இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/25/2014

இளைஞர் பாராளளுமண்ற உறுப்பினர் பாரிஸின் உரை

(பாரீஸ்)
 கௌரவ சபாநாயகர் அவர்களே!
    2 வது பாராளுமன்றத்தில், 6 வது அமர்வில், இன்று இந்த சபையில் 'சமாதானம், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் - தற்போதைய இளைஞர் தலைமுறை ஊடான சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புக்கள்' என்ற தலைப்பில் உரையாற்றக் கிடைத்தமையிட்டு மிகவும் பெருமைப்படுகின்றேன், மகிழ்ச்சியடைகின்றேன்.

    கடந்த பெப்ரவரி 14ந் திகதி உலகில் அதிகம் மகிழ்ச்சியை அனுபவித்த ஒரு இளைஞர் சமூகம் இருக்குமாக இருந்தால், அது எமது இலங்கை நாட்டு இளைஞர்களாகத்தான் இருக்க முடியும் என்பதை இச் சபையில் பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.
 
   இந்த நாட்டை நேசிக்கின்ற, நாட்டுமக்களை நேசிக்கின்ற, ஒரு தலைவனாக மட்டுமன்றி, இந்த நாட்டின் சக்தி மிக்க இளைஞர் சமுதாயத்தை தனது பிள்ளைகளைப் போன்று நேசிக்கின்ற, பாசம் மிக்க தந்தையாக இருக்கின்ற அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் இளைஞர்களுக்காக 'இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை' ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதுவே எமது மகிழ்ச்சிக்கு முக்கிய காரணியாகும்.

    இதற்காக கடுமையாக உழைத்த இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சர் கௌரவ டளஸ் அழகப் பெரும அவர்களுக்கும், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிக்றேன்.

    நாங்கள் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பே, இந்த மண்ணுக்கு பல்லாயிரம் இளைஞர்கள் விதைகளாக விதைக்கப்பட்டு விட்டனர், என்பது ஒரு சோகமான வரலாறாகும். நான் பிறப்பதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பும், பின்பும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் பல்வேறு பாகங்களிலும் யுத்ததிற்கு இலக்காகி உயிர் நீத்தவர்கள், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெழும்பாக இருக்க வேண்டிய இளைஞர்களே! ஆகும். நான் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற சம்மாந்துறையில், பல்வேறு காரணங்களுக்காக இளைஞர்கள் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொள்ளப்பட்டிருந்தனர். பெற்றோர்களை இளம் வயதிலே தொலைத்த பிள்ளைகள், இன்றும் எனது ஊரில் எதிர்காலத்தை தொலைத்து விட்டு நிற்கும் நிலையை நான் காண்கின்றேன்.

    இளைஞர்கள் தொடர்பில,; எமது நாடு பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயற்படுத்தி வந்துள்ள போதிலும், அவை அத்தனைக்கும் முத்திரையாக, எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்ட தேசிய இளைஞர் கொள்கை காணப்படுகின்றது. இக் கொள்ளை இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டிருந்தால், இன்று எமது இளைஞர்களினால் இந்த நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறியிருக்கும்.

    1983 ஜூலை கலவரத்தில் ஆரம்பித்து, 2009 செப்டம்பர் வரை, எமது நாடு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கொடூர யுத்ததிற்கு பலிகொடுத்திருக்கின்றது. இன்று வரை, இந்த யுத்தம் தொடர்ந்திருந்தால், இன்று என்னோடு இருக்கின்ற உறுப்பினர்களில் பலர் இருந்திருப்போமா என்பது கேள்விக் குறியேயாகும்.

    எம்மை விட எவ்வளவோ செயற்திறன் மிக்க இளைஞர்கள், வடக்கிலும் தெற்கிலுமாக போருக்கு பலியாகியிருக்கின்றனர். இளைஞர் பாராளுமன்றத்தில் மாத்திரமன்றி, தேசிய பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய எத்தனையோ தலைவர்களையும், மேதைகளையும் இந்த நாடு இன்று இழந்திருக்கின்றது.

    இந்த கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், இளைஞர்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி போன்றவற்றுக்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களும், கௌரவ டளஸ் அழகப் பெரும அவர்களும், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா அவர்களும் முன்னெடுக்கின்ற திட்டங்கள், எதிர்காலத்தில் இந்த நாட்டை நிருவகிக்க இளைஞர்களை தயார் செய்யும் ஒரு நேர்மையான வேலைத்திட்டமாகும்.

    இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுகின்ற அனைத்து அம்சங்களையும் துடைத்தெறிந்து, அவர்கள் ஆற்றல,; திறமைகளை வளர்த்தெடுக்கும் திட்டங்களைக் கொண்ட, இத் தேசிய இளைஞர் கொள்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமாக மாறும் நாளை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அதேவேளை தொழில்நுட்ப கல்லூரிகள் விடயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்ற அதேவேளை, இளைஞர்களை தொழில்நுட்ப கல்லூரிகளை நோக்கி கூர்ந்திலுக்கக் கூடிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

    இன்று சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட எத்தனையோ தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக் கழகம் என்ற அந்தஸ்த்துக்கு வளர்ந்துவருகின்ற வேளை, எமது நாட்டின் தொழில் நுட்ப கல்லூரிகள் செயலிழந்து செல்வதை காணக் கூடியதாக உள்ளது. எமது சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரியில் போதிய அடிப்படை வசிதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை தொழில் நுட்ப கல்லுரிகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளையும் தடுத்து நிருத்தப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் அரசை விமர்சிக்கும் சக்திகளுக்கு தீனிகளாக மாறிவருகின்றன.

    எனவே, அரசு, தொழிலற்றோர் படையிலிருந்து இளைஞர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை இன்று மேற் கொண்டு வருவது பாராட்டுக்குரியதாகும். மேலும் தொழில் நுட்ப கல்லூரிகளின் செயற்பாடுகள், தரம் தொடர்பில், மாணவர்களின் கருத்துக்களைக் கேட்கும் பொறிமுறை யொன்று உருவாக்கப்பட வேண்டும். பரீட்சை நடத்துதல், பரீட்சைப்
பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் கால தாமதம், மற்றும் சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் கால தாமதங்கள், முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். சில இடங்களில் காணப்படுகின்ற இவ்வாறான நடவடிக்கைகள் அரச கல்வி நிறுவனங்களை விட்டும் இளைஞர்களை தூர மாக்கி வருகின்றன.
    'சம்மாந்துறை தானியக் களஞ்சியமாக மட்டுமன்றி, கல்விக் களஞ்சியமாகவும் காணப்படுகின்ற ஒரு பிரதேசமாகும்'. இங்குள்ள தொழில் நுட்பக் கல்லூரி தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற வேண்டு கோளை இங்கு முன்வைக்கின்றேன்.
    கடந்த 2009 ஆண்டோடு பாரிய யுத்தம் முடிவடைந்து, இந்த நாடு அபிவிருத்தியில் ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாறிவருகின்றது. அதே வேகத்தில், இந்த நாட்டுக் கெதிரான சக்திகளும் செயற்பட்டு வருகின்றன. அத்தனை சவால்களையும் தானே சுமந்து, நாட்டுமக்களை மகிழ்ச்சிகரமான, வளமான, எதிர்காலத்தை நோக்கி நகர்த்துகின்ற ஒரு தலைவரின் காலப்பகுதியில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகளை வெற்றி கொள்ளும,; முயற்சியை மேற்கொள்ளும் ஒரு இளைஞர் படையணி யொன்று, இந்த சபை உறுப்பினர்களிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் இளைஞர்களுக்கு தலைமை தாங்கும், எமது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை, அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    இந்த நாட்டின் வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி துறைகளில் பெண்களின் பங்கு மிக உயர்ந்த இடத்தில் காணப்படுவது பாராட்டுக்குரியதாகும். பெண்கள் அபிவிருத்தி விடயத்தில், எமது நாடு மிகச் சிறந்த இடத்தில் இருக்கின்றது என்பதை சர்வதேசம் இன்று உணர்ந்துள்ளது. எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டின் மூலம் நாம் அதை மீண்டும் உலகுக்கு உணர்த்தி வைக்க வேண்டும்.
இந்த நாட்டில் நடை பெறுகின்ற சர்வதேச இளைஞர் மாநாட்டையொட்டிய நிகழ்வுகள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், குறிப்பாக எமது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகுதிகளிலுள்ள இளைஞர்களுக்கும், பிராந்திய மட்டத்தில் இந்த பெருமையை அடையும் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான நிகழ்வுகளுக்கு தலைமை தாங்க எமது சம்மாந்துறை மண் தயாராக உள்ளது. எனவே தேசிய இளைஞர் மாநாடு ஒன்று சம்மாந்துறையில் இடம் பெற வேண்டும் என்ற எனது வேண்டு கோளை இச் சபையில் விடுத்து விடை பெறுகின்றேன்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா