் ரிசானா விடுதலையாகி வந்திருந்தாலும் என்றோ ஒரு நாள் மரணமடைந்தே இருப்பார். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். எனினும் இப்போது முழு உலக முஸ்லிம்களும் அவருக்காக இருகரமேந்தி துஆ செய்கின்றார்கள். இது அவருக்குக் கிடைத்த பாக்கியமல்லவா?
பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் பணிப் பெண்கள் உள ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக துன்பங்களுக்கு ஆளாகுவது உண்மையே. எனவே இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்று பெற்றோர்கள், கணவன்மார்கள் உட்பட அனைவரும் தமது பொறுப்பிலுள்ள பெண்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எந்நிலையிலும் இறைவனின் விதியை மீறி உங்கள் மகள் ரிசானாவின் மரணம் இடம்பெற்றிருக்க முடியாது. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
ۗ قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ
“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (3:154)
இறைவன் ஒரு மனிதனுடைய மரணத்தை குறித்ததொரு பூமியில் வைத்து பிரிப்பதாக விதித்திருந்தால், அந்த இடத்திற்கு செல்வதற்கான தேவையை ஏற்படுத்துவான் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக, உங்கள் பொறுமைக்கு நற்கூலி வழங்குவானாக, உங்கள் மகள் ரிஸானாவின் பாவங்களை மன்னித்து அவருக்கு சுவன பாக்கியத்தைத் தந்தருள்வானாக
»»  read more

1/13/2013

ரிசானாவின் குடும்பத்திற்கு வீடு

VI : சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவின் குடும்பத்திற்கு அரசாங்கத்தினால் புதிய வீடொன்று நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது. இந்த வீட்டினை ஜனாதிபதி மூலம் ரிசானாவின் பெற்றோரிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய வீட்டிற்கான அடிக்கல் நடும் வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதி மூதூரில் நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப். ஏ. மஜீத் மேற்கொண்டுள்ளார்.

ரிசானாவின் சகோதரிக்கும், சகோதரருக்கும் வேலைவாய்ப்புகளை பெற்று கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குடும்பத்திற்கு தேவையான ஏனைய வசதிகளும் வழங்கப்படும் எனவும் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தா

»»  read more

ரிசானாவின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் நிதியுதவி


VI
சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் நிதியுதவி வழங்கியுள்ளார்.


காத்தான்குடிக்கு நேற்று விஜயம் செய்த அவர் சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் 10 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.

»»  read more

ரிசானா குடும்பத்துக்கு உதவ விரும்புபவர்களின் கவனத்திற்க்கு


1
அஸ்ஸலாமு அலைக்கும் ! றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்களது அவல நிலைமையை போக்கும் வகையில் பொருளாதாரரீதில் உதவுவதற்கு தாம் விரும்புவதாக எம்மோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் கூறியதுடன் றிஸானாவின் குடும்பத்தவர்களது வங்கிக் கணக்கு விபரத்தை வழங்குமாறும் கேட்டிருந்தனர்.
அவ்வாறு மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்களது நலனில் அக்கறையுள்ள சகோதரர்களுக்காக பின்வரும் வங்கிக் கணக்கு விபரம் வழங்கப்படுகின்றது.உங்களது உவ்வொரு உதவிக்கும் அல்லாஹுதஆலா ஈருலக நன்மையை வழங்கவேண்டுமென றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்கள் சார்பில் உளப்பூர்வமாகப் பிரார்த்திக்கின்றோம்.
ஜஸாகல்லாஹு கைரா !
வங்கிக் கணக்கு விபரம்:
Mr.& Mrs. M.S.M. NAFEEK (Joint Account ) 
A/C No:- 191020023213 
HATTON NATIONAL BANK, 
MUTUR BRANCH

»»  read more

அல்லாஹ் மீது சத்தியமாக நான் கழுத்தை நசிக்கவில்லை ரிசானாவில் இறுதி வாக்கு மூலக் கடிதம் வெளியானது- கடிதம் இணைப்பு


IN-நான் குழந்தையின் தொண்டயை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன. அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொல்ல நான் கழுத்தை நசிக்கவில்லை என சவூதி அரசாங்கத்தினால் கழுத்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட ரிசானா நபீக் இறுதியாக தனது வாக்குமூலக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இவ்வாறு அவர் எழுதியதாக கொலை செய்த சவூதியினால் வெளியிடப்பட்டதாக வெளியாகியுள்ள கடித்ததையும் உங்களுக்காக இணைத்துள்ளோம்.



30.01.2007, 

அல் தவாத்மி சிறைச்சாலை, 

அல் தவாத்மி, 

இலங்கையில் எனது முகவரி எம்எஸ்.நபீக், சாலி நகர் மூதூர் 

எனது உண்யைமான வயது 19, நான் பிறந்த திகதி 02.02.1988 எனது வயதை எனது சப் ஏஜன்ட் அஜிர்தீன் என்பவர் 2.2.1982 எனக்குறிப்பிட்டு கடவச்சீட்டை வழங்கினார். 

நான் 01.04.2005ல் சவூதி அரேபியாவுக்கு வந்தேன். நான் சவூதி அரபியாவில் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன். 

இந்த வீட்டில் சமைத்தல், களுவுதல், 4 மாதக் குழந்தையை பார்த்தல் போன்ற ஆகியவற்றை செய்து கொண்டு இருந்தேன்.

குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றக்கிழமை பகள் 12.30 மணியிருக்கும் அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. அங்குள்ள 4மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன் வழமை போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கின் மூலம் பால் வெளியேவர ஆரம்பித்தது. 

அப்போது நான் குழந்தையின் தொண்டயை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன். 

குழந்தையின் தாய் எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு பிள்ளை பார்த்தார். அதன் பின்னர் அந்த எஜமானி எனக்கு செருப்பால் அத்துவிட்டு குழந்தையை எடுத்தக்கொண்டு போனார். 

அப்போது எஜமானி குழந்தையின் தாய் எனக்கு செருப்பால் மூக்கிலும் கன்னத்திலும் அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது. 

பின்னர் என்னை பொலிஸிக்கு கொண்டு போய் அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நசித்ததாக கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை கரண்ட் பிடிக்கப்போவதாக கூறினார்கள். 

இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பம் வைத்தேன். அப்போது எனக்கு பயங்கரமாக இருந்தது. 

ஞாபக சக்தி அப்போது எனக்கிருக்கவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொல்ல நான் கழுத்தை நசிக்கவில்லை மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உணர்ந்து கையொப்பமிடுகின்றேன். என அதில் ரிசானா தெரிவித்திருந்தார்.
பாடசாலை சிறுமியாக ரிசானா இருந்த போது...


»»  read more

ரிசானாவின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் நிதியுதவி

VI-சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் நிதியுதவி வழங்கியுள்ளார்.

காத்தான்குடிக்கு நேற்று விஜயம் செய்த அவர் சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் 10 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.
»»  read more

1/12/2013

மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை காணவில்லை: ரிஸானாவின் தயார்

VI-மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் மகளைப் பறிகொடுத்து விட்டேன். அந்த வேதனை எனக்கு மாத்திரம் தான் தெரியும் என்று ரிஸானாவின் தயார் பரீனா அழுது கொண்டே தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

ரிஸானாவின் தாயாரை தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மகளின் செய்தியை அறிந்து கொள்ளும் வரை மகள் வீடு வந்து சேருவாள். அரசாங்கம் இதனைச் செய்யும் என்று நம்பியிருந்தேன். எனது நம்பிக்கை வீணாகி விட்டது. மகளைப் பறிகொடுத்து விட்டேன். மகளுக்காக எல்லோரும் துஆ செய்யுங்கள் என்றார்.
இதேவேளை சுகயீனமுற்று வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று விடுதலையாகி தனது வீட்டிலிருந்து ஒருமைல் தூரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த ரிஸானாவின் தந்தை நபீக்கிடம் இத்துயரச் செய்தி வியாழக்கிழமையே சொல்லப்பட்டது தற்போது அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர் ஒரு இருதய நோயாளி என்பதால் இச் செய்தி மிகவும் நிதானமாகவே தெரிவிக்கப்பட்டது என ரிஸானாவின் தயாரின் சகோதரர் எ.எம்.லரீப் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாளைமறுதினம் ரிஸானாவின் வீட்டுக்கு சமூகமளிப்பதாக தகவல் அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இன்று வெள்ளிக்கிழமை மூதூரிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்தும் ரிஸானாவின் வீட்டை நோக்கி பெரும் திரளான மக்கள் சமூகமளித்து ஆறுதல் வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

»»  read more

சரீஆ சட்டப்படி மகளுக்கு வழங்கிய தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன்-வீடியோ

Tamil Mirror News

எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை' என்று சுவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் தெரிவித்தார்.


ரிசானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு அவர் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,



'சரீஆ சட்டப்படி என மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். சரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் அது எத்தகையதாக இருந்தபோதும் நிரந்தரமான மறுமையில் ரிசானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும். அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன்.



உலகெங்கும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் எனது மகளை அவர்களது சொந்த சகோதரியாகக் கருதி 'துஆ' பிரார்த்தனையில் ஈடுபட்டதானது இதனையே மேலும் உறுதிப்படுத்துகின்றது. இதனால் ரிசானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.



இதேவேளை ரிசானாவுக்கு மன்னிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் இறுதிவரை  முயற்சித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மொத்தத்தில் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹுதஆலா அனைவருக்கும் பேரருள் புரியவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்' என்றார்.
»»  read more

ரிசானா விவகாரம், உணர்ச்சிகளால் மறைக்கப்பட்ட உண்மைகள்


-ஜுவைர் மீரான்-
நடந்தவைகளை மாற்றும் சக்தி நமக்கில்லை, ஆனால் சில பாடங்களைப் படித்துக் கொள்ள முடியும்.
சகோதரி றிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை கூட பல்வேறு பாடங்களை சொல்லித் தருகின்றது. அனால் அவற்றை அலசுவதனை விட, மேற்படி மரண தண்டனை தொடர்பில் வெளியிடப்படும் தவறான அடிப்படையிலான சில கருத்துக்கள் குறித்து ஓரளவு தெளிவை ஏற்படுத்திவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.



சகோதரி ரிசானாவை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் பல்வேறு தரப்புக்களிலிருந்து, பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பொழுதும், அவை எதுவுமே வெற்றியளிக்கவில்லை என்பது, குறித்த சகோதரியின் விதியை அல்லாஹ் அவ்வாறுதான் ஏற்படுத்தி வைத்துள்ளான் என்பதனையே காட்டுகின்றது.



இந்நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, முஸ்லிமல்லாதவர்களும் கூட மேற்படி சகோதரிக்கு நேர்ந்த கதி குறித்து சோகத்தில் இருக்கும் இந்நேரத்தில், பல்வேறு தரப்பட்டவர்களும் தங்கள் அனுதாபம், கவலை, ஆத்திரம், வெறுப்பு, இஸ்லாத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை பல்வேறு பட்ட ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இவற்றில் குறிப்பிடத் தக்க அளவிலான வெளிப்படுத்தல்கள் தவறான அடிப்படைகளில் இருந்து வெளிப்படுகின்றன.



இது இவ்வாறு இருக்க, யாழ் முஸ்லிம் இணையத்தளம், அரசியல் தலைவர்களின் அனுதாப அறிக்கைகள் எதனையும் பிரசுரிப்பதில்லை என்று அறிவித்துள்ளது. அனுதாப அறிக்கைகள் எவ்வித பயனையும் பெற்றுத் தரப்போவதில்லை என்பதனால், இவ்வாறான முடிவு சரியானது என்றே கருத வேண்டும். 



சிலர் இச்சந்தர்ப்பத்தில் தமது மொழியறிவு, இலக்கியப் புலமை என்பவற்றை பறைசாற்றுமுகமாக கவிதை, சிறுகதை என்று துன்பத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டக் கூடிய சொல்லாடல்களில் ஈடுபடுகின்றனர். இதுவும் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், இவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதனை விட வேறெதையும் செய்துவிடப் போவதில்லை.




அடுத்து, இவ்விவகாரத்தைத் தொடர்ந்து வெளியிடப் பட்ட பல்வேறு கருத்துக்களை நோக்கும் பொழுது, கருத்துத் தெரிவிப்பவர்களிடம் இந்நிகழ்வுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவற்ற நிலை காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அவற்றுள் பிழையாக விளங்கிக் கொள்ளப் பட்ட, ஆனால் தெளிவு படுத்தப்பட முடியுமான சில விடயங்களை மட்டும் நோக்குவோம்.



சவூதி அரேபியாவின் சட்டம் 

சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள சட்டம், இஸ்லாமிய ஷரிஆ சட்டம் என்று கூறப்பட்டாலும், அது முழுமையான ஷரிஆ சட்டம் அல்ல என்பதே உண்மை. சவூதி அரேபியாவில் இஸ்லாமிய நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப் படுவதாக மேற்கத்தைய ஊடகங்கள் குறிப்பிட்டாலும், அது உண்மை அல்ல.பரம்பரை அரச ஆட்சி முறை, வீடுகளில் பணிப்பெண்கள், சாரதிகளாக மஹ்ரம் இல்லாத அன்னியவர்கள் அனுமதிக்கப்படுவது போன்றவை இஸ்லாத்திற்கு முரணானவை ஆகும். இஸ்லாமிய ஷரிஆ சட்டத்துடன் நெருக்கமான ஒரு சட்டம் உலகத்தில் சவூதி அரேபியாவில் உள்ளது என்பது சரியாகும். சில தண்டனைகள் இஸ்லாத்தில் கூறப் பட்டுள்ள வடிவில் வழங்கப்பட்டாலும், விசாரணைகள் எந்த அளவு தூரம் முறையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் இடம் பெறுகின்றன என்பது கேள்விக் குறியே.
விசாரணைகளில் முறையற்ற தன்மை
ரிசானாவின் பொறுப்பிலிருந்த குழந்த மரணித்து, ரிசானா விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது, அங்கே மொழிபெயர்ப்பாளராக மலையாளி ஒருவரே இருந்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க நாடுகளின் திறனுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களில் கணிசமான தொகையினர் மலையாளிகள் ஆவர். இவர்கள் வேற்று இனத்தவர்கள்/ நாட்டவர்கள் தொழிலுக்கு வருவதனை தடுப்பதற்காக எதையும் செய்யக் கூடியவர்கள் ஆவார்கள். தமிழுக்கும், மலையாளத்துக்கும் இடையில் மொழி ரீதியாக கணிசமான வேறுபாடுகள் காணப் படுகின்றன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பிரதேச வழக்குத் தமிழைப் பேசக்கூடிய போதிய கல்வியறிவற்ற ஒருவரிடம், மலையாளி ஒருவர் மொழிபெயர்ப்பாளராக இருந்து விசாரணை நடத்தி வாக்குமூலமொன்றை பெறும் பொழுது, அது எவ்வகையிலும் சரியானதாக அமையப் போவதில்லை என்பது தெளிவு. 

ரிசானாவுக்கு எதிரான வழக்கில், தடையவியல் ஆதராங்களோ, பிரேத பரிசோதனை அறிக்கைகளோ, கண்கண்ட சாட்சிகளோ முக்கிய ஆதாரங்களாக முன்வைக்கப் படாமல், தீர்ப்பு வழங்கப்படுவதற்கான பிரதான காரணியாக அமைந்திருந்தது, அவரிடம் இருந்து அரபு - மலையாள மொழிபெயர்ப்பாளரால் பெறப்பட்ட பெறப்பட்ட வாக்குமூலம் ஆகும். இது இஸ்லாமிய மற்றும் சர்வதேச விசாரணை நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது ஆகும்.
அமெரிக்க, ஐரோப்பியர்களுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதில்லை, ஏழை தென்னாசிய நாட்டவர்களுக்கு மட்டுமே மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன
மேற்படி குற்றச் சாட்டு உண்மையானதா என வெளிப்படையாக நோக்கின், ஆம், உண்மையானது என்று தான் கூற வேண்டும். எனினும் இதில் சொல்லப்படாமல் மறைக்கப்பட்ட இன்னொரு விடயமும் உள்ளது. அது, தென்னாசியர்களுக்கு மட்டுமல்ல, சவூதி அரேபிய செல்வந்தர்களுக்கும் கூட எவ்வித தயக்கமும் இன்றி மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்கின்ற உண்மை ஆகும்.

சவூதி அரேபியாவில் எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, சவூதி அரேபியாவிற்கு மேற்கத்தேய நாடுகளின் தொழில் நிபுணர்கள், தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் அத்தியாவசியமாகத் தேவைப்பட்டனர். அப்பொழுது சவூதி அரேபிய அரசுக்கும், அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு அரசுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு, இன்று வரை நடைமுறையில் உள்ள தொழிலாளர் ஒப்பந்தங்களின் படி, அமெரிக்க, ஐரோப்பிய பிரஜைகளை எவ்வித குற்றத்திற்காகவும் சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்களின் கீழ் விசாரிக்கவோ தண்டிக்கவோ முடியாது, குறித்த பிரஜையின் சொந்த நாட்டுச் சட்டத்தின் கீழேயே விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். ஆகவே, அமெரிக்க, ஐரோப்பிய நாட்டவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாவதில்லை என்பது சரியானதே, ஆனால் அதற்கான காரணம், 'பாரபட்சம்' என்பது அல்ல.

இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளும், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளும், ஆபிரிக்க நாடுகளும் தமது நாட்டுத் தொழிலாளர்கள், சவூதி அரேபிய சட்டதிட்டங்களுக்கு அமைய விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுவதற்கு உடன்பட்டே தொழிலாளர் ஒப்பத்தங்களை மேற்கொண்டுள்ளன. சவூதி அரேபியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துத் தண்டனைகளுமே இவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. பொதுவாகவே சவூதி அரேபியாவில் சலுகைகள் காட்டப் படுவதில்லை, அதிலும் கொலைக் குற்றங்களில் உள்நாட்டவர்களுக்கு என்று எவ்வித சல்கைகளும் காட்டப் படுவதே இல்லை, அது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரியே.

* இங்கு மிக முக்கியமான இன்னொரு வடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இலங்கை அரசுக்கும், சவூதி அரேபிய அரசுக்கும் இடையிலான தொழிலாளர் ஒப்பந்தத்தின் படி, இலங்கைப் பிரஜைகள் தொழிலுக்காகச் சென்றால், அங்கே எவ்வித உருவ வழிபாடுகளிலும், சூனியம் மந்திரம் போன்றவற்றிலும் ஈடு பட முடியாது. மேற்சொன்னவை சவூதி அரேபியர்களுக்கு தடை செய்யப் பட்டுள்ளதால், இலங்கைத் தொழிலாளர்களுக்கும் தடை ஆகும்.
குழந்தையின் மரணம் நிகழும் பொழுது ரிசானா 18 வயதை அடைந்திருக்கவில்லை, ஆகவே சிறிய வயதுடையவர் மீது கொலைக் குற்றம் சுமத்த முடியாது
சம்பவம் நிகழும் பொழுது சகோதரி றிசானா 18 வயதை அடைந்திருந்தாரா, அல்லது 17 வயதில் தான் இருந்தாரா என்ற ஆய்வுகள் கூட இடம்பெற்றிருந்ததன. சவூதி அரேபியாவில் நடைமுறையிலுள்ள சட்டம் மற்றும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ஒருவர் பருவ வயதை அடைந்துவிட்டால், அவர் சிறுவர் அல்லது சிறுமியாக கருதப் பட மாட்டார், பெரியவராகவே கருதப்படுவார்.
ரிசானாவை வயது மாற்றிய கடவுச் சீட்டில் அனுப்பிய முகவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்
இது கவலையினதும் உணர்ச்சியினதும் வெளிப்பாடு என்பது சொல்லாமலேயே புரியும். இது போன்ற செயல்கள் சட்ட விரோதமாக இருந்த பொழுதும், இலங்கைப் பிரஜைகளில் அதிகமானவர்கள் இவ்வகையான செயல்களில் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டே இருக்கின்றனர்.


தொழில் பெறுவதற்கான நேர்முகப் பரீட்சைக்குச் செல்வதற்காக, தமக்குத் தெரிந்தவர்களின் நிறுவனங்களில்  இருந்து, செய்யாத தொழிலை செய்ததாக பெறப்படும் அனுபவ/ சிபார்சுக் கடிதங்கள், மூன்று மாதம் செய்த தொழிலை, ஒரு வருடம் செய்ததாக சுய விபரக் கோவையில் தெரிவிப்பது போன்றவை இவ்வகையையே சாரும். ஆகவே, நமது கோபத்தை முகவருக்கு எதிராக மட்டும் திருப்புவது பயனற்றது. ரிசானாவின் குடும்ப வறுமையே பிறந்த திகதி மாற்றி கடவுச்சீட்டு பெறப்படுவதற்கான முக்கிய காரணி ஆகும். (உணர்வுகளை புண்படுத்த விரும்பாததால், இதில் சம்மந்தப்பட்டவர்கள், சம்மதித்தவர்கள் குறித்து மேலும் எழுத விரும்பவில்லை)

கடந்த ஆறு வருட காலமாக, "ரிசானா" என்பது இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் அடிக்கடி இடம்பெற்ற தலைப்பாக, ஊடகங்களின் பக்கங்களை கட்டுரைகள் கொண்டு நிறைத்த விடையதானமாக, அரசியல் வாதிகள், மனித உரிமை ஆர்வலர்களின் வாய்களில் தவழ்ந்த பெயராகக் காணப்பட்ட பொழுதும், நேற்று வெளிவந்த புகைப்படங்களில் உள்ள ரிசானாவின் வீட்டைப் பார்க்கும் பொழுது, அதில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. ஓலைக் கிடுகுகளும், அடுக்கப் பட்ட செங்கல்லுகளும் கொண்ட ஒரு குடிலே இன்னுமும் அவர்களின் வீடு. ஆறு வருடங்களாக பேசிய அளவுக்கு, ரிசானாவின் குடும்பத்திற்கு எவ்வித உதவிகளும் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதை யதார்த்தமாக காண முடிகின்றது.

இத்தோடு ரிசானாவை மறந்து விடாமல், பாதிக்கப் பட்ட குடும்பம் என்ற வகையில் முதலில் உடனடியாக ரிசானாவின் குடும்பத்திற்கும், அடுத்ததாக அதே நிலைமையில் உள்ள ஏனைய வறிய குடும்பங்களுக்கும் நம்மாலான உதவிகளை செய்து, இனியும் ஒரு பெண்பிள்ளை வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக செல்வதனை தடுக்க முயல்வோம்.
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா