ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அழுத்தத்திற்கு மத்தியில் சவூதி அரேபியாவில்
7 பேர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவூதியின் தெற்கு நகரான அபாவில் கொள்ளை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேற்படி ஏழு பேர்
மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சம்பவத்தை
நேரில் கண்ட ஒருவர் குறிப்பிட்டார். இதில் பாரம்பரிய முறையான தலை துண்டித்து மரண
தண்டனை நிறைவேற்றப்படாமை விசேட அம்சமாகும்.
கடந்த 2009 ஆம் ஆண்டில் நகைக்கடை ஒன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட
குற்றச்சாட்டுக்காகவே இந்த 7 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் இந்த மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என ஐ.நா.வின் சுயாதீன நிபுணர் குழு
கடந்த செவ்வாய்க்கிழமை நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தது.
இந்த 7 பேர் மீதான குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டது என்றும் இவர்கள் மீது நியாயமான
நீதி விசாரணை நடத்தப்படவில்லை என்றும் மேற்படி நிபுணர் குழு குற்றம்சாட்டியது.
அதேபோன்று கொள்ளைக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டோரில் இருவர் குறித்த காலப்பகுதியில்
பாலிய வயதுடையவர்களாக இருந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம்சாட்டியது.
இவர்கள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப் பட்டே வாக்கு மூலம் பெறப்பட்டதாகவும்
குற்றம்சாட்டப் பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் இந்த ஆண்டுக்குள் மாத்திரம் சுமார்
22 பேர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.







0 comments:
Post a Comment