(அகமட் எஸ்.
முகைடீன்)
கல்முனை மாநகர
எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற வீதி, வடிகான் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
மாநகர சபையின் அனுமதியினைப் பெற்று முன்னெடுக்கப்பட வேண்டும் இல்லையேல் சட்ட
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் மாநகர சபையினால்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர
சபையின் மாதாந்த அமர்வு நேற்று (22.08.2013) மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹிப் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றபோது மேற்குறித்த தீர்மானம் மாநகர
சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில்
முதல்வர் கருத்து தெரிவிக்கையில். கல்முனை மாநகர எல்லைக்குள் அரச மற்றும் அரச
சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றன. இது மக்கள்
நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டம்
என்றவகையில் வரவேற்கதக்க பாராட்டுக்குரிய விடயமாகும். இருந்தபோதிலும் இவ்வாறான
வேலைத்திட்டங்கள் சரியான முறையிலும் சீராகவும் முன்னெடுக்கப்படுவதில்லை என மக்கள்
பல குறைபாடுகளை எமக்கு தெரிவிக்கின்றனர்.
ஏனைய நிறுவனங்களினால்
முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மாநகர சபையின்
அனுமதியை பெறுவதோ, தெரியப்படுத்துவதோ, கலந்தாலோசிப்பதோ இல்லை. இவர்கள் நினைத்த
விதத்தில் நினைத்தவாறு வீதிகளையும் வடிகான்களையும் அமைக்கின்றர். இதனால் மக்கள்
பெரும் அசௌகரிகங்களை எதிர்நோக்குகின்றனர்.
முக்கியமாகவும்,
அவசியமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகளுக்கு முன்னுருமை
அடிப்படையில் வேலைத்திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் செயற்படுத்தப்படுகின்ற
வேலைத்திட்டங்கள் மூலம் அதி உச்ச பயனை மக்கள் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
எனவே மாநகர சபையானது இவை தொடர்பான பட்டியல்ளையும் தெளிவையும் கொண்டிருப்பதனால்
இவ்வாறான செயற்திட்டங்ளுக்கு மாநகர
சபையுடன் கலந்தாலோசித்து நடமுறைப்படுத்துவது சிறப்பானதாக அமையும்.
மாநகர கட்டளைச்
சட்டப்படி மாநகர சபையின் அனுமதி இன்றி எந்த ஒரு வேலைத்திட்டமும் முன்னெடுக்க
முடியாது. அவ்வாறு முன்னெடுக்கப்பட்டுகின்ற வேலைத்திட்டங்களை தடுத்து
நிறுத்துகின்ற அதிகாரம் மாநகர சபைக்கு உண்டு. தற்போது நாங்கள் எடுத்துள்ள
இத்தீர்மானத்தை மாநகர கட்டளைச் சட்டத்தின் துணையோடு எதிர்வரும் காலங்களில்
அமுல்படுத்துவதன் மூலம் ஒரு சிறந்த கல்முனை மாநகரத்தினை வடிவமைக்க முடியும்.
பொதுமக்கள் வீதி
ஓரங்களில் கட்டுமானங்களை மேற் கொள்வதற்கான கல், மண் போன்றவற்றை குவித்து
வைக்கின்றனர். இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டுனர்களும் பாரிய சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர் நோக்குகின்றனர். இவை
தொடர்பிலும் எதிர்காலத்தில் மாநகர சபை கவனம் செலுத்த உள்ளது. இவ்வாறானவர்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் உள்ளோம் என முதல்வர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment