எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை' என்று சுவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் தெரிவித்தார்.
ரிசானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு அவர் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
'சரீஆ சட்டப்படி என மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். சரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் அது எத்தகையதாக இருந்தபோதும் நிரந்தரமான மறுமையில் ரிசானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும். அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன்.
உலகெங்கும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் எனது மகளை அவர்களது சொந்த சகோதரியாகக் கருதி 'துஆ' பிரார்த்தனையில் ஈடுபட்டதானது இதனையே மேலும் உறுதிப்படுத்துகின்றது. இதனால் ரிசானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
இதேவேளை ரிசானாவுக்கு மன்னிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் இறுதிவரை முயற்சித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மொத்தத்தில் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹுதஆலா அனைவருக்கும் பேரருள் புரியவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்' என்றார்.
0 comments:
Post a Comment